என் மலர்
இந்தியா
- இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையும், சாஸ்திரி நகரில் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் அரை சவரன் நகையும், கிண்டி எம்.ஆர்.சி. மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையும், சைதாப்பேட்டையில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 1 சவரன் நகையும், வேளச்சேரியில் ஒரு பெண்ணிடமும், பள்ளிக்கரணையில் ஒரு பெண்ணிடமும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
காலையில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரே நேரத்தில 7 இடங்களில் நடைபெற்றுள்ள நகை பறிப்பு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,185-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720
23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
21-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,160
20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-03-2025- ஒரு கிராம் ரூ.110
23-03-2025- ஒரு கிராம் ரூ.110
22-03-2025- ஒரு கிராம் ரூ.110
21-03-2025- ஒரு கிராம் ரூ.112
20-03-2025- ஒரு கிராம் ரூ.114
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
- 24,80,45,828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் 14 லட்சம் பள்ளிகளில் சுமார் 61.6 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 28.3 சதவீதம் பள்ளிகளில் இரண்டு மொழிகளும், 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி கற்பிக்கப்பட்டு வருவது மத்திய கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3.2 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட தகவல்களின் படி, "1471891 இந்திய பள்ளிகளில் 61.6 சதவீதம் பள்ளிகளில் 74.7 சதவீத மாணவர்கள் அதாவது 248045828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன."
"மொத்தமாக உள்ள இந்திய பள்ளிகளில் 28.3 சதவீதம் பள்ளிகளில் 16.8 சதவீதம் மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் அருணாசல பிரதேசத்தில் 0.3 சதவீத பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. நாகாலாந்தில் 2.5 சதவீதமும், தமிழ்நாட்டில் 3.2 சதவீதம் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மூன்று மொழிகளில் கற்பிக்கும் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் 97.6 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
- ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
- மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது.
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் இயக்குனருர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன்.
ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார்.
அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. காதல் அப்படிதான்.
என் முதல் புத்தகம் கிறுக்கல்கள். என்னுடைய அடுத்த புத்தகம் வழிநெடுக காதல் பூக்கும். அடிக்கடி ஒவ்வொரு மொமெண்ட்லும் ஒரு காதல் மலரும்.
அப்படி எனக்கு அவர் மீது காதல் மலர்ந்தது. இது தொடரணும். இன்னும் அவர் செய்யும் நிறைய நல்ல விஷயங்களுக்கு நானும் உடந்தையாக கூட இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும்.
- மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ். அவர் மீது அவருடைய மனைவி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
அதில், தானும், கணவரும் அந்தரங்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் ஐகோர்ட்டில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது வக்கீல் வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார்.
அதை ஏற்காத கூடுதல் அரசு வக்கீல், சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார்.
இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார்.
நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர்.
திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
- கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை:
பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டல் வளாகத்தில் உள்ள ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது அவர், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 2022-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது தொடர்பாக கேலி பாடலை பாடினார். 'தில் தோக் பாகல் ஹே' படத்தில் இடம்பெற்று இருந்த பாடலை டப்பிங் செய்து கேலி பாடலை உருவாக்கி இருந்தார்.
அந்த பாடலில் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கத்தார் (துரோகி) என குறிப்பிட்டு இருந்தார். அவரது கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால் கொந்தளித்த சிவசேனா தொண்டர்கள் சுமார் 40 பேர் நேற்று முன்தினம் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்த ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோ அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்தனர்.

இதேபோல துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரிஹன் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஹபிடட் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை நேற்று இடித்துத் தள்ளினர். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. எனினும், இரண்டு ஓட்டல்களுக்கு நடுவே உள்ள இடத்தை ஆக்கிரமித்து இந்த ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஹபிடட் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், "குணால் கம்ரா விவகாரத்தால் ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலைஞர்களின் கருத்துக்கு அவர்கள்தான் முழு பொறுப்பு. இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் ஸ்டுடியோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், கம்ராவின் கருத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் புயலை கிளப்பியது. காமெடியன் குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் சென்று போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபை நிகழ்வுகள் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை?
- உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என, பாராளுமன்றத்தில், மத்திய அரசு அளித்துள்ளதாக" தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசில் 15 ஆண்டுகள் தி.மு.க. அங்கம் வகித்தபோதும் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தன.
அப்போது, தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை? அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி இதை கேட்டிருக்கலாமே? மத்திய அமைச்சர் பதவிக்காக, பசையான துறைகளுக்காக சோனியா காந்தியிடம் சண்டை போட்ட தி.மு.க., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க சண்டை போட்டிருக்கலாமே?
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறும் கனிமொழி, இந்தப் பள்ளிகளில் எப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்? தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர்? என்பதையும் சொல்ல வேண்டும்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா?
2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு அமையும் முன்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. மோடி அவர்கள் பிரதமரான பிறகுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான். இந்த உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி.
புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும். அப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆவடியில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுகிறது.
- சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 1, மாலை 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதேதேதிகளில் காலை 12.35, மதியம் 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்துசெய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.40, 2.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதேதிகளில் மதியம் 2.30, மாலை 3.15, 4.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதேதேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் பயணிகள் ரெயில் ரத்துசெய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித போர்வை எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் கலவரம் வெடித்தது. குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 29-ந் தேதி சத்ரபதி சம்பாஜியின் நினைவுநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி மராட்டிய புத்தாண்டான 'குடிபட்வா' விழாவும், 31-ந் தேதி ரம்ஜான் மற்றும் ஜூலேலால் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 6-ந் தேதி ராம நவமி போன்ற விழாக்களும் வருகிறது.
மேற்கண்ட நாட்களில் இந்து அமைப்புகள் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே சத்ரபதி சம்பாஜிநகரில் அசம்பாவிதத்தை தவிர்க்கவும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
- 2 இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு நித்யானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
- ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான 2 நிலங்கள் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாம். இந்த 2 இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு நித்யானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நித்யானந்தா மீது எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, அந்த தான பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி தானமாக வழங்கிய நபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை இரு தரப்பை சேர்ந்தவர்களும் பயன்படுத்தக்கூடாது என ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சீலை உடைத்து ஆசிரமத்திற்குள் சீடர்கள் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் அளித்த புகாரின் பேரில் சீடர்கள் உதயகுமார், தீபா, பிரேமா, தாமரைச்செல்வி, ரேவதி, நித்திய சாரானந்தசாமி, நித்திய சுத்த ஆத்மானந்தா சாமி ஆகிய 7 பேர் மீது ராஜபாளையம் தெற்கு மற்றும் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






