search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனிடம் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் விலகல்? - எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார்கள்
    X

    தினகரனிடம் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் விலகல்? - எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார்கள்

    ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலியால் தினகரனிடம் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TTVDhinakaran #MLAsDisqualification

    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் டி.டி.வி.தினகரனை முதலில் ஆதரித்தனர். ஜக்கையன் எம்.எல்.ஏ. விலகியதால் அவரது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

    இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றக்கோரி மனு கொடுத்ததால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். அதன்படி 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் ஒருவரான தங்கதமிழ்செல்வன் தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் டி.டி.வி.தினகரன் அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    தங்க தமிழ்செல்வன் நாளை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு கோர்ட்டில் மனு செய்ய திட்டமிட்டுள்ளார். மற்ற 17 பேரும் வழக்கை சந்திக்க போவதாக டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார். ஆனால் தங்க தமிழ்செல்வன் பாணியில் மேலும் சிலரும் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதற்கிடையே டி.டி.வி. தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அந்த அணியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான பொறுப்பை மூத்த அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.

    அந்த மூத்த அமைச்சர் கடந்த 2 தினங்களாக டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது அவர் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு சலுகைகளை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவரது சமரச பேச்சுவார்த்தை பயனாக டி.டி.வி. தினகரனின் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலர் அணி மாறும் மனநிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது பெயர் விவரங்களை தெரிவிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர்.

    அ.தி.மு.க. வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிவித்தனர். 3-வது நீதிபதியின் தீர்ப்பை பொறுத்து அவர்கள் 8 பேரும் தங்களது முடிவை உனடியாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சந்திக்க வைக்க ஒருசாரார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நேற்று இரவு வரை ரகசியமாக நடந்து வந்த இந்த திட்டங்கள் இன்று அரசியல் வட்டாரத்தில் மெல்ல கசிந்து உள்ளன.


    இதன் காரணமாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 21ஆக உள்ளது. டி.டி.வி. தினகரனையும் சேர்த்தால் அ.தி.மு.க.வுக்கு எதிராக 22 பேர் உள்ளனர். 8 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 14 ஆக குறையும்.

    இதற்கிடையே தங்க தமிழ்செல்வனையும் தினகரன் அணியில் இருந்து பிரித்து இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. அமைச்சர் பதவி தருவதாக அவரிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இதை தங்க தமிழ்செல்வன் மறுத்து உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னால் நான் ஏன் அ.தி.மு.க. தலைவர்களை எதிர்த்து போராட்டம் நடத்த போகிறேன். எனவே என்னிடம் ரகசிய பேச்சு நடந்ததாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை” என்றார். #TTVDhinakaran #MLAsDisqualification

    Next Story
    ×