search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா உருவாக்கிய மாயத் தோற்றத்தில் சிக்கினோம் - கே.பி முனுசாமி
    X

    சசிகலா உருவாக்கிய மாயத் தோற்றத்தில் சிக்கினோம் - கே.பி முனுசாமி

    ஜெயலலிதாவுக்கு தெரியாமல் மாயத்தோற்றத்தை உருவாக்கி அதில் தங்களை சிக்க வைத்து தன்னை அரசியாக நினைத்து ஆட்சி செய்தவர் சசிகலா என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார். #KPMunusamy #ADMK

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியால் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பயங்கரவாதிகள நடமாட்டம் இருப்பதை அவர் நிரூபிக்கட்டும். தமிழகத்தில் சமூகவிரோத சக்திகள் வேண்டுமானால் இருக்கலாம். பயங்கரவாதிகள் இல்லை.

    மத்தியில் ஆளும் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித அடிப்படை வசதி கூட கிடையாது. ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தமிழகத்தில் சிறு குக்கிராமங்களில் கூட சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மாநிலங்களில் எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது. தமிழகத்தில் கவர்னர், பிரதமருக்கு கூட கருப்பு கொடி காட்டுகிறார்கள். இது போன்ற செயல்களால் எந்த பயனும் இல்லை.

     


    மோடி சிறந்த பிரதமராக இல்லை. அவர் ஆட்சிக்கு அப்பாற்பட்டு, கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் உரிமையை நிலை நாட்டவில்லை. அந்த வகையில் தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்காதவர் பிரதமரே அல்ல.

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை நாம் பெற்றுள்ளோம். இதனை வைத்து சிலர் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு நாங்கள் அடிமை, எடுபிடி என கூறுவது தவறு.

    ஏனென்றால் தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அ.தி.மு.க. மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களின் தேவைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை அல்ல. பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.

     


    தினகரனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் குடும்பத்தினர் ஜெயலலிதாவை ஏமாற்றிய கூட்டம். அவரது இறப்புக்கு காரணமான கூட்டம்தான் தினகரன். 

    ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தபோது அவருடைய அலவலகத்துக்கு வரும் போதெல்லாம் அவருக்கு தெரியாமல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அந்த தோற்றத்தில் எங்களையும் சிக்க வைத்து தொடர்ந்து தன்னை ஒரு அரசியாக நினைத்து ஆட்சி செய்தவர் சசிகலா. அவர் கட்சியையும் ஆட்சியையும அழிக்க நினைத்ததால்தான் சிறையில் உள்ளார். அது போல் தினகரனும் நினைத்தால் அவரும் சிறைக்குதான் செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார். #KPMunusamy #ADMK

    Next Story
    ×