search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery Managment Commission"

    ஜூலை மாதம் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட 2-ந்தேதி நடைபெறும் முதலாவது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட முடிவு செய்துள்ளது.#CauveryManagmentCommission #Cauveryissue

    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அதை கெஜட்டில் வெளியிட்டது.

    அடுத்தகட்டமாக காவிரி ஆணையை உறுப்பினர்களை நியமிக்குமாறு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம், கேரளா, புதுவை அரசுகள் தங்கள் பிரதிநிதிகளை நியமித்த நிலையில் கர்நாடக அரசு தாமதப்படுத்திவந்தது.

    இதையடுத்து மத்திய அரசு தாமாகவே முன்வந்து கர்நாடகத்தின் பிரதிநிதிகளை அதிரடியாக நியமித்தது. இதற்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் வருகிற ஜூலை 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் மாதந்தோறும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவரங்களை நடுவர் மன்றம் குறிப்பிட்டு உள்ளது. அதன் படி ஜூலை மாதம் தமிழகத்துக்கு 34 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    2-ந்தேதி நடைபெறும் முதலாவது ஆனைய கூட்டத்தில் ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவிட முடிவு செய்துள்ளது.

     


    காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டத்தில் என்னென்ன பொருள் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் 4 மாநில பிரதிநிதிகளுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதில் முதலாவது தவணையாக ஜூலை மாதத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியது பற்றி இடம் பெற்றுள்ளது. ஜூலை மாதத்தின் 30 நாட்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை 3 இடைவெளிகளில் இந்த தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் 3 மாநிலங்களிலும் உள்ள 8 அணைகளின் நீர் இருப்பு விவரம், பாசன பரப்பு கடந்த ஜூன் மாதத்தில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    முதலாவது காவிரி ஆணையை கூட்டத்துக்கு மத்திய அரசின் பிரதிநிதியான மசூத்உசைன் தலைமை தாங்குகிறார். கேரளா, தமிழ்நாடு, புதுவை, கர்நாடக மாநில நீர்ப்பாசன துறை செயலாளர்கள் டிங்கு பிஸ்வால், எஸ்.கே.பிரபாகர், ஏ.அன்பரசு, ராஜேஷ் சிங், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் மத்திய வேளாண்மை- நீர் வளத்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். #CauveryManagmentCommission #Cauveryissue

    காவிரி ஆணைய செயல்பாடுகளை முடக்கிய கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசு அதன் இயல்பைக் காட்டிவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்வரை காத்திருக்க முடியாது என்றும், கர்நாடக விவசாயிகளின் தேவைகளுக்காக கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி அறிவித்திருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாததால் கர்நாடகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் போலவும், ஆணையம் அமைக்கப்படாததற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் தான் காரணம் என்பதைப் போலவும் தோற்றத்தை ஏற்படுத்த கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி முயல்கிறார். இது காவிரி விவகாரத்தை திசைதிருப்பும் செயலாகும்.

    உண்மையில் காவிரிப் பிரச்சினையில் இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளுக்கும் கர்நாடகம் தான் காரணம் ஆகும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிக்கை ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆணையத்தில் தமிழகத்தின் சார்பில் இடம் பெறும் உறுப்பினரின் பெயர் அடுத்த நாளே அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர்.

    அப்போதே கர்நாடக அரசும் அதன் சார்பில் காவிரி ஆணையத்தில் இடம்பெறும் உறுப்பினரின் பெயரை அறிவித்திருந்தால் காவிரி ஆணையம் 20 நாட்களுக்கு முன்பே அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்திருக்கும். அவ்வாறு வந்திருந்தால் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இருந்திருக்காது.காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் குறைந்த அமைப்பு என்றாலும், அதைக்கூட ஏற்றுக் கொள்ள கர்நாடகம் தயாராக இல்லை.


    மாறாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்பட்டு விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கர்நாடக அணைகளில் உள்ள நீரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.

    தமிழ்நாட்டுக்கு நடப்பு ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 10 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டு விட்டதைக் காரணம் காட்டும் குமாரசாமி, அதே போல் கர்நாடகம் அதன் தேவைக்காக தண்ணீரை பயன்படுத்திக் கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது என்று கூறுகிறார். இது அபத்தமான வாதம் ஆகும். தமிழ்நாட்டுக்கு கர்நாடக உளமாற தண்ணீர் திறந்து விடவில்லை. மாறாக கபினி அணை நிரம்பி வழிந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி தான் தண்ணீர் திறந்து விட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக ஏதேனும் சட்ட சிக்கலை ஏற்படுத்தி, மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்று காலதாமதம் செய்வது குமாரசாமியின் நோக்கமாகும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியில் இருந்தாலும் உச்சநீதிமன்றம்-நடுவர் மன்றம் என எந்தவிதமான சட்ட அமைப்பின் உத்தரவையும் மதிப்பதில்லை. இப்படிப் பட்ட அரசு பதவியில் நீடிக்க எந்த தகுதியுமில்லை.

