என் மலர்
செய்திகள்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசு அதன் இயல்பைக் காட்டிவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்வரை காத்திருக்க முடியாது என்றும், கர்நாடக விவசாயிகளின் தேவைகளுக்காக கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி அறிவித்திருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாததால் கர்நாடகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் போலவும், ஆணையம் அமைக்கப்படாததற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் தான் காரணம் என்பதைப் போலவும் தோற்றத்தை ஏற்படுத்த கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி முயல்கிறார். இது காவிரி விவகாரத்தை திசைதிருப்பும் செயலாகும்.
உண்மையில் காவிரிப் பிரச்சினையில் இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளுக்கும் கர்நாடகம் தான் காரணம் ஆகும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிக்கை ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆணையத்தில் தமிழகத்தின் சார்பில் இடம் பெறும் உறுப்பினரின் பெயர் அடுத்த நாளே அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர்.
அப்போதே கர்நாடக அரசும் அதன் சார்பில் காவிரி ஆணையத்தில் இடம்பெறும் உறுப்பினரின் பெயரை அறிவித்திருந்தால் காவிரி ஆணையம் 20 நாட்களுக்கு முன்பே அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்திருக்கும். அவ்வாறு வந்திருந்தால் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இருந்திருக்காது.காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் குறைந்த அமைப்பு என்றாலும், அதைக்கூட ஏற்றுக் கொள்ள கர்நாடகம் தயாராக இல்லை.

மாறாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்பட்டு விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கர்நாடக அணைகளில் உள்ள நீரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாட்டுக்கு நடப்பு ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 10 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டு விட்டதைக் காரணம் காட்டும் குமாரசாமி, அதே போல் கர்நாடகம் அதன் தேவைக்காக தண்ணீரை பயன்படுத்திக் கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது என்று கூறுகிறார். இது அபத்தமான வாதம் ஆகும். தமிழ்நாட்டுக்கு கர்நாடக உளமாற தண்ணீர் திறந்து விடவில்லை. மாறாக கபினி அணை நிரம்பி வழிந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி தான் தண்ணீர் திறந்து விட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக ஏதேனும் சட்ட சிக்கலை ஏற்படுத்தி, மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்று காலதாமதம் செய்வது குமாரசாமியின் நோக்கமாகும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியில் இருந்தாலும் உச்சநீதிமன்றம்-நடுவர் மன்றம் என எந்தவிதமான சட்ட அமைப்பின் உத்தரவையும் மதிப்பதில்லை. இப்படிப் பட்ட அரசு பதவியில் நீடிக்க எந்த தகுதியுமில்லை.
காவிரி விவகாரத்தில் கர்நாடகம் செய்யும் அத்து மீறல்களை மத்திய ஆட்சியாளர்கள் கண்டிக்காதது இன்னும் கொடுமையானது ஆகும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை பரிந்துரைக்க கர்நாடகத்துக்கு அளிக்கப்பட்ட அவகாசம் கடந்த 12-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்தின் பிரதிநிதியை உடனடியாக நியமிக்க ஆணையிடுவதுடன், ஆணைய செயல் பாடுகளை 20 நாட்களுக்கு மேலாக முடக்கி வைத்திருக்கும் கர்நாடகம் மீது மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் பணி முடிந்து விட்டதாக தமிழக ஆட்சியாளர்கள் கருதக்கூடாது.
ஆணையத்தின் செயல் பாடுகளை முடக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission
நெல்லை:
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை வந்தார். அவர் நேற்று பகலில் நெல்லை மாநகர் மாவட்ட பகுதியில் பல இடங்களில் சென்று மக்கள் மத்தியில் பேசினார்.
இரவில் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். டி.டி.வி தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 16 பேர் குற்றாலம் சென்று தங்கினர்.
