search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் கடினமான கேள்விக்கு பதிலளியுங்கள்
    X

    குழந்தைகளின் கடினமான கேள்விக்கு பதிலளியுங்கள்

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    குழந்தைகள் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு பெற்றோரிடமும், பெரியவர்களிடமும் பதில்கள் இருக்காது. அதை சமாளிப்பதற்காக பலர் குழந்தைகளை கேள்வி கேட்க விடாமல் அடக்கி விடுவார்கள்.

    இது தவறான அணுகுமுறை என்று உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தயக்கம் இல்லாமல் கேள்விகள் கேட்டு, தங்களது ஆளுமைப் பண்பை வளர்த்துக் கொள்வார்கள். பெற்றோர் பதில் அளிக்கத் தயங்கும் சில கேள்விகளை குழந்தைகள் கேட்கும்போது, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பிறப்பு மற்றும் இறப்பு: குழந்தைகள் அடிக்கடி பெற்றோரிடம் கேட்பது, "நான் எப்படி பிறந்தேன்? அல்லது ஒருவர் இறந்தால் என்ன நடக்கும்?" என்பதுதான். இந்த கேள்விகளை பல பெற்றோர்கள் தவிர்க்க நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய வாழ்வியல் விஷயங்களில் இதுவும் ஒன்று. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கருத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும். பிறப்பும், இறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மற்றும் அடிப்படை வாழ்க்கை சுழற்சி என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

    உடற்கூறியல்: அறிமுகமானவர்கள் மற்றும் பிற பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் உயரம், எடை, நிறம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விகளை குழந்தைகள் அடிக்கடி கேட்பார்கள். இதற்கு விளக்கப் படங்கள், கதைகள் மற்றும் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற திரைப்படங்களைப் பயன்படுத்தி, பாலினம் பற்றிய கருத்தை எளிமையாகவும், அறிவியல் ரீதியாகவும் தெரிவிக்கலாம். இந்த வகையில், குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    மதம்: குழந்தைகளுக்கு அதிக சந்தேகம் எழும் விஷயம் கடவுள், மதம், சம்பிரதாயங்கள் பற்றியதுதான். இது சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பல பெற்றோருக்கு சவாலானதாக இருக்கும். இந்தியா போன்ற பன்முக கலாசாரம் கொண்ட நாட்டில், குழந்தைகளுக்கு பல்வேறு மத பின்னணியைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை சமமாக பாவிக்கும் வகையில், கதை சொல்லி புரியவைக்கலாம். அடிப்படை மத நூல்கள் மூலம் ஒவ்வொரு மதத்தின் தனித்துவத்தைப் பற்றி பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். இருப்பினும், இதில் 'மனிதநேயம்' என்பதைத்தான் முதலில் போதிக்க வேண்டும். குழந்தைகள் அனைவரையும் சமமாகவும், அன்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை கற்பிப்பது அவசியம்.

    நிதி: வளர்ச்சியின் ஆரம்பத்தில், குழந்தைகள் பல்வேறு சமூகப் பின்னணியில் உள்ள நபர்களைச் சந்திக்கின்றனர். சாலையில் யாசகம் கேட்கும் நபர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, பலவிதமான பொருளாதார சூழலில் வாழும் நபர்களை பார்க்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்கும்போது, யாரையும் ஏற்றத்தாழ்வுடன் அணுகாமல், சமநிலை நோக்குடன் அணுகச் செய்யும் வகையில், பதில் அளிக்க வேண்டும்.

    Next Story
    ×