என் மலர்
செய்திகள்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று மாலை காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையக்குழு விழிப்புணர்வு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவுக்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கர்நாடகா இன்னும் உறுப்பினர்களை நியமிக்காமல் உள்ளது.
எனவே உடனடியாக நியமித்து, கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம். அது மிகவும் பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார். #18MLAs #TNCM #EdappadiPalanisamy
வாலாஜா:
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ராணிப்பேட்டையில் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமுதாய மக்களிடம் உள்ளது. பஞ்சமி நிலம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இது குறித்த விவரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த விவரங்களை வழங்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. உடனடியாக தமிழக அரசு, மாநில மீட்பு ஆணையத்தை உருவாக்கி பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு பணி நியமனம் மூலம் தலித் மக்களுக்கு வழங்க ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. 3 வருடங்கள் ஆகியும் இது நிறைவேற்றப்படவில்லை. சிறப்பு நியமனம் மூலம் இந்த பணி இடங்களில் தலித் மக்களை அரசு நியமிக்க வேண்டும்.
ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை பகுதிகளில் போலி சான்றிதழ்கள் பரவி வருகிறது. தகுதியானவர்களுக்கு அவரவர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரம் பெற்ற ஆதிதிராவிடர் நல ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் நிர்வாக பங்கீட்டில் தலித் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே வழங்க வேண்டும். நீட்தேர்வு அவசியமில்லை. இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வி திட்டம், ஒரே மாதிரியான பாடத்திட்டம் வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தமிழக காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசை மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #MLAsDisqualified #Tamilarasan
அ.தி.மு.க.வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு செல்ல உள்ளது.
அந்த நீதிபதி தீர்ப்புக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவு தெரியும்.
இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இது சம்பந்தமாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:
கேள்வி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் கட்சிக்கு கொண்டுவர ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறீர்களா?
பதில்: அ.தி.மு.க. என்பது மாபெரும் கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களால் இந்த கட்சி சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தற்போதைய அரசு அம்மா ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தலைவராக ஏற்றுக்கொண்ட யாரும் அடுத்த கட்சிக்கு செல்ல மாட்டார்கள். இந்த 18 எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

ப: அரசியல் கட்சி என்பது வியாபார ஒப்பந்தம் அல்ல. வியாபாரத்தை போல சலுகைகள், எதிர்பார்ப்புகளை வழங்க முடியாது. இது முழுமையாக அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை. கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் கட்சிக்கு பிரச்சனைகள் வருவதை விரும்பமாட்டார்கள். கட்சிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.
இதுபோன்ற கருத்துக்கள் கொண்டவர்கள் கட்சிக்கு திரும்ப வருவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு எங்களது கட்சியில் இருந்து யாரும் வெளியேறியது இல்லை.
கே: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. ஏதேனும் பேச்சு வார்த்தை நடத்துகிறதா?
ப: தற்போது இந்த விஷயம் (தகுதி நீக்கம்) கோர்ட்டில் இருக்கிறது. இது சம்பந்தமான தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும்.
கே: 18 எம்.எல்.ஏ.க்களும் திரும்ப வருவார்கள் என்று நம்புகிறீர்களா?
ப: கட்சியின் நலனை அவர்கள் உண்மையாக விரும்புபவர்களாக இருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருந்தால் அவர்கள் கட்சிக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #18MLAs #TNMinister #Jayakumar
அவனியாபுரம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-
அந்தியோதயா ரெயில் திருநெல்வேலியில் இருந்து விருதுநகர் வரை இடை நில்லாமல் செல்கிறது. அதை பயணிகள் வசதிக்காக கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
3-வது நீதிபதியை உடனடியாக நியமித்து உரிய காலத்தில் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும்.
முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் எப்போது, எவ்வளவு கால அவகாசம் என்பதை இறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
காவிரி விவகாரங்களில் கர்நாடகத்தில் மழை பெய்து தண்ணீர் திறப்பது போல் இயல்பாக மாதந்தோறும் நீர் திறக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
காவிரி நீர் விவகாரத்தில் உரிய காலத்தில் நீர் வராததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு மற்றும் விவசாய அமைச்சகத்திடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DeltaFarmers #GKVasan
பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டது கண்டனத்துக்குள்ளானது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எஸ்.வி.சேகர் தலைமறைவாகாமல் சென்னையிலேயே ஹாயாக சுற்றி வருகிறார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர்களிடமும் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகர் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்பத்தினருடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
அவதூறு வழக்கில் போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை இழிவாக பேசிய பெண்ணை உடனடியாக கைது செய்த போலீசாரால் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்த போலீசார் எஸ்.வி.சேகரை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
சாமானியர்கள் மீது மட்டும் தான் சட்டம் கடுமையாக பாயுமா? அதிகாரம் மிக்கவர்கள் மீது பாயாதா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் காரசாரமாக முன்வைக்கப்படுகிறது. எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சென்னை மாநகர போலீசாரின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்கள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எஸ்.வி. சேகரை கைது செய்யாத போலீசார் அவர் மீது எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன் படி நாளை மறுநாள் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் வளாகத்தில் செயல்பட்டு வரும் எழும்பூர் கோர்ட்டில் எஸ்.வி.சேகர் ஆஜராவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. #SVeShekher #TNMinister #KadamburRaju
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மற்றும் அனைத்து அணிகளின் சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா திருவண்ணாமலை சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்ட மூத்த முன்னோடிகள் 195 பேருக்கு பொற்கிழியை வழங்கினார்.
கருணாநிதி பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். இந்த விழாவை வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதம் என ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறோம்.
ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு வகையில் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சி என்று கொண்டாடி வருகிறோம். தி.மு.க. இன்றைக்கு கம்பீரமாக நின்று கொண்டிருப்பதற்கு காரணம் நமது இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகள் தான்.
இந்த இயக்கத்திற்காக உழைத்து இருக்கக்கூடிய முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யக்கூடிய அடிப்படையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாங்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், இயக்கத்தின் முன்னோடிகளை பெருமைப்படுத்த கூடிய இந்த நிகழ்ச்சிதான் தலை சிறந்த நிகழ்ச்சியாகும். இந்த பொற்கிழி வழங்கப்படுவது நீங்கள் உழைத்த உழைப்பிற்கு சன்மானம் என்று நீங்கள் கருதக்கூடாது. நீங்கள் உழைத்த உழைப்பிற்கு விலை கிடையாது. உங்களை பெருமைப்படுத்துவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துர்கா ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MKStalin #Karunanidhi
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மசோதாவிற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலில் “2016 மசோதா” என்றும், இப்போது “2018 மசோதா” என்றும் பெயர் மாற்றம் பெற்று, நாட்டில் உள்ள ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைகளைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் அந்த “விருப்புரிமை” மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் பறிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒரு அதிகாரத்தையே அபகரித்திடும் உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் இந்த மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள எந்த மத்திய அரசும், மாநிலங்களையும் அவற்றின் உரிமைகளையும் பாதிக்கும் இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற முன் வராது.
இப்படியொரு மசோதாவை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. அரசு , “2018 அணை பாதுகாப்பு மசோதாவை” இதுவரை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்கும் அடிப்படை ஜனநாயகக் கடமையைக்கூட நிறைவேற்றவில்லை. அதற்குள் மத்திய அமைச்சரவை மாநிலங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன்னிச்சையாகவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள “பொதுப்பட்டியல்” அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துவந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது மாநிலப் பட்டியல் பிரிவு 17ல் இருக்கும் இந்த அதிகாரத்திலும் கை வைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனுமே நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்பில் உள்ள மாநிலம் ஆகும். இதை விட முக்கியமாக முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளாவில் இருந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்த “அணை பாதுகாப்பு சட்டம்” தமிழகத்திற்கு உள்ள அந்த உரிமையை நிலைநாட்டியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு, பாஜகவின் புதிய மசோதாவில் ரகசியமும் மர்மமும் பாதுகாக்கப்படுகிறது.
இந்தப் புதிய வரைவு மசோதா தமிழக அரசுக்கு இதுவரை அனுப்பப்பட வில்லை. அணைகள் பாதுகாப் பையும், மக்களின் பாதுகாப் பையும் உறுதி செய்வது மாநில அரசின் கடமை. அந்தப் பொறுப்புணர்வு எந்த மாநில அரசுக்கும் இருக்கும் என்பதை மத்திய அரசு ஏனோ உணரத் தவறி, இது போன்ற மசோதாவைக் கொண்டு வருகிறது.
குறிப்பாக டெல்லியில் அமைய இருக்கும் ஒரு ஆணையம்,மேட்டூர் அணை, கல்லணை போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யும் என்பது ,மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் அப்பட்டமாகக் குறுக்கிடு வதாகும்.