அவர்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை . அவர்கள் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கை வாபஸ் பெறப் போவதாக கூறிய தங்க தமிழ் செல்வனும் அவர்களுடன் பேசி உள்ளார். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் இன்று டி.டி.வி.தினகரனை திடீர் என்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அதன் பின்னர் இன்று காலை டி.டி.வி தினகரன் தென்காசியில் பொறியாளர்அணி செயலாளர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். இன்று பிற்பகல் கடையநல்லூர், புளியங்குடி, சிந்தாமணி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய ஊர்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். #edappadipalanisamy #dinakaran
ராயபுரம்:
வட சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மீட்பு வெற்றி பொதுக் கூட்டம் கொருக்குப்பேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தங்கத்தமிழ்செல்வன் வீரத்தை பாராட்டுகிறேன். வெகு விரைவில் ஆண்டிப்பட்டியில் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு வழி வகுத்த தங்கத் தமிழ் செல்வனுக்கு நன்றி.

பசுமை வழி சாலை திட்டம் மத்திய அரசிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி நிதி பெற்று செயல்படுத்தபடும் மிக பெரிய திட்டமாகும். இந்த திட்டம் மிக பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது உண்மை இல்லை அவர்களை திசை திருப்பி தூண்டி விடுவது மிக பெரிய தேசதுரோகம்.
தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் ஆர்.கே நகரில் விரைவில் இடைதேர்தல் வரும். ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று கொடுத்த வாக்குகுறுதிகளை நிறைவேற்றும்.
தினகரன் ஆர்.கே நகர் வருவதில்லை என்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நடிகர் ராம ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #Greenwayroad #MinisterPandiarajan
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அவர் கோஷம் எழுப்பினார்.
தூத்துக்குடியில் காவல் துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் நீதிமன்றம் மூலம் திறக்க விடாதபடி நிரந்தரமாக மூட வேண்டும். இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும்.
குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். பழிவாங்கும் முறையை அரசு கைவிட வேண்டும்.
வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய-மாநில அரசுகள் துணை போகக்கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தி பொய்வழக்கு போடக் கூடாது.
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆனால் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே 4 வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. அதை மேலும் விரிவாக்கம் செய்து செயல்படுத்தலாம். மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி என்று கூறி கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை திசை திருப்பி இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல. இத்திட்டம் சேலத்தை மையமாக கொண்டு ஏன் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த சாலையை அமைக்கலாமே. சேலத்துக்கு கொண்டுவருவதன் நோக்கம் என்ன?
தனியார் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இது போன்று அமைகின்ற பசுமை சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசு, தனியார், பொது மக்கள் ஆகியோர் சேர்ந்து செயல்படுத்தும் விதமாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட அதிகமாக வசூலித்து மோசடி செய்கிறார்கள்.
மக்கள் திட்டம் என்ற அடிப்படையில் சுங்கசாவடி அமைத்து தனியார் சம்பாதிக்க வழிவகுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆளுர்ஷா நவாஸ், செல்லத்துரை, இரா.செல்வம், ராஜேந்திரன், இளங்கோ, கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், சாமுவேல், பொற்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.
இதை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி இருந்தனர்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கூறி இருந்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அளித்த தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று கூறி இருந்தார்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி சமூக வலை தளங்களில் மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அரசுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுகிறார். கோர்ட்டில் இனி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் வழக்கை வாபஸ் பெற போகிறேன் என்று கூறி இருந்தார். மேலும் பல்வேறு கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். மேலும் தலைமை பதிவாளர் சக்திவேலை நேரில் சந்தித்தும் மனு கொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு தாமாக முன்வந்து அவதூறு வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் அல்லது எனது மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும். #ThangaTamilSelvan
சென்னை:
சோனியா-ராகுலை கமல் சந்தித்து பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பால் தி.மு.க. தோழமை கட்சிக்கு இடையில் உள்ள உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
கமல்ஹாசன் ஏற்கனவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமியை சந்தித்து இருக்கிறார்.
கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு சென்றபோது சோனியாகாந்தி, மாயாவதி உள்பட பல தலைவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ராகுல்காந்தியையும் சந்தித்து இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒரு தலைவரை இன்னொரு தலைவர் சந்திப்பதால் அந்த சந்திப்பு கூட்டணிக்காக மட்டுமே என்று நாம் யூகிக்க தேவையில்லை.

கமல்ஹாசன், காங்கிரஸ் இடம்பெறும் அணியில் தாமும் இடம்பெற வேண்டும் என்று பேசியிருந்தாலும் அது தி.மு.க.விற்கோ அல்லது அதன் தோழமை கட்சிகளுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.
கமலுடனான சந்திப்பு பற்றி ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்மூலம் அந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிப்பதற்குள் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு மனித உரிமை ஆர்வலர்களை சுற்றுச்சூழல் பாதுகாவலர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை வளங்களையும், மக்களுக்கான வாழ்வாதாரங்களையும், பெருமளவில் அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணித்து வருகின்றன. இந்த போக்கை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
மக்களின் கருத்தறியாமல் இசைவு இல்லாமல் இந்த திட்டத்தை திணிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. விரைவில் சேலத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #RahulGandhi #DMK
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் இன்று விருதுநகரில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்தால் நல்லது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை வைத்து விசாரிக்கிறது. போலீசார் மீது தான் குற்றச்சாட்டு உள்ளது. அந்த போலீசாரே இதனை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்.

மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்றும், சமூக விரோதிகள் என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.
இந்த ஆட்சி மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. அரசின் ஒவ்வொரு துறையும் செயலிழந்து வருகிறது. விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு தூக்கி எறியப்படும். கடந்த 6 மாதமாக இங்கு இடியமின் ஆட்சி தான் நடக்கிறது.
திண்டுக்கல் சீனிவாசனை எம்.பி, அமைச்சராக்கி அழகு பார்த்தது அம்மா தான். ஆனால் தற்போது அம்மாவை அவர் பழித்து பேசுகிறார். இதை அங்குள்ள மூத்த நிர்வாகிகளும் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalanisamy
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
தமிழகத்தில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட நாள் முதல், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆசியுடன் எய்ம்ஸ் மதுரையில் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து போராடி வந்தது.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால் எனது அமைச்சர் பதவியைக் கூட துறக்கத் தயார் என பல பொதுக்கூட்டங்களில் நான் பேசினேன்.
மத்திய அரசு தமிழகத்தில் மதுரை, தஞ்சை என 5 இடங்களில் எய்ம்ஸ் அமைக்க இடத்தை ஆய்வு மேற்கொண்டு இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அனைத்து வசதிகளும் நிறைந்த இடமாக உள்ளது என தீர்மானித்து, தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க ஆணை பிறப்பித்ததை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் ஆணையை வெளிப்படுத்தியது மேலும், இங்கு அமைக்க 5 நிபந்தனை ( குடிநீர், மின்சாரம், தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடமாகவும், நில மீட்பில் சிக்கலின் மை உள்ளிட்ட )களையும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கெல்லாம் உகந்த இடமாக மதுரை தோப்பூர் அமைந்துள்ளது. இதனால் இனி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை. எனது அமைச்சர் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.
இந்த மருத்துவமனை அமைந்தால், ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையால், தமிழகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்களும் இங்கு வந்து எளிதில் பயன்பெறும் வகையில் அமையும்.
மேலும், சேலம் சென்னை 8 வழிச்சாலையால் எந்த ஒரு விவசாயிக்கும் பாதிப்பு இருக்காது, விவசாயிகளுக்கு பாதுகாப்பும் அவர்களது வளர்ச்சிக்கும் என்றென்றும் உறுதுணையாக அ.தி.மு.க. செயல்பட்டு வரும். சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் சுயநலத்திற்காகவும் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். அது எடுபடாது.
சேலம் சென்னை 8 வழிச்சாலை அமைந்தால் ஒரு உயிர் கூட விபத்தில் பலியாகாது என்பதை, சேலம் மக்களுக்கு சத்தியம் செய்கிறேன். மேலும், மதுரை மாவட்டத்திற்கு பஸ்போர்ட் அமைப்பதற்கு முதலிடம் வகிப்பது திருப்பரங்குன்றம் தொகுதி. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுரையில் பறக்கும் சாலை திட்டமும் வெகு விரைவில் வருவதற்கு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இது போன்ற வியக்கத்தக்க திட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், இதனால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், நீதிபதி, மாணிக்கம், பெரிய புள்ளான், நிர்வாகிகள் வெற்றிவேல், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பன்னீர்செல்வம், முத்துக்குமார், முனியாண்டி, மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
சென்னை:
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தும் முதல்-அமைச்சர் தன் சொந்த மாவட்ட மக்கள் மீது ஏவிவிட்டுள்ள காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவில்லை. குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை பிரயோகித்து ஜனநாயக பூர்வமான அறவழி போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது இந்த அ.தி.மு.க அரசு.

