என் மலர்
இந்தியா
- தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
- ‘எம்புரான்’ திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
கம்பம்:
மலையாள நடிகர் மோகன்லால், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏற்கனவே இப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் 17 இடங்களில் வந்த படக்காட்சிகளை துண்டித்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக காட்சிகளை வெட்டிய படக்குழு தமிழக விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது 'எம்புரான்' திரைப்படத்தை தமிழகத்தில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த படத்தின் வினியோக உரிமை பெற்றுள்ள கோபுரம் சினிமாஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறி அந்த அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
- வாக்கெடுப்புக்காக கட்டாயம் அவைக்கு வரவேண்டும் என்று தத்தமது கட்சி எம்.பிக்களுக்கு கட்டளையிட்டுள்ளது.
- வக்பு திருத்த மசோதாவின் பின்விளைவுகள் குறித்து காங்கிரஸ் என்டிஏ கூட்டணி எம்பிக்களை எச்சரித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீதான 8 மணிநேர விவாதம் நடைபெறுகிறது. அதன்பின் நடக்கும் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படும்.
மசோதாவை நிறைவியேற்ற தீவிரம் காட்டும் பாஜகவும், எதிர்க்கும் காங்கிரசும் வாக்கெடுப்புக்காக கட்டாயம் அவைக்கு வரவேண்டும் என்று தத்தமது கட்சி எம்.பிக்களுக்கு கட்டளையிட்டுள்ளது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரே மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்படும்.
மக்களவையில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கே பெரும்பான்மை இருக்கிறது. பாஜகவுக்கு 240 எம்.பிக்களும், அதன் என்டிஏ கூட்டணி கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 16 எம்பிக்களும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 12 எம்பிக்களும் உள்ளனர். இதர கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து பாஜகவின் என்டிஏ கூட்டணி 295 வாக்குகளை வைத்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி 234 வாக்குகளை வைத்துள்ளது.
ஆனால் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு ஆகியவை சிறுபான்மையினரிடையே கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே வக்பு திருத்த மசோதாவின் பின்விளைவுகள் குறித்து காங்கிரஸ் என்டிஏ கூட்டணி எம்பிக்களை எச்சரித்துள்ளது.
எனவே அவர்கள் கூட்டணி தர்மத்தின்படி மசோதாவுக்கு ஆதரவளிப்பார்களா அல்லது எதிராக வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எதிர்வரும் பீகார் தேர்தல் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மீது இந்த விவகாரத்தில் அழுத்தம் செலுத்தலாம். ஏற்கனவே நிதிஷ் குமார் அளித்த இப்தார் விருந்தை முஸ்லீம் அமைப்புகள், வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
- கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- செல்வம், பிரபு ஆகியோர் கடந்த 3 மாத்துக்கு முன் மும்பை தாஜ் ஓட்டலில் அரபு நாட்டை சேர்ந்த சிலரை சந்தித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று முன்தினம் அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி,2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறுப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ஆவட்டி கூட்டு ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் அரவிந்த் (30), அஜித் (24) மா.புடையூர் வடிவேல் (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் சக்திவேல் (26) என்பது தெரிய வந்தது.
இவர்கள் செல்வத்தின் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தோட்டத்து வயலில் விஸ்தாரமான அறையின் ஒரு பகுதியை தடுத்து மற்றொரு அறையை உருவாக்கி அதில் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வந்துள்ளது.
மாதத்திற்கு 2 நாட்கள் இரவில் மட்டும் அச்சடித்து விட்டு மற்ற நாட்களில் அறையை பூட்டி வைத்துள்ளனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வருகிறது.
கள்ள நோட்டு அச்சடித்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வத்தின் நண்பர் ஆவட்டியை சேர்ந்த பிரபு கடந்த 2022-ல் தனது முகநூலில் ஆவட்டி டான் பிரபு என்ற பெயரில் ஆர்.பி.ஐ. ஆபீசர் போன்று போலி சான்றிதழை பதிவிட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கி, வாக்கி டாக்கியுடன் போட்டோ வெளியிட்டுள்ளார். செல்வம், பிரபு ஆகியோர் கடந்த 3 மாத்துக்கு முன் மும்பை தாஜ் ஓட்டலில் அரபு நாட்டை சேர்ந்த சிலரை சந்தித்துள்ளனர். மேலும் முக்கிய புள்ளிகளையும், அவர்களது நெருங்கிய உறவினர்களையும் சந்தித்துள்ளனர்.