ஆகவே மாநிலப் பட்டியலில் இருக்கும் அதிகாரத்தைப் புறக்கணித் திடும் விதத்தில், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பை மாநில அரசே கவனித்துக் கொள்ளும் என்றும், அணைகளின் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும் என்றும், மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று என்றும், அ.தி.மு.க அரசு நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பா.ஜ.க அரசின் இந்த எதிர்மறை முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MKStalin
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எழுதிய ‘ஸ்பீக்கிங் டுரூத் டூ பவர்’ என்ற ஆங்கில புத்தகம் மற்றும் அதன் தமிழாக்கம் ஆன ‘வாய்மையே வெல்லும்‘ புத்தகம்வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நேற்று மாலை நடைபெற்றது.
சேது சொக்கலிங்கம் வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேசினார்கள்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஏற்புரையாற்றி பேசியதாவது:-
நான் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுகிறேன். ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு செய்யாமல் தமிழிலேயே எழுதிட முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. என்றாவது ஒருநாள் தமிழில் கட்டுரை எழுத முயற்சிக்கிறேன்.
அரசு துன்பம் செய்யக்கூடாது. அப்படி துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்கும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.
இந்தியாவில் 2-ல் ஒரு குழந்தை ரத்தசோகையுடனும், 3-ல் ஒரு குழந்தை எடை குறைவுடனும், 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறக்கிறது. ஒரு குழந்தை இந்தியாவில் முழு மனிதனாக வரவே முடியாது.
சாதி, மதம் ஒழியவேண்டும் என்றால் அனைவரும் எழுதவேண்டும், அனைவரும் பேசவேண்டும். எழுதாத, பேசாத ஒரு சமுதாயம், ஊமைத் துறையாக அடங்கி இருக்கும்.
சமுதாயத்தில் எழுத்தும், பேச்சும் ஊன்றுகோலாக வேண்டும். அப்போது தான் சமுதாய சீரழிவுகள், அரசியல் ஒழுங்கீனங்கள், பொருளாதார தவறுகள் களையப்படும் என்று நம்புகிறேன். அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அதற்காகவே பேசுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் செய்து இருந்தார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pchidambaram #tngovernment #congress
சென்னை:
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகர் வடக்கு பகுதியில் நேற்றிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் 5 முறை கலைஞர் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். பலமுறை எதிர் கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். அவர் நாட்டைப்பற்றி, மக்களைப்பற்றி என்றைக்கும் சிந்திக்க கூடிய தலைவராக விளங்கியிருக்கிறார்.
கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்து வருகிறார். அவரது தொண்டையில் ஒரு ‘டியூப்’ உள்ளது. அதன் மூலம்தான் உணவு உண்ணும் நிலை உள்ளது. சுவாசமும் அந்த டியூப் வழியாகத்தான். அவரால் தெளிவாக பேச முடியா விட்டாலும், நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளார்.
கருணாநிதி நல்ல நிலையில் இருந்திருந்தால் விட்டிருப்பாரா? என்கிறார்கள். கருணாநிதி செயல் பட்டிருந்தால் அது முடிந்திருக்குமே? இது நடந்திருக்குமே? என்று சொல்கிறார்கள்.
கருணாநிதி எந்த நேரத்தில் எதை செய்வார்? எப்படி செய்வார்? என்று அவரிடம் நாங்களும் கற்று வைத்திருக்கிறோம்.
எனவே இங்கு இருக்கக்கூடிய உங்களுக்கெல்லாம் சொல்கிறேன். கவலைப் படாதீர்கள். இன்னும் செய்யவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.
நேரம் வரும். அந்த நேரத்தை பயன்படுத்தி எப்படி செய்ய வேண்டும் என்ற தந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நேரத்திலே பயன் படுத்துவோம்.
எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய நாம் தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்துக் குரியது.
இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி மத்தியிலே உள்ள பி.ஜே.பி. ஆட்சிக்கு மோடிக்கு அடி பணிந்து தலைகுனிந்து மண்டியிட்டு அடங்கி இருக்கக்கூடிய ஆட்சியாக உள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து சொல்லி உள்ளனர். இதில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை கடுமையாக விமர்சித்து ரத்து செய்திருக்கிறார்.
இனி 3-வது நீதிபதி எடப்பாடி அரசின் தலைவிதியை நிர்ணயிப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. அதனால்தான் நேற்றைக்கே இந்த தீர்ப்பால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னேன். ஏனென்றால் இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பேராபத்து என்பதாலேயே அப்படி கூறினேன்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ இப்படி...? இனி எங்கே, யாரை நம்புவது இனி நாங்கள் நம்புவது மக்களைத்தான்.
