
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
ஒரு உணவு 100 கலோரிகளை அளித்து, அதில் 3 கிராம் அல்லது அதற்கும் குறைவான கொழுப்பு இருந்தால், அது குறைந்த கொழுப்புள்ள உணவாகும் என்பது பொதுவான விதி. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், முட்டையின் வெள்ளைக்கரு, தோல் நீக்கிய கோழிக்கறி மற்றும் வான்கோழி இறைச்சி, பீன்ஸ், பருப்பு, பட்டாணி, கடல் உணவுகள் மற்றும் கொழுப்பு நீக்கிய பால் போன்றவை குறைந்த கொழுப்புள்ள உணவுகளாகும்.
ஆரோக்கியத்துக்கு கொழுப்புச்சத்து அவசியமானது; அதே சமயம் அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். பாலி அன்சாச்சுரேட்டட், மோனோ சாச்சுரேட்டட், டிரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் என உணவில் நான்கு வகைக் கொழுப்புகள் காணப்படுகின்றன. இந்த வெவ்வேறு வகையான கொழுப்புகள் ஒவ்வொரு கிராமுக்கும் ஒன்பது கலோரிகளை வழங்குகின்றன. இது ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது புரதங்களுக்கு வழங்கப்படும் ஆற்றலின் அளவை விட அதிகமாகும்.
நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதங்களை (எல்.டி.எல்) உயர்த்துவதுடன், ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகின்றன. அதேசமயம் எல்.டி.எல்-ஐக் குறைக்கும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நன்மை பயக்கும் என்று கருதப்படுகின்றன.
குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, நம் உடலின் தேவைக்கும் அதிகமான அளவு கொழுப்பு பெறுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம், உடலில் ஆங்காங்கே கொழுப்பு படிவது குறையும். இதன் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், உடல் பருமனால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி, குழந்தையின்மை, இதய நோய் மற்றும் பல வாழ்வியல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் குறைந்த கொழுப்பு உணவு முறை உதவும்.