என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கவர்னர் தேநீர் விருந்து: காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் புறக்கணிப்பு
    X

    கவர்னர் தேநீர் விருந்து: காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் புறக்கணிப்பு

    • நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
    • கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியதாவது:

    தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்ற காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், வழக்கம்போல் கவர்னர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் வி.சி.க. பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×