என் மலர்
செய்திகள்
நாகர்கோவில்:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தேர்தல் வெற்றிக்காக ஸ்ரீரெங்கம் கோவிலில் சுக்கிரயாகம் நடத்தியதாக தகவல்கள் பரவியது.
இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ரெங்க நாதருக்கு சாத்தப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, ரெங்கநாயகி அம்மையாருக்கான பிரசாதம், மு.க. ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்டுள்ளது. இதை மு.க. ஸ்டாலின் அழித்திருக்கிறார். இது மிகவும் வருந்தத்தக்க செயல்.
நெற்றியில் இடப்பட்ட மத அடையாளத்தை ஸ்டாலின் அழித்ததை ஏற்க முடியாது. இது தெய்வதிற்கு இழைக்கப்பட்ட அவமானம். இதற்காக மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
நெற்றியில் இடப்பட்ட அடையாளத்தை ஸ்டாலின் அழித்தபோது அதை பார்த்த பூசாரிகள், பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? யாரை நம்ப வைக்க அவர், இந்த வேடம் போடுகிறார்.
மு.க.ஸ்டாலின் மத அடையாளத்தை அழித்ததால் இனி அவரை எந்த கோவிலுக்குள்ளும் அனுமதிக்கக்கூடாது. இதற்கான பட்டியலில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டும்.
மேலும் ஸ்டாலினை கோவிலுக்குள் அனுமதிக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் கூட குன்றக்குடி அடிகளார் திருநீறு அணிவித்தபோது அதை அழிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லையென்று பகிரங்கமாக கூறியவர் கூட இதுபோன்ற செயலை செய்யவில்லை.

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஸ்டாலின் செய்த தவறுக்காக அங்குள்ள சாமிக்கு பரிகார பூஜை செய்ய வேண்டும். இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். ஆகம விதிகள் மீறப்பட்டதா? என்பதையும் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin
தேனி:
தேனி பங்களாமேடு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியால் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பயங்கரவாதிகள நடமாட்டம் இருப்பதை அவர் நிரூபிக்கட்டும். தமிழகத்தில் சமூகவிரோத சக்திகள் வேண்டுமானால் இருக்கலாம். பயங்கரவாதிகள் இல்லை.
மத்தியில் ஆளும் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித அடிப்படை வசதி கூட கிடையாது. ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தமிழகத்தில் சிறு குக்கிராமங்களில் கூட சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மாநிலங்களில் எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது. தமிழகத்தில் கவர்னர், பிரதமருக்கு கூட கருப்பு கொடி காட்டுகிறார்கள். இது போன்ற செயல்களால் எந்த பயனும் இல்லை.

மோடி சிறந்த பிரதமராக இல்லை. அவர் ஆட்சிக்கு அப்பாற்பட்டு, கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் உரிமையை நிலை நாட்டவில்லை. அந்த வகையில் தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்காதவர் பிரதமரே அல்ல.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை நாம் பெற்றுள்ளோம். இதனை வைத்து சிலர் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு நாங்கள் அடிமை, எடுபிடி என கூறுவது தவறு.
ஏனென்றால் தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அ.தி.மு.க. மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களின் தேவைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை அல்ல. பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.

தினகரனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் குடும்பத்தினர் ஜெயலலிதாவை ஏமாற்றிய கூட்டம். அவரது இறப்புக்கு காரணமான கூட்டம்தான் தினகரன்.
ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தபோது அவருடைய அலவலகத்துக்கு வரும் போதெல்லாம் அவருக்கு தெரியாமல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அந்த தோற்றத்தில் எங்களையும் சிக்க வைத்து தொடர்ந்து தன்னை ஒரு அரசியாக நினைத்து ஆட்சி செய்தவர் சசிகலா. அவர் கட்சியையும் ஆட்சியையும அழிக்க நினைத்ததால்தான் சிறையில் உள்ளார். அது போல் தினகரனும் நினைத்தால் அவரும் சிறைக்குதான் செல்வார்.
இவ்வாறு அவர் பேசினார். #KPMunusamy #ADMK
கரூர்:
கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக கவர்னருக்கு தனது அதிகாரம், ஆளுமை என்ன என்பது தெரியும். அந்த வகையில் தான் அவரது செயல்பாடு இருக்கிறது. ஒருவேளை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அது மாநில அரசு தான் செய்ய வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் தலையீடு இருக்கிறதா? என முதல்-அமைச்சர் உள்ளிடோர் தான் கூற வேண்டும். இதைவிடுத்து ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. இதில் காழ்ப்புணர்ச்சி தான் இருக்கிறது.
கவர்னர் நடவடிக்கையால் தமிழகத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. மாறாக ரூ.1½ கோடியாக இருந்த கவர்னர் மாளிகையின் செலவை அவர் ரூ.30 லட்சமாக குறைத்திருக்கிறார். மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது என நினைப்பதிலேயே அவரது சேவை மனப்பாங்கு தெரிகிறது.