எனவே, சேலம் பசுமை சாலை திட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவும், அதுவரை விளைநிலங்கள் வழியாக நடத்தப்படும் சர்வேயை நிறுத்தி வைக்கவும், போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க அரசின் காவல்துறை அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க சார்பில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி 23-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில், ராஜேந்திரன், எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோர் முன்னிலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Greenwayroad #DMK
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #LorryStrike
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

பின்னர் வெளியே வந்த அவரிடம் கட்சியின் சின்னம், எதிர்கால செயல்பாடு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு பதிலளித்த கமல், தற்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மட்டுமே அதிகாரிகளிடம் பேசியிருப்பதாகவும், கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கட்சியின் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சேலத்தில் அமைய உள்ள பசுமை வழித்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். #KamalPolitics #KamalParty #MakkalNeedhiMaiam
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரியில் தமிழகம் அதன் பங்கு தண்ணீரைப் பெற கர்நாடகம் எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவற்றை கர்நாடக முதல்வர் குமாரசாமி அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது அதைத் தான் காட்டுகிறது.
11 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இம்மாதம் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட அதிகாரம் குறைந்த அமைப்பு தான் என்றாலும் கூட, காவிரி சிக்கலுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு ஏற்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் அந்த ஏற்பாட்டை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒருவகையில் தியாகம் ஆகும். தங்களின் உரிமைகளை ஓரளவு இழந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களே இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இதனால் பயனடையக் கூடிய மாநிலமான கர்நாடகம் இதை ஏற்று செயல்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், வழக்கம் போலவே கர்நாடக வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. ‘‘ கர்நாடக அணைகளின் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளவீடு செய்வதற்கான அதிகாரமும், கர்நாடக உழவர்கள் எத்தகைய பயிர்களை பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வ மற்ற நடவடிக்கை; இது எங்களுடைய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் தீங்கு ஆகும்’’ என்று குமாரசாமி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் அவர் சந்தித்திருக்கிறார். மற்றொரு புறம் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசன மந்திரி சிவக்குமார், காவிரி ஆணையத்திற்கு கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி, நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆகிய இருவரும் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று தான். காவிரி மேலாண்மை ஆணையத்தை கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பதைத் தான் அவர்கள் வேறு வேறு வார்த்தைகளில் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் உரிமைகளை மறுப்பதற்காக சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரான நடவடிக்கைகளை கர்நாடகம் மேற் கொண்டு வரும் நிலையில், தமிழக ஆட்சியாளர்களோ காவிரி உரிமையை வென்றெடுத்து விட்டதாகக் கூறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் போது, ஆட்சியாளர்கள் வெற்றி விழா கொண்டாடுவது மிகவும் குரூரமான நகைச் சுவை ஆகும். அணைகளில் 56 டி.எம்.சி தண்ணீர் இருந்தாலும் கூட தமிழகத்துக்கு தர மறுக்கும் கர்நாடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ, தண்ணீர் பெற்றுத் தரும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியாத அரசு தமிழகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான். இவர்களை வரலாறும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
காவிரி பிரச்சினை குறித்த தீர்ப்பை செயல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசுக்கு தான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதால், தமிழகத்திற்கு நீதி வழங்கும் கடமையை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும். கர்நாடக அணைகளை அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்த தங்களின் உத்தரவுகளை கர்நாடகம் ஏற்க மறுத்தால், அரசியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின்படி அங்கு அரசியல் அமைப்புச் சட்டப்படியான கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அறிவித்து, கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுனரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் பான்மையினரால் தூண்களை பிடிக்காமல் நிற்க முடியாது என்ற அளவுக்கு அவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்ற உண்மை இதயத்தைச் சுடுகிறது.
சென்னையிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக் கட்டமைப்பு ஆலமரம் போல பரந்து விரிந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
போதைப் பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் வருவோரின் விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதுடன் அவர்களுக்கு ரூ.10,000க்கும் குறையாமல் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் பெற்றோர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்தல்/ சிக்காமல் இருத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதை மருந்துப் பழக்க மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு, காவல்துறை, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் என அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission






