search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumaraswami"

    கர்நாடகாவில் மாணவர்களுக்கான தேர்வில், மாநில முதல்வரை கேலி செய்யும் வகையில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். #BangloreTeacherDismissed
    பெங்களூரு:

    பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில்,  அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

    ‘விவசாயிகளின் நண்பன் யார்?
    அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.

    அந்த கேள்வி இடம்பெற்றிருந்த வினாத்தாளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் எட்டியூரப்பா ஆகியோர் குறித்த மீம்ஸ்களும் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.



    இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவேந்திரா கூறுகையில், ‘இந்த கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டோம். பள்ளியின் தலைமைக்கு தெரியாமலேயே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியினரையும், அரசியலையும் ஊக்குவிக்கும் எண்ணத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்’ என்றார். #BangloreTeacherDismissed 

    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி, பிரதமர் மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். #Kumaraswamy #NarendraModi #KarnatakaFloods
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் கடந்த மாதம் கடும் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை சரிசெய்ய உள்துறை மந்திரியிடம் ஏற்கனவே நிதியுதவி கேட்டு கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்ற உள்துறை மந்திரி மத்திய ஆய்வுக்குழு வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய விரைவில் கர்நாடகா அனுப்பிவைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆய்வுக்குழுவின் முடிவை பொருத்து எவ்வளவு நிதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு உடன் இருந்தனர். #Kumaraswamy #NarendraModi #KarnatakaFloods
    ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்து தென்னிந்திய கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசனை நடத்தினார். #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கனகதுர்கா ஆலையத்துக்கு வழிபட வந்த கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமியை ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தென்னிந்திய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக இணைவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, இதுதொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaRains
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதிகப்படியாக கொட்டி தீர்த்ததை அடுத்து, அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தக்‌ஷினா கன்னடா, உடுப்பி, ஹஸன், ஷிமோகா, சிக்கமகலரு மற்றும் உத்தர கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பகுதிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaRains
    கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்டி, நம்பிக்கையூட்டும் வகையில், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று வயலில் இறங்கி நாற்று நட்டார். #KarnatakaCM #Kumaraswami
    பெங்களூரு:

    இந்தியா முழுவதும் நலிவடையும் தொழில்களில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு விதங்களிலும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதுமான விபரீத முடிவுகளை விவசாயிகள் எடுத்துவருகின்றனர்.

    தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சீதாபுரா கிராமத்துக்கு இன்று சென்ற கர்நாடக முதல்மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய முதல்மந்திரி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் முதல்மந்திரி ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் தாம் இருப்பதாகவும், அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். #KarnatakaCM #Kumaraswami
    கர்நாடக சட்டசபையில் 11 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில், முதல்மந்திரியாக குமாரசாமி பதவியேற்று நடைபெறும் முதல் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் இந்த மாதம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டாக சுமார் 2.18 கோடி ரூபாயை அறிவித்திருந்தார்.

    மேலும், விவசாயிகளின் சுமார் 40 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதையடுத்து, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சுமார் 11 நாட்கள் நடைபெற்ற கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. மேலும், வரும் நவம்பர் மாதத்தில் அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KarnatakaAssembly
    மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். #cauverymanagementathority
    புதுடெல்லி:

    தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பொதுவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

    இதுதொடர்பாக, உறுப்பினர் பட்டியலை சமர்பிக்குமாறு மத்திய அரசு 4 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் பட்டியல் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.



    கர்நாடகா மாநிலம் மட்டும் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்காமல் தாமத்தித்து வந்ததால் மத்திய அரசின் கண்டனத்துக்கு ஆளானது..

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நீர்வளத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், அதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்ட குமாரசாமி, ஆணையத்தில் மாற்றங்கள் செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் கர்நாடக உறுப்பினர்களின் பட்டியலை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #cauverymanagementathority #cauverywater #karnatakaCM #kumaraswami
    காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #jayakumar #cauveryissue
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஆலையை மூடியதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் அந்த ஆலையை திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும் என்றும் தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக மக்களை குழப்பவே முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் நீர் திறக்கும் முழு உரிமை அந்த ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கமலஹாசன் கர்நாடகா சென்று முதல்மந்திரி குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது என பதிலளித்துள்ளார். #jayakumar #cauveryissue
    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் அணிலாகவும், பாலமாகவும் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். #cauveryissue
    பெங்களூரு:
        
    காவிரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்றிருந்தார். இன்று காலை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

    நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இங்கு வரவில்லை, மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன் என்றார். குறுவை சாகுபடிக்கான காலம் வந்துவிட்டதாகவும், அதனை நினைவுபடுத்தி அதற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி, இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறியுள்ளார். மேலும், அரசியல் தேவைகளை விட விவசாயிகளின் தேவையே மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், இரு மாநிலங்கள் மட்டுமன்றி, தேசிய அளவிலான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியுடனான இந்த சந்திப்பு கூட்டணி குறித்தது அல்ல, மக்களின் நலனுக்கானது, காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என்றும் கமல் தெரிவித்துள்ளார். #cauveryissue
    கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #kaalaissue
    பெங்களூரு:

    நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளது. தமிழக அரசியலில் ரஜினி தம்மை நிலைப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் காலா திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து அறிவித்தது.

    இச்சம்பவம் தொடர்பாக பேசிய ரஜினி, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தகசபை பார்த்துக்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமிக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை எனவும், மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். #kaalaissue
    ×