சேலம்-சென்னை பசுமைவழி சாலை திட்டத்திற்கு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை கொடுக்கின்றனர். எனவே இழப்பீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எந்த விதத்திலும் விவசாயிகளும், பெண்களும் கைது செய்யப்படக்கூடாது என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலுக்கு வந்ததையும், கோவிலுக்குள் சென்று தரிசிக்காததையும் கேட்கிறீர்கள். இது அவரவர் கொள்கை. எனவே விமர்சிக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் இன்று கடவுளை நம்பி தான் ஆக வேண்டும். கோவிலுக்கு வந்து தான் ஆக வேண்டும். குமாரசாமி ரெங்கநாதரை தரிசனம் செய்ததால் கர்நாடக முதல்-அமைச்சர் ஆகிவிட்டார். அதனால் நாம் மக்களை நம்பினோம் முடியவில்லை. எம்.எல்.ஏ.க்களை நம்பினோம் முடியவில்லை.
ரெங்கநாதரை நம்பினால் குமாரசாமிக்கு கொடுத்த அதே அருளை நமக்கும் கொடுப்பாரோ? என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். இந்துமத கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #MKStalin
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது:-
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி மிரட்டலுக்கு பயந்து முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்க தவறிவிட்டார். அப்போது முதல் கர்நாடகா அரசு தண்ணீரை தர மறுத்து விட்டது.
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழி காட்டுதலின்படி முதல்- அமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கை நேர் திசையில் எடுத்துச் சென்று சட்டப் போராட்டங்களை நடத்தி 177 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் காவிரி நீருக்காக பாராளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கினோம். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்தோம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் இந்த ஆட்சியை கலைக்கலாம் என்ற நோக்கத்தில் சதிகார வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

செயலற்ற தலைவராக விளங்கி வரும் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் அந்த மக்களை எல்லாம் தூண்டி விட்டு அதில் பல்வேறு விதமான சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை போர்க்களமாக மாற்றி விட்டனர்.
18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் மூலமாக கடத்தி சென்று அவர்களுக்கு தலா ரூ.10 கோடி வீதம் 180 கோடி ரூபாயை டி.டி.வி.தினகரன் வழியாக மு.க.ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார்.
ஆசை காட்டி மோசம் செய்து இன்றைக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதற்கு கருவியாக விளங்கியவர் டி.டி. வி.தினகரன். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வெகு விரைவில் தீர்ப்பு வரும். இடைத்தேர்தல் வரும்.
இதுவரை நடந்த 110 அரசு விழாக்களில் ஒரே ஒரு விழாவில் மட்டும் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டுள்ளார். திருவாடானை தொகுதியில் மக்கள் குறைகளை நாங்கள் போக்கி வருகிறோம். அந்த தொகுதி மக்கள் புலம்புகின்றனர். தொகுதிக்குள் செல்வதற்கு பயமாக இருந்தால் நான் கூட்டிச் செல்கிறேன் தகுதி இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்.
மு.க.ஸ்டாலின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்து அறிவுரை வழங்குவதாகவும், அதன்படி செயல்படுவதாகவும் தெரிகிறது.
மு.க.ஸ்டாலினுக்கும். துரைமுருகனுக்கும் அதிகாரப்போட்டி நடக்கிறது. தடை செய்யப்பட்ட குட்காவை சட்ட சபைக்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் நிலை பரிதாபமாக உள்ளது. காலம், நேரம் கருதி சரியான நேரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை இருக்கும்.
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு தடைபோடும் வகையில் தி.மு.க. விவசாயிகளை தூண்டி விடுகிறது. மிகப் பெரிய சாலைகளை போட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம். அப்போது தான் தொழில் வளர்ச்சிகள் பெருகும். மத்திய அரசு தரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #MKStalin

மதுரை:
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழகத்தில் மறைந்த முதல் அமைச்சர் அம்மா அனைவருக்கும் விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். அவரது வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார்கள்.
காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதை தடுக்கவே ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். தற்போது மதுரையில் தென்மண்டல மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. இது இந்த அரசு செய்த சாதணை இல்லையா? ஆனால் எப்படியாவது இந்த அரசை வீழ்த்த வேண்டும் என்று சிலர் நினைத்து மக்களை துண்டி விடுகிறார்கள். அது எடுபடாது. அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைத்தவர்கள் வாய்மூடி மவுனியாகி விட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வுக்கு தலைவராக கூட முடிய வில்லை. தி.மு.க. ஆட்சியில் மதுரை பக்கம் தலைகாட்டாத நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் குமரியில் இருந்து சென்னை வரை நடைபயணம் செய்தார்.
அவரது நாடகத்தை மக்கள் ஏற்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது. கருணாநிதி அவதாரம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