    காவிரி விவகாரத்தில் கர்நாடகம் செய்யும் அத்து மீறல்களை மத்திய ஆட்சியாளர்கள் கண்டிக்காதது இன்னும் கொடுமையானது ஆகும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை பரிந்துரைக்க கர்நாடகத்துக்கு அளிக்கப்பட்ட அவகாசம் கடந்த 12-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்தின் பிரதிநிதியை உடனடியாக நியமிக்க ஆணையிடுவதுடன், ஆணைய செயல் பாடுகளை 20 நாட்களுக்கு மேலாக முடக்கி வைத்திருக்கும் கர்நாடகம் மீது மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் பணி முடிந்து விட்டதாக தமிழக ஆட்சியாளர்கள் கருதக்கூடாது.

    ஆணையத்தின் செயல் பாடுகளை முடக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

    காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரியில் தமிழகம் அதன் பங்கு தண்ணீரைப் பெற கர்நாடகம் எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவற்றை கர்நாடக முதல்வர் குமாரசாமி அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது அதைத் தான் காட்டுகிறது.

    11 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இம்மாதம் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட அதிகாரம் குறைந்த அமைப்பு தான் என்றாலும் கூட, காவிரி சிக்கலுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு ஏற்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் அந்த ஏற்பாட்டை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒருவகையில் தியாகம் ஆகும். தங்களின் உரிமைகளை ஓரளவு இழந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களே இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இதனால் பயனடையக் கூடிய மாநிலமான கர்நாடகம் இதை ஏற்று செயல்படுத்தியிருக்க வேண்டும்.

    ஆனால், வழக்கம் போலவே கர்நாடக வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. ‘‘ கர்நாடக அணைகளின் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளவீடு செய்வதற்கான அதிகாரமும், கர்நாடக உழவர்கள் எத்தகைய பயிர்களை பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வ மற்ற நடவடிக்கை; இது எங்களுடைய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் தீங்கு ஆகும்’’ என்று குமாரசாமி கூறியிருக்கிறார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் அவர் சந்தித்திருக்கிறார். மற்றொரு புறம் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசன மந்திரி சிவக்குமார், காவிரி ஆணையத்திற்கு கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

     


    கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி, நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆகிய இருவரும் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று தான். காவிரி மேலாண்மை ஆணையத்தை கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பதைத் தான் அவர்கள் வேறு வேறு வார்த்தைகளில் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழகத்தின் உரிமைகளை மறுப்பதற்காக சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரான நடவடிக்கைகளை கர்நாடகம் மேற் கொண்டு வரும் நிலையில், தமிழக ஆட்சியாளர்களோ காவிரி உரிமையை வென்றெடுத்து விட்டதாகக் கூறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் போது, ஆட்சியாளர்கள் வெற்றி விழா கொண்டாடுவது மிகவும் குரூரமான நகைச் சுவை ஆகும். அணைகளில் 56 டி.எம்.சி தண்ணீர் இருந்தாலும் கூட தமிழகத்துக்கு தர மறுக்கும் கர்நாடகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ, தண்ணீர் பெற்றுத் தரும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியாத அரசு தமிழகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான். இவர்களை வரலாறும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

    காவிரி பிரச்சினை குறித்த தீர்ப்பை செயல்படுத்தும் பொறுப்பை மத்திய அரசுக்கு தான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதால், தமிழகத்திற்கு நீதி வழங்கும் கடமையை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும். கர்நாடக அணைகளை அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இது குறித்த தங்களின் உத்தரவுகளை கர்நாடகம் ஏற்க மறுத்தால், அரசியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின்படி அங்கு அரசியல் அமைப்புச் சட்டப்படியான கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அறிவித்து, கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுனரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    மற்றொரு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் பான்மையினரால் தூண்களை பிடிக்காமல் நிற்க முடியாது என்ற அளவுக்கு அவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்ற உண்மை இதயத்தைச் சுடுகிறது.

