என் மலர்tooltip icon

    இந்தியா

    • நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 525 வாகனங்கள் அகற்றம்.
    • 15 நாட்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் 525 வாகனங்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்/மண்டல அலுவலகம்/காவல் நிலையத்தை 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். அவ்வாறு 15 நாட்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • டெல்லி NCR-ல் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவு.
    • இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

    டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாய்கூட தெருக்களில் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் கொண்ட பெஞ்ச் கடந்த திங்கட்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு பல்வேறு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து கவனிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நாளை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேக்தா, என்.வி. அஞ்சாரியா கொண்ட பெஞ்ச் தெருநாய்கள் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

    • வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன.
    • இந்தத் தனித்துவ அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்றார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கியது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு இருந்ததைக் கண்டறிந்து அவற்றை நீக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து பரபரப்பு புகார் தெரிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார்.

    ஆனால் இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது,

    இதற்கிடையே, பீகாரில் ஆர்ஜேடி கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியைச் சேர்ந்த ரமிக்பால் ரே, ஹரேந்திர ரே, லால்முனி தேவி, வச்சியா தேவி, லால்வதி தேவி, பூனம் குமாரி, முன்னா குமார் ஆகியோர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்திருந்தும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்கள் எனக்கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசி உள்ளார் .

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. இந்தத் தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

    • மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
    • இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

    சென்னை:

    மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல்துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம்தான். தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். அவரது முதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

    மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

    இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.

    ஆனால், கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது.

    இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்து பதிவிட்டுள்ளார்.

    கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்ற நிலையில் ஜாஸ் கிரிசில்டாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
    • தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

    பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி தூய்மை பணியாளர்கள், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மேயர் பிரியா போராட்டம் குறித்து கூறியதாவது:-

    * சென்னை ரிப்பன் மாளிகை போராட்டம் நடத்தும் இடம் அல்ல. போராடுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம்.

    * அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசாரிடம் அனுமதி பெற்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

    * பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.

    * கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுவோரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    * 31ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள்

    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • இதன் காரணமாக 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்தையும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • சிக்கமகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும் என்றார் போஜே கவுடா.

    பெங்களூரு:

    கர்நாடக மேல்சபையில் நேற்று சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போஜே கவுடா பேசியதாவது:

    சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும்.

    தடுப்பூசியால் ரேபிஸ் மட்டுமே தடுக்க முடியும். கடிப்பதை தடுக்க முடியாது. நான் கடிக்கும் நாய்கள் பற்றி பேசுகிறேன்.

    நாய்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய உத்தரவை மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.

    பள்ளிக் குழந்தைகள், சாதாரண மக்களை நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    நான் நகராட்சி தலைவராக இருந்தபோது, 2,800 நாய்களுக்கு, இறைச்சியில் மருந்து தெளித்து கொன்றோம். பின், அவை ஒரு தென்னை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டன.

    விலங்குகள் மீது நமக்கும் அக்கறை உண்டு, ஆனால் விலங்கு பிரியர்கள் மற்றொரு அச்சுறுத்தல்.

    நீங்கள் சிறு குழந்தைகளின் துன்பங்களைப் பார்க்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் படிக்கிறீர்கள். இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தேவைப்பட்டால் சிறைக்கும் செல்வோம் என தெரிவித்தார்.

    • அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு EMU ரெயில் இயக்கப்படுகிறது.
    • ஒரு நாளைக்கு 4 முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம்- திருத்தணி இடையே நாளை முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு EMU ரெயில் இயக்கப்படுகிறது.

    காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும். திருத்தணிக்கு 10.40 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

    மதியம் 1 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 13.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். 13.30 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம் சென்றடையும்.

    மதியம் 2.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 15.10 மணிக்கு திருத்தணியை சென்றடையும். 15.20 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு 15.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

    • இத்தாலியில் பிறந்த சோனியா பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது.
    • அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. தற்போது சோனியா காந்தியின் ஓட்டுரிமை குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார் என தெரிவித்தார்.

    அனுராக் தாகூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் 1980-ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்துள்ளார்.

    மேலும், 1980-ம் ஆண்டு முதல் முறையாக சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார். அந்தச் சமயம் சப்தர்ஜங் சாலையில் உள்ள பிரதமர் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தனர். இந்திரா, ராஜிவ், சஞ்சய் மற்றும் மேனகா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 1980-ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, வாக்குச்சாவடி 145ல் வரிசை எண் 388ல் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டது.

    இது முழுக்க முழுக்க தேர்தல் சட்ட விதிமீறலாகும். இந்திய குடிமகன்களால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியுண்டு. அதன்பிறகு 1982-ல் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டு, 1983-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோனியா பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. அவர் 1983-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மட்டுமே இந்திய குடியுரிமை பெற்றார். அதாவது, குடியுரிமை இல்லாத நிலையில், 4 மாதங்களுக்கு முன்பே மீண்டும் வாக்காளர் பட்டியலில் 2-வது முறையாக பெயர் சேர்க்கப்பட்டது.

    ராஜீவை திருமணம் செய்தபிறகு, இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஏன் ஆகியது? இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால் வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.

    • காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வரையிலான சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை.
    • காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள்...

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தலைமைச் செயலகத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 15.08.2025 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    1. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ (RBI) சுரங்கப்பாதை வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும்.

    2. காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ் (NFS) சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம். அதேபோல், அண்ணாசாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கி வரும் வாகனங்கள் மேலே உள்ள அதே பாதையை பயன்படுத்தலாம்.

    3. ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிஸ் கார்னர், என்.எஃப்.எஸ் சாலை, இராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கி சென்று காமராஜர் சாலையை அடையலாம்.

    பாஸ்கள் உள்ள வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்/நிறுத்தங்கள்:

    4. சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 08.30 மணிக்கு முன் சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ்களுடன் வரும் வாகனங்கள், ராஜாஜி சாலையில் சென்று தலைமைச் செயலக நுழைவாயிலின் முன் விருந்தினர் இறங்கிய பின், வாகனமானது தலைமைச் செயலகத்திற்குள் நிறுத்த அனுமதிக்கப்படும்.

    காலை 08.30 மணிக்குப் பிறகு வரும் அழைப்பாளர் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாயிண்ட், இராஜா அண்ணாமலை மன்றம், என்.எஃப்.எஸ் சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு, தலைமைச் செயலக வெளிவாயில் முன் விருந்தினர் இறங்கிய பின், பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.

    5. காமராஜர் சாலையில் வரும் அழைப்பாளர்கள் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட வாகனங்கள் போர் நினைவுச்சின்னம், கொடி மரச்சாலை, வாலாஜா பாயிண்ட், முத்துசாமி சாலை, NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலகத்தின் வெளிப்புற வாயிலை அடைய வேண்டும். அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், NFS சாலை, பாரிஸ் கார்னர் மற்றும் ஆர்.பி.ஐ (RBI) சுரங்கப்பாதை வழியாகச் சென்று தலைமைச் செயலக வெளிவாயிலில் இறங்க வேண்டும். நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட அனைத்து வாகனங்களும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • தூய்மை பணியை தனியாருக்கு கொடுத்ததை எதிர்த்து போராட்டம்.
    • கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது. இந்த நிலையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
    • கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியதாவது:

    தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்ற காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், வழக்கம்போல் கவர்னர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் வி.சி.க. பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    ×