எனவே இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். எனவே மக்கள் அனைவரும் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவைராஜா, பிரிட்டோ, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், வட்ட செயலாளர் கே.வி.கே.கண்ணன், வக்கீல்கள் முருகன், ராஜசேகரன், லாரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் ரமணி, ஏ.பி.பாலசுப்பிரமணி, புதூர் அபுதாகீர், சோலைராஜா, கறிக்கடை முத்துகிருஷ்ணன், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #karunanidhi #admk
மதுரை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்திகூட அறவழியில் போராட்டம் நடத்தியவர்தான்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரகேடு காரணமாக போராட்டம் ஏற்பட்டது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?
தமிழக அரசு காவல் துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. மத்திய அரசு, தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல தமிழக அரசை காப்பாற்றி வருகிறது.
எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.
இரண்டு மந்திரிகள் உள்பட எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களிடம் வருவதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தியாகும். இதற்கு நான் பொறுப்பல்ல.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேசவேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குள் ஏன் இந்த அவசரம்?
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?
குட்கா விஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
தமிழக சட்டசபையில் அம்மாவின் படத்தை முனிசிபாலிட்டியில் திறந்து வைத்தது போன்று திறந்து வைத்தனர். இது அம்மாவை இழிவுபடுத்துவது போன்றதாகும். எனவேதான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் நான் (தினகரன்) தோற்று விடுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார். அது நடந்துவிட்டதா என்ன?

விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழக அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரை கீரைத்துறையில் கொலையுண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்ட செயலாளர் முனியசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தார். நீதிபதி சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பு கூறினார். இதனால் 3-வது நீதிபதி விமலா விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.
இதுபற்றி தங்க தமிழ் செல்வன் கூறியதாவது:-
நான் நீதிபதிகளின் தீர்ப்பை மதிப்பவன். ஆனால் எங்கள் வழக்கில் எந்த காலக்கெடுவும் சொல்லாமல் தீர்ப்பு கூறியதால் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
3-வது நீதிபதியை நியமித்து 10 நாளில் வழக்கை முடிக்குமாறு கூறி இருந்தால் மதித்திருப்பேன். எங்களுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். அதை ஏன் சொல்லவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.
நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறோமா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள 9 மாதம் காத்து இருந்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு தெளிவாக விடை கிடைக்கவில்லை.
அதன்படி நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அங்கும் மாத கணக்கில் வழக்கு நடந்தால் என்ன பிரயோஜனம்? எங்கள் பதவி காலமே முடிந்து விடும்.
அதனால்தான் வழக்கை வாபஸ் பெறப்போவதாக கூறி இருந்தேன். ஆனால் இப்போது அதுவும் முடியுமா? முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியிடம் மனு கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனுவை ஏற்க மறுத்தால் யாரை அணுகுவது என்ற நிலை ஏற்படும்.
அப்படியே மனு ஏற்கப்பட்டாலும் உடனே இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விடுவார்கள்.
அப்படியே தேர்தல் நடந்தாலும் நான் இடைத்தேர்தலில் நிற்க முடியுமா? முடியாதா? என்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.
தேர்தலில் நின்றாலும் தேர்தல் அதிகாரி மூலம் எனது மனுவை நிராகரிக்க செய்து விடுவார்கள்.
இந்த அளவுக்கு எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்க சட்டத்தில் இடம் உள்ளதால் யோசிக்க வேண்டி உள்ளது.
சட்ட நிபுணர்களும் 3 விதமான கருத்தை கூறி உள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
அடுத்த வாரம் பெங்களூர் செல்கிறேன். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டு இருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல உதான் திட்டத்தின் கீழ் தொழில் நகரமான ஓசூரிலும் விமான சேவை அமைக்க வேண்டும். இதேபோல் நெய்வேலி விமான நிலையத்திலும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரிசி உற்பத்தியில் தமிழ் நாடு அரசு முரண்பாடான தகவல்களை வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி தொடர்பாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2013-14ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகவும், 2014-15ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பான மே 2018 கையேட்டு குறிப்பில், தமிழ்நாட்டில் 2013-14ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள், 2014-15ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள் என குறிப்பிட்டுள்ளது.
புதிய அணுகுமுறை அமலுக்கு வந்தபின்னர், 2013-14ம் ஆண்டிலிருந்து தான் மாநில அரசின் கணக்கீட்டுக்கும், மத்திய அரசின் கணக்கீட்டிற்கும், மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த மாறுபாடு கூட, 2013-14ம் ஆண்டிலும், 2014-15ம் ஆண்டிலும், மாநில கணக்கீட்டை விட மத்திய கணக்கீடு குறைந்திருந்தாலும், 2015-16ம் ஆண்டில் 6 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு மாநில அரசின் கணக்கீட்டை விட மத்திய அரசின் கணக்கீடு உயர்ந்து காணப்படுகிறது.

இருப்பினும், மாநில அரசின் கணக்கீடு அறிவியல் ரீதியாக மிகச் சரியான முறையில், 1950 முதல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதால், மாநில அரசின் கணக்கீடு தான் சரியானதாகும் என்பதால், மாநில அரசின் அனைத்து வெளியீடுகளும் அதிகார பூர்வமான புள்ளிவிவரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மாநில அரசின் புள்ளி விபரப்படி, 2011-12 முதல் 2015-16ம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் அரிசி உற்பத்தியானது 71.15 லட்சம் டன்னிலிருந்து 79.49 லட்சம் டன் என்ற அளவிலேயே உள்ளது. 2012-13ம் ஆண்டில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, அரிசி உற்பத்தி 40.50 லட்சம் டன்னாக குறைந்தது.
அரிசி மகசூலைப் பொறுத்தவரை புள்ளியியல் துறை, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படுவதால், மாநில அரசு அளிக்கும் புள்ளி விபரமே உண்மைத்தன்மை கொண்டது.
மத்திய வேளாண் துறையின் புள்ளிவிபர அடிப்படையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு காரணிகளை கணக்கில் கொண்டு புள்ளிவிபரங்களை சீரமைத்து கணிக்கப்படுவதால், இவ்விரண்டு புள்ளி விபரங்களையும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல.
எனவே, மாநில அரசினால் அரிசி உற்பத்தி தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் விரிவான முறையில் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் எய்தப்பட்ட உண்மைத் தகவல்களாகும்.
செய்தித்தாள்களிலும், எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையிலும் குறிப்பிட்டது போல, அதிக அளவிலான உற்பத்தியை காண்பித்து மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க.வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது. காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை என சொல்லும் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர். அவருக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டவில்லை.
தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சியில் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ.க. ஆட்சிதான் கொண்டு வந்துள்ளது. நாமக்கல்லில் மக்கள் நலனுக்காக தான் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் திமுக.வினர் கருப்புக் கொடி காட்டினர். திமுக உண்மையாக அரசியல் செய்தால் கர்நாடகாவை நோக்கி தான் நடைபயணம் செய்ய வேண்டும். இதன்மூலம் நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை.

கமல்ஹாசனின் புதிய கட்சி அங்கீகாரம் குறித்து கேட்டபோது, ‘தேர்தல் கமிஷன் யார் சென்று விண்ணப்பித்தாலும் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெற்றாலும், மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும்’ என்றார் தமிழிசை சவுந்தரராஜன். #TamilisaiSoundararajan #TamilNaduBJP
மதுரை:
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசினர்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. எங்களுக்குத் தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையமே கூறி விட்டது. ஆனால் ஒரு நபர் எப்படியாவது அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் அபகரிப்பேன் என்கிறார். அவர் வேறுயாருமல்ல ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரன்தான்.
அவரது நடவடிக்கைகளை கடந்த 32 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஜெயலலிதா மீது தி.மு.க. வினர் தொடர்ந்த லண்டன் ஓட்டல் வழக்கில் தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டார்.
இதனை அறிந்த ஜெயலலிதா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய், இனி நான் சாகும்வரை என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கட்சியை விட்டு தினகரனை தூக்கி எறிந்தார். ஜெயலலிதாவுக்கு தினகரன் ராஜதுரோகம் செய்த காரணத்தால் அவர் விரட்டப்பட்டார்.

அதன் பிறகு பாண்டிச் சேரியில் தினகரன் பதுங்கி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறார். அவரது மாய வலையில் தொண்டர்கள் விழ வேண்டாம்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும். 20 ரூபாய் நோட்டை காட்டி தினகரனை தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் நெல்லை, விருதுநகர் என்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய தினகரனை இப்போது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசடி நபர் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்கிறார்.
தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் சகதியில் காலை விட்டவர் கதைபோல இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.
ஏனென்றால் அந்த எம்.எல்.ஏ.க்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் ரத்தத்தை சிந்தி வெற்றியை பெற்று தந்தார். ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களித்தனர்.
எனவே தான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. மீது வீண்பழிகளை சுமத்தி வருகிறார்கள். அது மக்கள் மன்றத்தில் எடுபடாது.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மக்களை தூண்டிவிட்டு சிலர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். பொதுமக்களை குழப்பி வரும் சமூக விரோதிகள் மீது அ.தி.மு.க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அ.தி.மு.க. மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எனவே மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளது. தற்போது நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கிடைத்துள்ளது. இது அ.தி.மு.க.அரசு செய்த மகத்தான சாதனையாகும். இதன் மூலம் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #Jayalalitha