    சென்னையிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக் கட்டமைப்பு ஆலமரம் போல பரந்து விரிந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

    போதைப் பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் வருவோரின் விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதுடன் அவர்களுக்கு ரூ.10,000க்கும் குறையாமல் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் பெற்றோர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்தல்/ சிக்காமல் இருத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதை மருந்துப் பழக்க மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு, காவல்துறை, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் என அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

    காவிரி செயல்திட்டத்தை திருத்தும் வரை கர்நாடக உறுப்பினர்களை அறிவிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #CauveryManagmentCommission

    பெங்களூர்:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சமீபத்தில் மதுரையில் கூறுகையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் என்றார். ஆனால் இரண்டு நாட்களில் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுவிட்டது.

    மழையால் கபினி அணை நிரம்பியதால் வேறுவழியின்றி உபரி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது. மழை நின்றதால் தண்ணீரை நிறுத்தி விட்டது. இதில் கர்நாடகத்தின் பங்கு எதுவும் இல்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிக்காமல் மீண்டும் கர்நாடகம் முட்டுக்கட்டை போடுகிறது. இதுதொடர்பாக குமாரசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த செயல் திட்டத்தில் (ஸ்கீம்) கர்நாடகத்துக்கு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னதாக செயல் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவரை உறுப்பினர்களை அறிவிக்க மாட்டோம்.

    இதனால் என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

     


    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால், கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளப்பது, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர்விடுவது, எந்தப் பயிர்கள் நடவு செய்வது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படும்.

    சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்தப் பயிரை நடவு செய்ய வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் தான் முடிவு செய்யும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல் திட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து நிறைவேற்றப்பட வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கர்நாடகம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் இதுகுறித்து விவாதம் செய்வதில் தவறியுள்ளனர். என்றாலும் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி அண்டை மாநிலங்களுடன் தண்ணீரைப் பங்கிட்டு கொள்வோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #CauveryManagmentCommission

    காவிரி திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற சொல்வதா? என்று குமாரசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin #Kumaraswamy

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் காலம் தாழ்த்திவிட்டு, நேற்றைய தினம் டெல்லி சென்ற கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, “காவிரி வரைவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் முறையிட்டிருக்கிறேன்” என்று, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேவையில்லாத ஒன்றைப் பற்றிக் கூறியிருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவிரி வரைவுத் திட்டம் கர்நாடக மாநில அரசுக்கும் அளிக்கப்பட்டு, அதன் மீது கருத்துகள் பெறப்பட்டு, அந்த மாநில அரசு கூறிய சில திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இறுதியில்தான் உச்சநீதி மன்றம் காவிரி வரைவுத் திட்டத்தை உறுதி செய்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜூன் 1-ந்தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதுமட்டுமின்றி, கர்நாடக முதல்-அமைச்சர் தற்போது முன் வைக்கும் வாதங்கள் எல்லாம் முன்பே உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்ட வாதங்களே தவிர, புதிய வாதங்களோ மறுபரிசீலனை செய்திட வேண்டிய முக்கியமான கருத்துகளோ இல்லை.

    இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக, தங்கள் மாநிலப் பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு அளிக்காமல், வேண்டுமென்றே வழக்கம் போல் தாமதம் செய்யும் போக்கைப் பின்பற்றி வருகிறது கர்நாடக அரசு.

    “ஜூன் 12-ந்தேதிக்குள் பிரதிநிதியின் பெயரைக் கொடுங்கள்” என்று மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மேலும் சில விளக்கங்கள் என்ற அடிப்படையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடப் போகிறோம் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகக் கர்நாடக முதல்-அமைச்சர் “புதிய பிரச்சினைகளை”க் கிளப்பியிருப்பது, அவர் முதல்- அமைச்சராகப் பொறுப் பேற்றுக் கொண்டவுடன் அளித்த பேட்டிகளுக்கும், வெளிப்படையாகத் தெரிவித்த கருத்துகளுக்கும் முற்றிலும் மாறாகமுரணாக இருக்கிறது.


    குறிப்பாக இரு மாநில மக்களும் உடன்பிறவாத சகோதரர்கள் என்று கூறிக் கொண்டே, இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க விடாமல், பின்னடைவு செய்யும் நோக்கத்துடன் முடக்கி வைக்கும் போக்கை கர்நாடக மாநில முதல்- அமைச்சர் மேற்கொள்வதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்லாமல், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா காவிரிப் பிரச்சினையில் பின்பற்றிவந்த அதே எதிர்மறை அணுகுமுறையின் தொடர் கதையாகவும் தெரிகிறது.

