search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற சொல்வதா? - குமாரசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
    X

    காவிரி திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற சொல்வதா? - குமாரசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    காவிரி திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற சொல்வதா? என்று குமாரசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin #Kumaraswamy

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, நேற்றைய தினம் டெல்லி சென்ற கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, “காவிரி வரைவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிட்டிருக்கிறேன்” என்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேவையில்லாத ஒன்றைப் பற்றிக் கூறியிருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவிரி வரைவுத் திட்டம் கர்நாடக மாநில அரசுக்கும் அளிக்கப்பட்டு, அதன் மீது கருத்துகள் பெறப்பட்டு, அந்த மாநில அரசு கூறிய சில திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இறுதியில்தான் உச்சநீதி மன்றம் காவிரி வரைவுத் திட்டத்தை உறுதி செய்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜூன் 1-ந்தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதுமட்டுமின்றி, கர்நாடக முதல்-அமைச்சர் தற்போது முன் வைக்கும் வாதங்கள் எல்லாம் முன்பே உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்ட வாதங்களே தவிர, புதிய வாதங்களோ மறுபரிசீலனை செய்திட வேண்டிய முக்கியமான கருத்துகளோ இல்லை.

    இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக, தங்கள் மாநிலப் பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு அளிக்காமல், வேண்டுமென்றே வழக்கம் போல் தாமதம் செய்யும் போக்கைப் பின்பற்றி வருகிறது கர்நாடக அரசு.

    “ஜூன் 12-ந்தேதிக்குள் பிரதிநிதியின் பெயரைக் கொடுங்கள்” என்று மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மேலும் சில விளக்கங்கள் என்ற அடிப்படையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடப் போகிறோம் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் கர்நாடக முதல்-அமைச்சர் “புதிய பிரச்சினைகளை”க் கிளப்பியிருப்பது, அவர் முதல்- அமைச்சராகப் பொறுப் பேற்றுக் கொண்டவுடன் அளித்த பேட்டிகளுக்கும், வெளிப்படையாகத் தெரிவித்த கருத்துகளுக்கும் முற்றிலும் மாறாகமுரணாக இருக்கிறது.


    குறிப்பாக இரு மாநில மக்களும் உடன்பிறவாத சகோதரர்கள் என்று கூறிக் கொண்டே, இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க விடாமல், பின்னடைவு செய்யும் நோக்கத்துடன் முடக்கி வைக்கும் போக்கை கர்நாடக மாநில முதல்- அமைச்சர் மேற்கொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்லாமல், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா காவிரிப் பிரச்சினையில் பின்பற்றிவந்த அதே எதிர்மறை அணுகுமுறையின் தொடர் கதையாகவும் தெரிகிறது.

    அண்மையில், கர்நாடக மாநிலத்திற்காக தேர்தல் லாபத்திற்காக அரசியல் காரணங்களின் அடிப்படையில், மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுத்தியது மத்திய பா.ஜ.க. அரசு.

    அதற்கு இணையாக, கர்நாடக அரசு கடந்த காலங்களில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்டங்களில் வேண்டுமென்றே கால தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. இப்போது, மத்திய அரசும் கர்நாடகத்திற்கு ஒரு கடிதத்தை மட்டும் எழுதி விட்டு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, அமைதிகாக்கிறது.

    தமிழக முதல்- அமைச்சரையும், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளையும் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு சந்திக்க மறுத்த பிரதமரும், நீர் வளத்துறை அமைச்சரும் கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கு மட்டும் நேரம் ஒதுக்கித் தாராளமாக சந்திக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதிடவில்லை என்று புலப்படுகிறது.

    இப்போது டெல்லியில் நடந்திருக்கும் இந்தச் சந்திப்பின் மூலமாக, கர்நாடக முதல்வர் காவிரியில் புதிய பிரச்சினைக்கு வித்திட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மத்தியிலே உள்ளவர்கள் விரும்பித் துணை போயிருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    உச்சநீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பளித்து விட்ட நிலையில், காவிரிப் பிரச்சினையில் மேலும் மேலும் குழப்பத்தையும், நெருக்கடியான நிலையையும் நீட்டிக்க மத்திய பா.ஜ.க. அரசும், தனது நாடாளுமன்றத் தேர்தல் லாபத்தை மனதில் கொண்டு, கர்நாடக அரசுடன் இணக்கமாகச் செயல்படுவது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் ஓரவஞ்சனை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    கர்நாடக கண்ணில் வெண்ணையையும், தமிழக கண்ணில் சுண்ணாம்பையும் தடவ எத்தணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேடம் வெகுநாட்களுக்கு நிற்காது.

    ஆகவே, இனியும் தாமதிக்காமல் கர்நாடக அரசு தனது மாநிலத்திற்கான பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு உடனடியாக அளித்து, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு கடிதம் எழுதி விட்டோம் என்று காத்திராமல் மத்திய அரசும் காவிரி வரைவுத் திட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிகாரத்தின் கீழ், கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரைப் பெற வேண்டும் என்றும், கர்நாடக அரசு பெயரைக் கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுவரை தாமதத்திற்கு மேல் தாமதம் செய்தது போதும்; இனியும் எந்தவிதத் தாமதத்தையும் தமிழகம் தாங்கிக் கொள்ளாது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Kumaraswamy

    Next Story
    ×