எனவே தமிழ்நாட்டிலே மிக விரைவிலே தி.மு.க. ஆட்சி உதயமாகும் தயாராக இருங்கள், தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளி செங்கோல் வழங்கி சிறப்பு செய்தார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர் ராமலிங்கம், பரமசிவம், கே. ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மதன் மோகன், மாவட்ட நிர்வாகிகள் எம்.டி.ஆர்.நாதன், வெல்டிங் மணி, ஐ.கென்னடி, துரை, செல்வி சவுந்தர்ராஜன், குணசேகர், கோவிந்தராஜ், பாபு, இளங்கோவன், ஏ.டி. முருகன், டாக்டர் ஆற்காடு கலாநிதி வீராசாமி, வக்கீல் ரகு, டாக்டர் ஜீவகன், இளைஞரணி சிற்றரசு, சேப்பாக்கம் சிதம்பரம் உதயசூரியன், மாரி, ஜானகி ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். #MLAsDisqualification #MKStalin
சென்னை:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் டி.டி.வி.தினகரனை முதலில் ஆதரித்தனர். ஜக்கையன் எம்.எல்.ஏ. விலகியதால் அவரது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றக்கோரி மனு கொடுத்ததால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். அதன்படி 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் ஒருவரான தங்கதமிழ்செல்வன் தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் டி.டி.வி.தினகரன் அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தங்க தமிழ்செல்வன் நாளை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு கோர்ட்டில் மனு செய்ய திட்டமிட்டுள்ளார். மற்ற 17 பேரும் வழக்கை சந்திக்க போவதாக டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார். ஆனால் தங்க தமிழ்செல்வன் பாணியில் மேலும் சிலரும் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே டி.டி.வி. தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அந்த அணியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான பொறுப்பை மூத்த அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
அந்த மூத்த அமைச்சர் கடந்த 2 தினங்களாக டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது அவர் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு சலுகைகளை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது சமரச பேச்சுவார்த்தை பயனாக டி.டி.வி. தினகரனின் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலர் அணி மாறும் மனநிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது பெயர் விவரங்களை தெரிவிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர்.
அ.தி.மு.க. வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிவித்தனர். 3-வது நீதிபதியின் தீர்ப்பை பொறுத்து அவர்கள் 8 பேரும் தங்களது முடிவை உனடியாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சந்திக்க வைக்க ஒருசாரார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நேற்று இரவு வரை ரகசியமாக நடந்து வந்த இந்த திட்டங்கள் இன்று அரசியல் வட்டாரத்தில் மெல்ல கசிந்து உள்ளன.

இதன் காரணமாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 21ஆக உள்ளது. டி.டி.வி. தினகரனையும் சேர்த்தால் அ.தி.மு.க.வுக்கு எதிராக 22 பேர் உள்ளனர். 8 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 14 ஆக குறையும்.
இதற்கிடையே தங்க தமிழ்செல்வனையும் தினகரன் அணியில் இருந்து பிரித்து இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. அமைச்சர் பதவி தருவதாக அவரிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதை தங்க தமிழ்செல்வன் மறுத்து உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னால் நான் ஏன் அ.தி.மு.க. தலைவர்களை எதிர்த்து போராட்டம் நடத்த போகிறேன். எனவே என்னிடம் ரகசிய பேச்சு நடந்ததாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை” என்றார். #TTVDhinakaran #MLAsDisqualification
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை -சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை மிரட்டிப் பணிய வைத்து, சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.
மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் பசுமைச் சாலைத் திட்டத்தை திணிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
காவல்துறையினரை ஏவி, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, வீடு வீடாக சென்று மிரட்டுவது, காவல்துறை பாதுகாப்புடன் நில அளவை மேற் கொள்வது போன்ற அனைத்து வகையான அடக்கு முறைகளிலும் பினாமி அரசு ஈடுபட்டு வருகிறது.
மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னை-சேலம் பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும், அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு புறம் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அவற்றை முறியடித்து சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும் போது நான்காவதாக பசுமை சாலைத் திட்டத்திற்கான தேவை என்ன? மக்கள் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என அவர்கள் துடிப்பது ஏன்? என்பன உள்ளிட்ட மக்களின் வினாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும்.