ஸ்டார் ஓட்டலில் தங்குவது, சாப்பிடுவது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செல்வம் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டு அச்சடித்த செல்வத்தின் கொட்டகை வீடு பூட்டுபோடப்பட்டு போலீசார் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
- அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது.
- 1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது.
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது.
1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது என குறிப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயத்தைச் சுற்றியுள்ள பிரச்சனை குறித்த எங்கள் குறிப்பாணையை வழங்க, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்டுள்ளேன். இது சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களைத் தொடர்ந்து நடக்கிறது.
முன்னர் குறிப்பிட்டது போல, எங்கள் மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
- 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
- 3 மோட்டார் சைக்கிள் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர்.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனம் செல்வதற்கு அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து தினந்தோறும் 24 மணி நேரமும் ஏராளமான லாரி, பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆலஞ்சேரியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தார் .
நள்ளிரவு நேரத்தில் தூக்கம் வந்ததால் கடலூர் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
தூக்கத்தில் இருந்த மணிமாறனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கும்பல் செல்போன், பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என மணிமாறனை மிரட்டினர். அப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறிய போது திடீரென்று சரமாரியாக மணிமாறன் தலை மற்றும் உடலில் மர்ம நபர்கள் வெட்டினார்கள். இதில் மணிமாறன் அலறி துடித்து கத்திக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வாகனங்கள் வந்தவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.
பின்னர் மற்ற வாகனத்தில் இருந்தவர்கள் மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ஒதவந்தான்குடியை சேர்ந்தவர் பிரபு (வயது 45). நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து சீர்காழிக்கு எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது பெரியப்பட்டு பகுதியில் அவரும் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் லாரிக்குள் ஏறி பிரபுவிடம் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு இறங்கியபோது சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக எழுந்து பார்த்தபோது அவசர அவசரமாக இறங்கி சாலையில் ஓடும்போது அவ்வழியாக வந்த மற்றொரு லாரி டிரைவர் இவர்களை பார்த்து லாரி மூலம் துரத்தினர்.
அப்போது அதிலிருந்து ஒரு வாலிபர் தன்னிடம் இருந்து கத்தியை எடுத்து வெட்ட மீண்டும் வந்தபோது லாரி டிரைவர் விரட்டியதால் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். ஆனால் இவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பிரபு அவசர அவசரமாக அங்கிருந்து லாரி மூலம் தனது சொந்த ஊருக்கு சென்றார்.
கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் காளிமுத்து(50). இவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போன், 100 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டிருந்தபோது அதிலிருந்து ஒரு வாலிபர் சரமாரியாக காளிமுத்து தலை மற்றும் உடலில் வெட்டினார்.
இதில் மயக்கம் அடைந்த காளிமுத்து சாலையில் விழுந்தார். அப்போது ஒரு வாலிபர் சதீஷ் என்ற பெயரை அழைத்து இவரை விடக்கூடாது என கூறிய நிலையில் அவ்வழியாக வந்த வாகனங்களை பார்த்து அங்கிருந்து தப்பித்து சென்றனர். 3 பேரையும் கத்தியால் வெட்டிய கும்பல் கடும் போதையில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மணிமாறன் மற்றும் காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் ஒரே இரவில் போதை ஆசாமிகள் டிரைவர்களை சரமாரியாக வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலை புதிதாக அமைக்கப்பட்டு தற்போது ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் மாலை முதல் காலை வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு போதை கும்பலை பிடித்து திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலையில் லாரி டிரைவர்களை வெட்டி பணம் பறித்த சம்பவத்தால் மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
- தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
- கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
இ.பி.எஸ்.க்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக இல்லை.
* தேர்தலை பார்த்து பயப்படும் கட்சியும் திமுக இல்லை.
* கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றது போன்று எதுவும் தெரியவில்லை.
* இந்தியா- இலங்கை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு பிரிக்கப்பட்டது.
* எங்களை சொல்லும் அதிமுக, அவர்கள் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு இருக்கலாம்.
* கச்சத்தீவு குறித்து திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
- பிரியாணி கடையில் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
- கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரியாணி கடையில் ஷவர்மா சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு பின்னர் உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும் தலையிடவில்லை.
- 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்பதை இரு அவைகளின் கூட்டுக் குழுவிலும் கூற விரும்புகிறேன். கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... இதுவரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் குழுவின் முன் முன்வைத்துள்ளனர். 25 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்களும் தங்கள் சமர்ப்பிப்புகளை முன்வைத்துள்ளன.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைவரும் இந்த மசோதாவை ஆதரிப்பார்கள்.
நாடாளுமன்ற கட்டிடம் உட்பட பல இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று டெல்லி வக்ஃப் வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இன்று இந்த சட்ட திருத்தத்தை நாம் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், நாம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கூட வக்பு சொத்து என்று உரிமை கோரப்பட்டிருக்கும்.
2013 ஆம் ஆண்டில், சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிகள் ஆகியோர் வக்பு போர்டில் இருக்க அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.
2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இருந்த 123 பிரதான சொத்துக்களை காங்கிரஸ் அரசாங்கம் டெல்லி வக்பு வாரியத்திற்கு அதற்காக மாற்றியது? இது தேர்தலில் வெற்றி பெற உதவும் என நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் தோல்வி தான் உங்களுக்கு கிடைத்தது.
வக்பு சட்டத்திருத்த மசோதா எந்த மத அமைப்பிலும், எந்த மத நிறுவனத்திலும், எந்த மத நடைமுறையிலும் எந்த வகையிலும் தலையிடவில்லை.
இந்த மசோதாவில் சில முரண்பாடுகள் இருந்தன, எனவே அதைத் திருத்துவது அவசியம். எந்தவொரு இந்தியரும் வக்பு போர்டை உருவாக்க முடியும் என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன், ஆனால் 1995 இல் அப்படி இல்லை. 2013 இல், நீங்கள் அதில் மாற்றங்களைச் செய்தீர்கள், இப்போது 1995 ஆம் ஆண்டின் விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளோம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றிய ஒருவர் மட்டுமே வக்பு போர்டை உருவாக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம்" என்று தெரிவித்தார்.
- பொதுமக்கள் பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
ஆந்திர மாநிலம் பல் நாடு மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்தவர் 2 வயது சிறுமி. இவருக்கு கடந்த மாதம் 4-ந்தேதி காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கில் இருந்து நீர் வடிதல், வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு வந்தது.
சிறுமியை அவர்களது பெற்றோர் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையின் போது தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். சிறுமியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் 24-ந்தேதி புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி எச்பி5என்1 பறவை காய்ச்சல் நோயால் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமி இறந்த ஊருக்கு சென்று விசாரணை நடத்தினர் .
அப்போது சிறுமி செல்ல பிராணிகள் மற்றும் தெரு நாய்களுடன் விளையாடியது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு காய்ச்சல் வருவதற்கு 2 நாள் முன்பாக கோழி கறிக்கடையில் வேக வைக்காத கோழிக்கறி துண்டு சாப்பிட்டதாக கூறினார்.
இதன் காரணமாக சிறுமிக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்கள் பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உஷாராக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட கறிகளை சாப்பிடக்கூடாது.
கோழி கறிகளை 100 டிகிரி செல்சியசில் வேக வைத்து சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
- இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வும் எழுதியுள்ளனர். திடீரென சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால் மாணவர்கள் பாடம் கற்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ஆங்கிலப் புலமை இல்லாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மிஷன் இங்கிலிஷ்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் ரூ.22 லட்சம் செலவில் பெங்களூருவில் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புத்தகம் வழங்குவதோடு மட்டுமன்றி தினசரி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடவேளை இந்த 'மிஷன் இங்கிலிஷ்' புத்தகத்தை நடத்தவும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
4-ந்தேதி கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும், 5-ந்தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதியவேளையில் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக்கூடும்.