    அண்மையில், கர்நாடக மாநிலத்திற்காக தேர்தல் லாபத்திற்காக அரசியல் காரணங்களின் அடிப்படையில், மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுத்தியது மத்திய பா.ஜ.க. அரசு.

    அதற்கு இணையாக, கர்நாடக அரசு கடந்த காலங்களில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்டங்களில் வேண்டுமென்றே கால தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. இப்போது, மத்திய அரசும் கர்நாடகத்திற்கு ஒரு கடிதத்தை மட்டும் எழுதி விட்டு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, அமைதிகாக்கிறது.

    தமிழக முதல்- அமைச்சரையும், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளையும் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு சந்திக்க மறுத்த பிரதமரும், நீர் வளத்துறை அமைச்சரும் கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதற்கு மட்டும் நேரம் ஒதுக்கித் தாராளமாக சந்திக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் பிரதமர் மோடி ஒரு பொருட்டாகவே கருதிடவில்லை என்று புலப்படுகிறது.

    இப்போது டெல்லியில் நடந்திருக்கும் இந்தச் சந்திப்பின் மூலமாக, கர்நாடக முதல்வர் காவிரியில் புதிய பிரச்சினைக்கு வித்திட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மத்தியிலே உள்ளவர்கள் விரும்பித் துணை போயிருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    உச்சநீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பளித்து விட்ட நிலையில், காவிரிப் பிரச்சினையில் மேலும் மேலும் குழப்பத்தையும், நெருக்கடியான நிலையையும் நீட்டிக்க மத்திய பா.ஜ.க. அரசும், தனது நாடாளுமன்றத் தேர்தல் லாபத்தை மனதில் கொண்டு, கர்நாடக அரசுடன் இணக்கமாகச் செயல்படுவது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் ஓரவஞ்சனை மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    கர்நாடக கண்ணில் வெண்ணையையும், தமிழக கண்ணில் சுண்ணாம்பையும் தடவ எத்தணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வேடம் வெகுநாட்களுக்கு நிற்காது.

    ஆகவே, இனியும் தாமதிக்காமல் கர்நாடக அரசு தனது மாநிலத்திற்கான பிரதிநிதியின் பெயரை மத்திய அரசுக்கு உடனடியாக அளித்து, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு கடிதம் எழுதி விட்டோம் என்று காத்திராமல் மத்திய அரசும் காவிரி வரைவுத் திட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிகாரத்தின் கீழ், கர்நாடக மாநில அரசிடமிருந்து பிரதிநிதியின் பெயரைப் பெற வேண்டும் என்றும், கர்நாடக அரசு பெயரைக் கொடுக்கத் தவறினால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுவரை தாமதத்திற்கு மேல் தாமதம் செய்தது போதும்; இனியும் எந்தவிதத் தாமதத்தையும் தமிழகம் தாங்கிக் கொள்ளாது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Kumaraswamy

    நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #Cauverywater

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் புதிதாக கரகம்மா மற்றும் லகுமம்மா தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா டைபெற்றது. இந்த விழா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜை, கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சண்டி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு விழா கமிட்டி சார்பில் மேள, தாள முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

    தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதற்கு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதே காரணமாகும். மேலும் 177 டி.எம்.சி. தண்ணீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.


    எங்கள் பகுதியில் (மண்டியா) 4 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை, நீர்மட்டம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமை, ஆணையத்திடம் உள்ளது. நீர் இருப்பு குறித்து ஆராய்ந்து, என்ன மாதிரியான பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்று அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அதன்படி விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, பயிர்களை நடவு செய்ய வேண்டும்.

    காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசனின் நிலைப்பாடு மீண்டும் பேச்சுவார்த்தை என்பதாக இருப்பினும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால், அனைத்து தரப்பும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். தேவேகவுடாவின் வருகையையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #DeveGowda #Cauverywater

    மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். #cauverymanagementathority
    புதுடெல்லி:

    தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பொதுவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

    இதுதொடர்பாக, உறுப்பினர் பட்டியலை சமர்பிக்குமாறு மத்திய அரசு 4 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் பட்டியல் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.



    கர்நாடகா மாநிலம் மட்டும் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்காமல் தாமத்தித்து வந்ததால் மத்திய அரசின் கண்டனத்துக்கு ஆளானது..

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நீர்வளத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், அதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்ட குமாரசாமி, ஆணையத்தில் மாற்றங்கள் செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் கர்நாடக உறுப்பினர்களின் பட்டியலை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #cauverymanagementathority #cauverywater #karnatakaCM #kumaraswami
    ×