என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் கமல்ஹாசன் தனக்கு ஒரு கட்சி ரூ.100 கோடி தர பேரம் பேசியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனக்கு ஒரு கட்சி ரூ.100 கோடி தர பேரம் பேசியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டது. நாங்கள் உண்மையான சாதனைகளை, இலக்குகளை நிகழ்த்தவே விரும்புகிறோம். கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம்.

    அதிகத்தூர் கிராமத்தை நான் தேர்வு செய்ததாக சொல்கிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். அந்த கிராமத்தில் 1996-ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சுமதி என்னை சந்தித்து, அந்த கிராமம் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றி கூறினார்.

    கடும் ஊழல் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கிராமத்தை மேம்படுத்த அவர் போராடுவதை தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு உதவும் வகையில் அதிகத்தூர் கிராமத்தை நாங்கள் தத்து எடுத்தோம்.

    கிராம பஞ்சாயத்துக்களை நாம் நடத்தி வருகிறோம். அந்த பஞ்சாயத்து முறையை 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் திறம்பட செயல்படுத்தி இருந்தால், இன்று அவை சட்டசபையை விட வலிமையானதாக இருந்திருக்கும். மக்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை உணர வேண்டும்.

    ஊரில் நீங்கள் தபால் நிலையத்தை தேடிப் பாருங்கள், கண்டுபிடிக்க முடியாது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடை எங்கு இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

    நம்மிடம் நிறைய டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. கேட்டால் அரசுக்கு வருவாய் வருவதாக சொல்கிறார்கள். அப்படியானால் அடுத்து போதை பொருட்களை விற்பனை செய்வார்களா?

    டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூடி விடுவதால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும் நாம் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தலைமை செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு பேச விரும்பவில்லை. நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.


    ரஜினியுடன் நான் கூட்டணி சேர்வேனா என்று அடிக்கடி கேட்கிறார்கள். அதுபற்றி இப்போதே சொல்ல முடியாது.

    தமிழ்நாட்டில் நிறைய சமூக ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள் அரசியல் சார்பின்றி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்தும், தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நான் நிறைய வி‌ஷயங்களை கற்று வருகிறேன்.

    எல்லா கட்சிகளுடனும் எனக்கு கொள்கை ரீதியாக மாறுபடுவது உண்டு. ஆனால் தமிழக அரசியலில் நான் முக்கியமாக நினைப்பது ஊழலைத்தான். இந்த ஊழலை முழுமையாக வேரறுக்க வேண்டும்.

    ஜெயிலில் இருப்பவர் சுதந்திரமாக வெளியில் வந்து ஷாப்பிங் செல்கிறார். 2 நாட்களுக்கு தலைப்பு செய்தியாக அதைப் படிக்கிறோம். பிறகு மறந்து விடுகிறோம்.

    எனக்கு கூட ஒரு கட்சி லஞ்சம் தர பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் அந்த கட்சியில் சேர மறுத்து விட்டேன்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில், கோர்ட்டில் சபாநாயகர் தீர்ப்பு ஏற்கப்பட்டால் தேர்தல் வரும். அந்த 18 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுவது பற்றி இப்போதே சொல்ல முடியாது. ஏனெனில் கட்சியில் நான் மட்டுமே முடிவு எடுப்பது இல்லை. அனைவரும் கலந்து பேசி கூட்டு முடிவை எடுப்போம்.

    என்னைப் பொறுத்தவரை அரசியல் இளைஞர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அவர்கள் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்க தெரிந்து இருக்க வேண்டும். நான் சிறு வயதில் திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டேன்.

    மாணவனாக இருக்கும் போது அரசியல் பற்றி தெரிந்தால்தான் செயல்பட முடியும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் மாணவர்களை தேடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றேன். ஆனால் நான் அவ்வாறு செல்வதை இந்த அரசு தடுத்து நிறுத்துகிறது.


    1967-ம் ஆண்டு திராவிட இயக்கத்தால் புது யுகம் ஏற்பட்டது. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பிறந்து இருக்காவிட்டாலும் திராவிட இயக்கம் தோன்றி இருக்கும். அது காலத்தின் தேவையாக இருந்தது.

    ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதியும் குறிப்பிட்ட கால அளவே நீடிக்க முடியும். அதுதான் உண்மை. திறமையான அரசியல்வாதிகளுக்கு பதில் புதியவர்கள் வர வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் நீண்ட நாட்களுக்கு ஒருவரே தலைமை பதவியில் இருக்க மாட்டார். என்னை இந்த வி‌ஷயத்தில் எதிர்பார்க்காதீர்கள். எனது இடம், நேரத்தை நான் தியாகம் செய்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் எனக்கு வேண்டும்.

    மக்கள் என்னைப் போன்றவர்களை நம்ப வேண்டும். நான் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சிவகங்கை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். #MinisterPandiarajan

    மதுரை:

    மதுரைக்கு விமானம் மூலம் வந்த அமைச்சர் மாபா. பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த இரண்டு மாதமாக 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தொண்மையாக பொருட்கள் கிடைத்துள்ளன.

    ஆய்வில் தங்க ஆபரணம் கிடைத்துள்ளது. புதையல் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் கிடைத்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விரிவான அறிக்கை வருகிற 25-ந்தேதி சட்டமன்றத்தில் வெளியிடப்படும்.

    கீழடியை விட திருவள்ளூரில் கற்கால ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஆதிச்சநல்லூர், கீழடி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பொருட்களை வைத்து ரூ. 14 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் ஆய்வு மையம் உருவாக்கி உலகத் தரம்மிக்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan

    காவிரி பிரச்சனையில் சாதித்தது தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்பது குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    காவிரி பிரச்சனையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத்தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே கருணாநிதி முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் 1-ந் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகப்பட்டினத்தில் நின்று கொண்டு நான் தான் காவிரிப்பிரச்சனையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாவது தயக்கம் வேண்டாமா?. ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சனையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் போய் பேசுகிறார் என்றால் அய்யகோ, தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.



    இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில் தான் அ.தி.மு.க. அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. மு.க.ஸ்டாலின் கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju
    சென்னை:

    கூட்டுறவுத்துறை ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவுத்துறையினர் மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்க்கடன், உரம் வினியோகம், ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    கூட்டுறவு சங்கம் அ.தி.மு.க. அரசால் உரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு அரசியல் இல்லை. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த முறைதான் சக்கரபாணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதுவும் கூற முடியாது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை.


    18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைவது பற்றி முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார். அதனால் நான் எதையும் கூற விரும்பவில்லை. கூட்டுறவு அச்சகங்களில் பழைய மிஷின்கள் இருக்கிறது. அதனை மாற்றி நவீன ரக மிஷின்கள் வாங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 சதவீத சம்பள உயர்வு வழங்கியது. இது ஊழியர்களுக்கு தெரியும். 5 ஆண்டு முடிவுற்று இருக்கிறது. சம்பள உயர்வு குறித்து முதல்வரே அறிவிப்பார். மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் இந்த அரசு எடுக்காது.

    நடப்பாண்டில் 8 ஆயிரம் கேடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.102.79 கோடிக்கு காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 281 அம்மா மருந்தகம் மூலம் ரூ.700 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவிரைவில் 61,851 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #SellurRaju
    காவிரி திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற சொல்வதா? என்று குமாரசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin #Kumaraswamy

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, நேற்றைய தினம் டெல்லி சென்ற கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, “காவிரி வரைவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிட்டிருக்கிறேன்” என்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேவையில்லாத ஒன்றைப் பற்றிக் கூறியிருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவிரி வரைவுத் திட்டம் கர்நாடக மாநில அரசுக்கும் அளிக்கப்பட்டு, அதன் மீது கருத்துகள் பெறப்பட்டு, அந்த மாநில அரசு கூறிய சில திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இறுதியில்தான் உச்சநீதி மன்றம் காவிரி வரைவுத் திட்டத்தை உறுதி செய்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜூன் 1-ந்தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதுமட்டுமின்றி, கர்நாடக முதல்-அமைச்சர் தற்போது முன் வைக்கும் வாதங்கள் எல்லாம் முன்பே உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்ட வாதங்களே தவிர, புதிய வாதங்களோ மறுபரிசீலனை செய்திட வேண்டிய முக்கியமான கருத்துகளோ இல்லை.

    இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக, தங்கள் மாநிலப் பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு அளிக்காமல், வேண்டுமென்றே வழக்கம் போல் தாமதம் செய்யும் போக்கைப் பின்பற்றி வருகிறது கர்நாடக அரசு.

    “ஜூன் 12-ந்தேதிக்குள் பிரதிநிதியின் பெயரைக் கொடுங்கள்” என்று மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மேலும் சில விளக்கங்கள் என்ற அடிப்படையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடப் போகிறோம் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் கர்நாடக முதல்-அமைச்சர் “புதிய பிரச்சினைகளை”க் கிளப்பியிருப்பது, அவர் முதல்- அமைச்சராகப் பொறுப் பேற்றுக் கொண்டவுடன் அளித்த பேட்டிகளுக்கும், வெளிப்படையாகத் தெரிவித்த கருத்துகளுக்கும் முற்றிலும் மாறாகமுரணாக இருக்கிறது.


    குறிப்பாக இரு மாநில மக்களும் உடன்பிறவாத சகோதரர்கள் என்று கூறிக் கொண்டே, இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க விடாமல், பின்னடைவு செய்யும் நோக்கத்துடன் முடக்கி வைக்கும் போக்கை கர்நாடக மாநில முதல்- அமைச்சர் மேற்கொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்லாமல், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா காவிரிப் பிரச்சினையில் பின்பற்றிவந்த அதே எதிர்மறை அணுகுமுறையின் தொடர் கதையாகவும் தெரிகிறது.

    அண்மையில், கர்நாடக மாநிலத்திற்காக தேர்தல் லாபத்திற்காக அரசியல் காரணங்களின் அடிப்படையில், மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுத்தியது மத்திய பா.ஜ.க. அரசு.

    அதற்கு இணையாக, கர்நாடக அரசு கடந்த காலங்களில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்டங்களில் வேண்டுமென்றே கால தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. இப்போது, மத்திய அரசும் கர்நாடகத்திற்கு ஒரு கடிதத்தை மட்டும் எழுதி விட்டு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, அமைதிகாக்கிறது.

    தமிழக முதல்- அமைச்சரையும், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளையும் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு சந்திக்க மறுத்த பிரதமரும், நீர் வளத்துறை அமைச்சரும் கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கு மட்டும் நேரம் ஒதுக்கித் தாராளமாக சந்திக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதிடவில்லை என்று புலப்படுகிறது.

    இப்போது டெல்லியில் நடந்திருக்கும் இந்தச் சந்திப்பின் மூலமாக, கர்நாடக முதல்வர் காவிரியில் புதிய பிரச்சினைக்கு வித்திட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மத்தியிலே உள்ளவர்கள் விரும்பித் துணை போயிருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    உச்சநீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பளித்து விட்ட நிலையில், காவிரிப் பிரச்சினையில் மேலும் மேலும் குழப்பத்தையும், நெருக்கடியான நிலையையும் நீட்டிக்க மத்திய பா.ஜ.க. அரசும், தனது நாடாளுமன்றத் தேர்தல் லாபத்தை மனதில் கொண்டு, கர்நாடக அரசுடன் இணக்கமாகச் செயல்படுவது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் ஓரவஞ்சனை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    கர்நாடக கண்ணில் வெண்ணையையும், தமிழக கண்ணில் சுண்ணாம்பையும் தடவ எத்தணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேடம் வெகுநாட்களுக்கு நிற்காது.

    ஆகவே, இனியும் தாமதிக்காமல் கர்நாடக அரசு தனது மாநிலத்திற்கான பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு உடனடியாக அளித்து, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு கடிதம் எழுதி விட்டோம் என்று காத்திராமல் மத்திய அரசும் காவிரி வரைவுத் திட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிகாரத்தின் கீழ், கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரைப் பெற வேண்டும் என்றும், கர்நாடக அரசு பெயரைக் கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுவரை தாமதத்திற்கு மேல் தாமதம் செய்தது போதும்; இனியும் எந்தவிதத் தாமதத்தையும் தமிழகம் தாங்கிக் கொள்ளாது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Kumaraswamy

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று சீமான் கூறினார். #Seeman #18MLAs #ADMK
    மதுரை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசை ஆதரிக்கவில்லை என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பது ஜனநாயக படுகொலை ஆகும்.

    தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தட்டும். அப்படி தேர்தல் வந்தால் எடப்பாடி அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.

    தமிழக அரசு வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக மாற்ற முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டம் முட்டாள்தனமான ஒன்று. இதனால் தான் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.


    தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசாங்கம், எஸ்.வி. சேகர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இது பாரபட்சமான செயல்பாடாகும்.

    தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று வரை கைது செய்து வருவது பெரிய அடக்குமுறை ஆகும்.

    தமிழகத்தில் நேர்மையற்ற ஆட்சி நடக்கிறது. போராட்டத்தை முடக்க நினைப்பது சர்வாதிகாரம் ஆகும். தமிழிசைக்கு எதிராக கருத்து சொன்னால் கைது செய்கிறார்கள். இதுவே பெண்களுக்கு எதிராக கருத்து சொல்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள். தமிழகத் தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #18MLAs
    காலமுறை ஊதியம் வழங்கி ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஊர்க் காவல்படை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க் காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது.

    இதன்மூலம் ஊர்க் காவல் படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து 5 ஆக குறைந்து விட்டது.

    இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

    கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை.

    ஊர்க்காவல்படையை தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக அறிவித்து, அதில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க் காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இது குறித்த அறிவிப்புகளை இம்மாதம் 26-ந்தேதி நடைபெறவுள்ள காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது முதல்- அமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணம் பலிக்காது என்று தங்க தமிழ்செல்வன் பேட்டியில் கூறியுள்ளார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் அந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நீதிபதி விமலா விசாரிக்க உள்ளார்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் தன்னுடைய வழக்கை நாளை மறுநாள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதகுறித்து ‘மாலைமலர்’ நிரூபரிடம் அவர் கூறியதாவது:-

    நான் எனது தொகுதி மக்களை நேற்று சந்தித்து பேசினேன். இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற எம்.எல்.ஏ. இருக்க வேண்டும். அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதியும் தொகுதியில் இல்லாததால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலை உள்ளது.

    அதனால் ஐகோர்ட்டில் நடந்துவரும் எனது வழக்கை வாபஸ் பெற்றால் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கலாம் என்றேன்.

    அதற்கு அங்குள்ள மக்கள் இடைத்தேர்தல் வந்தால் நீங்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றனர்.

    என்னை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். அது நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி நான் தேர்தலில் நிற்க சட்ட சிக்கலை உருவாக்குவார்கள் என்றேன். மக்கள் எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

    எனவே இடைத்தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாளை மறுநாள் (வியாழன்) சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி விமலாவை சந்தித்து வழக்கை வாபஸ் பெறும் மனுவை கொடுக்க உள்ளேன்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

    அவர் என்னதான் ஆசை வார்த்தை கூறி அழைத்தாலும் ஒரு ஆள் கூட போக மாட்டார்கள். 18 பேரும் தினகரன் பக்கம் உறுதியாக உள்ளோம்.

    எனவே எடப்பாடியின் பேச்சு வெற்றுஜம்பம். அவரது எண்ணம் பலிக்காது. நிறைவேறாது. நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.

    சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஏற்கனவே எங்களை தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இப்போது மறுபடியும் வந்தால் வரவேற்கிறோம் என்றால் சட்டத்தை வளைக்க போவதாக சொல்கிறாரா?

    அல்லது 3-வது நீதிபதியிடம் எங்களுக்காக பரிந்து பேச போகிறாரா? என்பது தெரியவில்லை. மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் நீதி எங்கே போகிறது? நீதியை வளைக்க இவர்கள் துணிந்து விட்டார்கள் என்றுதான் கருத வேண்டி உள்ளது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதால் நான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    கலைஞர் பொறுத்திருந்து எதை செய்வாரோ அதை செய்வோம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Karunanidhi

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே மறைந்த தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன் மொழியின் படத்திறப்பு விழா நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் எழிலசரன் எம்.எல்.ஏ வரவேற்புரை நிகழ்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொன் மொழியின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    தற்போது தமிழ்நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசு ஊழியர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டு மக்களைப் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை. சமீபத்தில் மக்கள் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பினை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அந்தத் தீர்ப்பு வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் நாட்டு மக்களுக்கு ஆபத்தாக இருந்தது.

    18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு வழக்கில் அவர்கள் அரசினை எதிர்த்து வாக்களிக்கவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் கவர்னரிடம் மனு அளித்தனர். அதற்காக அவர்களது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் 11 எம்.எல்.ஏ.க் கள் அரசினை எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் இன்று துணை முதல்வராகவும் அமைச்சர்களாகவும் உள்ளர். 18 எம்.எல்.ஏ க்கள் வழக்கில் மாறுபாடான தீர்ப்பு வந்திருக்கிறது.

    ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா இறந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். இதுதான் இடைத் தேர்தல் விதிமுறை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு 10 மாதங்களாக அத்தொகுதிகள் அனாதை ஆக்கப்பட்டள்ளன.

    இதற்குக் காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசே என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

    மக்களிடம் இருக்கக்கூடிய உணர்வுகள் எல்லாம், நீங்கள் எப்போது ஆட்சி வரப்போகிறீர்கள் என்று கேட்பவர்களை விட, எப்போது இந்த ஆட்சியை கவிழ்க்கப்போகிறீர்கள் என்ற கேள்விதான். அத்தோடு இல்லை, இன்னொன்றும் சொல்கிறார்கள், தலைவர் இருந்தால் விட்டிருக்க மாட்டார். இந்நேரம் முடிதிருப்பார் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் எல்லாம் தலைவர் கலைஞரை பார்த்தவர்கள், நாங்கள் கலைஞரோடு பழகிக் கொண்டிருக்கக்கூடியவர்கள். கலைஞர் அவர்கள் எங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    கலைஞர் அவர்கள் எப்போது எதை செய்வார் என்று நாங்களும் தெரிந்து வைத்திருக்கிறோம். எனவே, விரைவிலே கலைஞர் பொறுத்திருந்து எதைச் செய்வாரோ நாங்களும் பொறுத்திருந்து செய்ய காத்திருக்கிறோம். எனவே, மக்களாகிய நீங்களும் தயாராக இருங்கள்

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், கழக வர்த்தக அணி துணைத் தலைவர் வி.எஸ்.ராம கிருஷ்ணன்,வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் சிறுவேடல் செல்வம், காஞ்சி ஒன்றிய கழகப் பொருளாளர் தசரதன், நிர்வாகிகள் பி.எம்.குமார், சுகுமார், ஜெகந் நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MKStalin #Karunanidhi

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து கடந்த 14-ந்தேதி குன்னூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஊட்டி அருகே உள்ள மந்தாடா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஊட்டி வந்தார். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். 6 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் 2 பேருக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும். மேலும் இங்குள்ள 4 டெப்போக்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உடனடியாக வழங்கப்படும்.

    ஊட்டி நகரில் சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, அர்ச்சுணன் எம்.பி., குன்னூர் எம்.எல்.ஏ., சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #MRVijayabaskar
    காவிரி ஆணையத்தின் கூட்டத்தை இந்தமாத இறுதிக்குள் கூட்ட வேண்டும் என்று பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #cauverymanagementboard #Ramadoss

    சென்னை:

    பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் பற்றி பிரச்சினை எழுப்பி, காவிரி சிக்கலை தீர்ப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஏதேனும் உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

    ஆனால், நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி சிக்கல் பற்றி பெயரளவில் குறிப்பிட்டதுடன் நிறுத்திக் கொண்டார். டெல்லியில் பிரதமரை சந்தித்தாவது காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியை நிதி ஆயோக் கூட்டம் நடந்த அரங்கத்தில் நடந்து கொண்டே சந்திக்கும் வாய்ப்பு மட்டும் தான் முதல்வருக்கு கிடைத்தது.

    இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று ஆட்சியாளர்களால் அழைக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு காவிரி பிரச்சினை குறித்து பிரதமரை சந்தித்து பேச கடந்த 5 மாதங்களாக வாய்ப்பு மறுக்கப்படுவதும், நிகழ்ச்சி முடிந்து போகும் வழியில் பிரதமரை யாரோ ஒருவரைப் போல சந்தித்து பேசும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். அப்போது கிடைத்த வாய்ப்பில் கூட காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதலமைச்சர் எதுவும் பேசவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை எப்படி யாவது முடக்கிவிட வேண்டும் என்று கர்நாடகம் துடிக்கிறது. கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என்பதில் தமிழகத்திற்கு பொறுப்பு இல்லை; மத்திய அரசுக்கு அக்கறையில்லை.


    இத்தகைய சூழலில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்பாகவே அமையும். காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. இவை தமிழகத்திற்கு எதிரான கூட்டுத் துரோகமாகும்.

    கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104 டி.எம்.சி ஆகும்.

    அதில் பாதிக்கும் மேல், 56 டி.எம்.சி அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விடும் தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு அரை டி.எம்.சி கூட இருக்காது. இது பெரும் அநீதி.

    கர்நாடக அணைகளில் கடந்த ஆண்டு இதே நாளில் இருந்ததை விட இப்போது 10 மடங்குக்கும் கூடுதலாக நீர் இருப்பு உள்ளது. ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதிலிருந்தே நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது. கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறுவது தமிழகத்தின் உரிமை.

    ஆனால், கர்நாடகமோ தமிழகத்திற்கு தண்ணீரை பிச்சை தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர அனுமதிக்கக் கூடாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு வடிவம் கொடுக்கப்படும் போது தான், இச்சிக்கலை ஓரளவாவது தீர்க்க முடியும்.

    எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின் சார்பிலான உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும். இம்மாத இறுதிக்குள் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டி, குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #cauverymanagementboard #Ramadoss

    ஸ்டாலின் முதல்வராக வர வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #sellurraju #MKStalin
    மதுரை:

    முன்னாள் அமைச்சர் கக்கனின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.  

    இதையொட்டி மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகத்திற்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறுவது எல்லாம் ஜோக் ஆகத்தான் எடுத்துக்கொள்ளமுடியும். ஊடகங்கள் மூலம் அவர் தன்னை வெளிப்படுத்துவதற்காக ஏதாவது கருத்தை சொல்லி வருகிறார்.

    அவர் நினைப்பது போன்று குறுக்கு வழியில் அவர் முதல்வராக வர வாய்ப்பே இல்லை. மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் போட்டிப்போட்டு தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றனர். ஆகவே ஸ்டாலினோ அல்லது அவரது தந்தையோ வந்தால் கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது.

    சேலம், சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தெளிவாக  எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு ஏக்கர் எடுக்கபோகிறோம்  என்பதை முதல்வர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்க கூடியதை  தடுக்கும் வகையில் தமிழ் விரோதிகள், தமிழன துரோகிகள் தூண்டிவிடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #sellurraju #DMK #MKStalin
    ×