சென்னையிலிருந்து சேலத்திற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டியது வளர்ச்சிக்கு அவசியம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். சென்னையிலிருந்து சேலம் செல்லப்பயன்படுத்தப்படும் இரு தேசிய நெடுஞ்சாலைகளும் இன்னும் முழுமை அடையவில்லை.

உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உள்ள புறவழிச் சாலைகள் இன்னும் 4 வழிப் பாதைகளாக மாற்றப்படாததால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
அதேபோல், சென்னைபெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா வரையிலான சாலை ஆறு வழிப்பாதையாக்கப்பட்டுள்ள நிலையில், வாலாஜா முதல் சென்னை வரையிலான பாதை நான்கு வழியாகவே இருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சேலம் செல்லப்பயன்படும் மற்றொரு சாலையான திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 8 ஆண்டுகளாகியும் அமைக்கப்படாமல் ஒட்டுச்சாலையாகவே காட்சியளிக்கிறது. இந்த மூன்று சாலைகளையும் சீரமைக்கும்படி பொன்.ராதாகிருஷ்ணனிடம் பலமுறை நேரிலும், தொலை பேசியிலும் வலியுறுத்தியுள்ளேன். எனது சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் பலமுறை பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அதை செய்யாமல் ரூ.10,000 கோடி மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி புதிய பசுமை சாலை அமைப்பது திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இரும்புத்தாது கொள்ளையடிக்கவுள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகத் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் மறுக்க முடியுமா?
ஒரே ஒரு நிறுவனத்தின் நலனுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறித்து அமைக்கப்படும் சாலையை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றால், மக்களின் பயன்பாட்டுக்கான இரு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்களை எப்படி அழைப்பது? இது பெருந்துரோகம் அல்லவா?
சென்னை - சேலம் பசுமைச் சாலைக்காக 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் உட்பட மொத்தம் 1900 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்திற்காக தேவைப்படுவதாகவும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்று முதல்-அமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதவாதம் ஆகும்.
புறம்போக்கு நிலங்கள் தவிர 1500 ஹெக்டேர் நிலங்கள், அதாவது 4500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் சிறு, குறு விவசாயிகள் என்பதால் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதையும் இழந்து வாழ்வாதார மற்றவர்களாக மாறுவார்கள்.
மொத்தம் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வனப்பகுதிகள் சீரழிக்கப்படும். இதனால் மக்களுக்கும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை யாராலும், எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாது.
இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தி அமைக்கப்படும் பசுமை சாலை மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்கு பயன் படுவதாகவும் அமையுமா? என்றால் அதுவும் இல்லை. இது முழுக்க, முழுக்க ஒரு தனியார் நிறுவன நலனுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது.
பினாமி ஆட்சியாளர்கள் வேண்டுமானால் எஜமான விசுவாசத்தைக் காட்டுவதற்காக இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முழக்கம் எழுப்பலாம். ஆனால், தங்களின் நலனுக்கு எதிரான இத்திட்டத்தை பொதுமக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான யோசனைகளை ஆட்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது.
அதேநேரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் எனப்படுபவை மக்களுக்கானவையாக இருக்க வேண்டும். மாறாக, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கானவையாக இருக்கக் கூடாது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கான சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் 5 மாவட்ட மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம் தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GreenWayRoad #Ramadoss
ராஜபாளையம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராஜபாளையத்தில் இன்று மாலை நடைபெற உள்ள தொழில் பாதுகாப்பு மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் ரெயில் நிலையத்தில் நிரூபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் ஏற்படக் கூடிய தொழில் நெருக்கடி காரணமாக, ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சாலைகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மூடு விழாக்களை கண்டு கொண்டு இருக்கிறது.
அரசின் கொள்கை காரணமாக தொழில் முனைவோர், உழைப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசு இது குறித்து பொருட்படுத்தாமல் இருப்பது இன்னொரு துயரமான பகுதி.
இதற்கான மாற்று வழி கண்டுபிடிக்க ராஜபாளையத்தில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதை நாடாளுமன்றத்திலும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க உள்ளோம்.
முரண்பட்ட கருத்துக்களை நீதிபதிகள் கொடுப்பது புதிதல்ல. அரசியல் நெருக்கடியை உருவாக்கி கொண்டே இருக்கும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதப்படுத்தாமல் தீர்ப்பு வழங்க முடியும் என்றால் நீதிமன்றம் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் ஜனநாயக செயல்பாட்டை மேலும் முடக்கும் என்பது எனது கருத்து.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified






