என் மலர்
செய்திகள்
சென்னை:
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, டி.டி.வி.தினகரன் மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவு வழக்கு தொடர்ந்தது.
எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி, லண்டன் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்கவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், தினகரன் தரப்பு கோரிய ஆவணங்களை எல்லாம் எழும்பூர் கோர்ட்டு வழங்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ள வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, ‘ஒரே பரிவர்த்தனை தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 2 வழக்குகளையும் விசாரிக்க தடை விதித்துள்ளது’ என்று கூறினார்.
இதையடுத்து 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மட்டும் நீதிபதி ரத்து செய்தார். #TTVDhinakaran #Foreigncurrencycase
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில் புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.
ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GreenWayRoad
ஆண்டிப்பட்டி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி வந்தார். அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி- எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரணை செய்ய 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர், உங்களை தவிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உங்கள் நிலைப்பாடு என்ன?
நான் வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதுதான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த விசாரணை செய்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்புவராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீக்கிரமாக தீர்ப்பை வழங்கினால் தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும். 17 பேர் செல்லும் பாதை சரி. அதேபோல நான் செல்லும் பாதையும் சரி.
கேள்வி- மனுவை வாபஸ் பெறுவதில் பொறுமை காக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறியுள்ளீர்களே?
மனுவை வாபஸ் வாங்குவதில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறவில்லை. அதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளது. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா? அல்லது 3 வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா? ஒருவேளை மனுவாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படுமா? அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது.
பாராளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய கோர்ட்டு உத்தரவின்படி நான் தேர்தலில் நிற்க முடியும். ஆனால் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவை.

இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.
கேள்வி- தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடும் கவர்னரை தடுத்தால் 7 ஆண்டு சிறை அபராதம் விதிப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளதே?
இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், இந்தியாவை ஆள்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? மத்தியில் இருப்பவர்களும், மாநிலத்தில் இருப்பவர்களும் மக்களை அடக்கி ஆள முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
கவர்னர் ஆய்வு செய்யட்டும் அதில் எங்களுக்கு எந்த தவறும் இல்லை. ஆனால் அதேபோல பசுமை சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் நடைபெற்ற போது ஏன் மக்களை சந்திக்கவில்லை. ஆய்வு யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இதேபோல அடக்கு முறை தொடர்ந்தால் வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
கேள்வி-கவர்னர் ஆய்வினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக எங்கள் பணியைதான் அவர் எளிதாக்குகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
கவர்னர் ஆய்வு நடத்துவதால் எந்த பணி அரசு எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமாரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசு தான் இது என்பதை நிரூபித்து வருகின்றனர்.
கேள்வி- சமீபகாலகமாக உங்களுக்கும், உங்கள் அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வருகிறதே?
இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத்தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொது செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Elecetion
கரூர்:
கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் இன்று கரூர் வந்தார்.
இதையடுத்து தான் தோன்றிமலை பகுதியில் கட்சி கொடியேற்றி வைத்த அவர், திறந்த வேனில் நின்றவாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அவைத்தலைவர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டி.டி.வி.தினகரன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கே: கவர்னரின் ஆய்வு பணியை தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளதே?
ப: இது ஜனநாயக நாடா? அல்லது அதிபர் ஆட்சி நடைபெறும் பாகிஸ்தானா? என்று தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்த ஆட்சி நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ? குற்றம் சாட்டப்பட்ட கவர்னர் சுற்றுப்பயணம், ஆய்வு மேற்கொள்வது தவறு. இதனை கண்டிக்கிறோம்.
கவர்னர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கவர்னர்கள் இருந்துள்ளனர். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது கவர்னரின் சுற்றுப்பயணம்-ஆய்வை கண்டித்து ஜனநாயக முறையில் ஒரு அரசியல் கட்சி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துகிறது. இதற்காக வழக்கு தொடர்வோம் என்று சொல்லலாம். அதைவிட்டு விட்டு விட்டு 7 வருடம் சிறை தண்டனை அளிப்போம் என்று கூறுவது மிரட்டும் தொனியில் உள்ளது.
கே: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் விளக்க வேண்டும். சேலம், முதல்வரின் சொந்த மாவட்டம். எனவே அவரே நேரிடையாக மக்களை சந்தித்து விளக்கலாம்.
கே: கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்துவீர்களா?
ப: என்னை பொறுத்த வரை மக்கள் பிரச்சினைகள், மக்கள் விரும்பாத திட்டங்களை எதிர்த்து போராடுவதைத்தான் விரும்புகிறேன். கவர்னர் விவகாரத்தை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.
கே: இயக்குனர் கவுதமன் கைது பற்றி?
ப: தமிழகத்தில் அரசை எதிர்த்து போராடுபவர்கள் மீது அடக்குமுறை கையாளப்படுகிறது. தமிழகத்தில் நடப்பது ஆட்சியே கிடையாது.அடக்குமுறை ஆட்சிதான் நடக்கிறது.
கே : கமல் உள்ளிட்டவர்கள் தேர்தல் கூட்டணி நோக்கி அரசியல் பயணம் மேற் கொண்டிருக்கிறார்களே?
ப: தேர்தல் வரும் போது தக்க நேரத்தில் முடிவு செய்வோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தான் தேர்தல் கூட்டணி வைக்கப்படும்.
கே: தூத்துக்குடி சம்பவ விசாரணை குறித்து உங்கள் கருத்து என்ன?
ப:தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்வரின் கீழ் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணையால் எந்த உண்மையும் வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #GovernorBanwarilal
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நடந்த இணைப்பு விழாவில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.-
இன்று நடைபெறும் கூட்டத்திற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.
நான் ஈரோட்டுக்கு வரும் முன் ஈரோட்டை சேர்ந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரி என்னிடம் வந்து நீங்கள் சிறிது நேரம் கழித்து ஈரோடுசெல்லுங்கள் என்றார். அதற்கு நான் ஏன் சிறது நேரம் கழித்து செல்ல வேண்டும் என்றேன். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி முதல்வர் சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் தாமதமாக செல்ல வேண்டும் என்றார்.
அதை மீறி நாங்கள் வந்த போது எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் தங்கள் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். யார் இவ்வாறு செய்வார்கள்?. ரவுடிகள் தான் ரோட்டில் செல்லும் வாகனங்களை தடுப்பார்கள். காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இந்த ஆட்சி இன்னும் இரண்டு மாதத்தில் கவிழ்ந்து விடும். அனைவரும் வீட்டுக்கு போய் விடுவார்கள்.
ஆர்.கே.நகரில் எனக்காக பிரச்சாரம் செய்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி. அவர் என்னை பார்த்து கேட்கிறார். யார் இந்த தினகரன்? என்று.
2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு அளிக்க வந்த போது என் வீட்டில் இருந்தவர் தான் இந்த எடப்பாடி. என்னை கட்சியில் உறுப்பினர் இல்லை என்கிறார். அப்படி என்றால். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்காக ஏன் பிரச்சாரம் செய்தார்?.
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வீட்டிற்கு ரூ.6ஆயிரம் வீதம் ரூ.150 கோடி வரை பணம் கொடுத்தனர். 32 அமைச்சர்களும் தெரு தெருவாக சுற்றினார்கள். ஆளும் கட்சி என்ற அதிகாரமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் நான் தான் வெற்றி பெற்றேன்.
அதில் எனக்கு வருத்தம் என்ன வென்றால். நானே இரட்டைஇலை சின்னத்தை தோற்கடித்து விட்டேனே என்று தான். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. தற்போது அ.தி.மு.க.கட்சி துரோகிகள் கையில் உள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக வந்தாலும், வராவிட்டாலும் இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை என்றால். 18 பேரும் மீண்டும் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அப்போது இந்த ஆட்சி கவிழ்வது உறுதி. இதை காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தினகரன் பேசினார். #TTVDinakaran #AMMK
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் சூளுரைத்தவர் நமது இதய தெய்வம் ஜெயலலிதா. எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. செய்யும் நாடகம் பொதுமக்களிடம் எடுபடாது.

தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #sengottaiyan #EdappadiPalanisamy
பாப்பிரெட்டிப்பட்டி:
8 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிகள் தருமபுரி மாவட்டம் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நிலம் அளவிடும் பணிகளை பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-
இந்த திட்டம் தேவையற்றது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரன் கருத்து கூறி இருக்கிறார். இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயன்தராது என்றும், இந்த திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். அவரது கருத்தையே நானும் கூறுகிறேன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் முலம் விவசாயம் செய்து வருகின்றனர். மஞ்சவாடி பகுதியில் தென்னை, வாழை மற்றும் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பண பயிர்களால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. எனவே விவசாயிகள் வயிற்றில் அடித்து அவர்களது நிலங்களை பறித்து இந்த பசுமை வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும். 8 வழி திட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்ல சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

சேலத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்கனவே விழுப்புரம் வழி சாலை, தருமபுரி வழி சாலை உள்ளது. மேலும் அரூர் சாலையும் உள்ளது. இந்த சாலைகளை விரிவுப்படுத்தி சாலைகளை சரி செய்தாலே போதும்.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு சாலைகள் முடிக்கப்படாமல் பாதியில் உள்ளது. அவைகளை இந்த அரசு பணி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும். அதை விடுத்து விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிப்பது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாகவின் கொள்கைக்கு எதிரானது.
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அம்மா மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தார். அந்த திட்டங்களை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார். உதாரணமாக கெயில் திட்டம் ஆகும். ஆனால் தற்போது நடக்கும் எடப்பாடி அரசு தூத்துக்குடி துப்பாக்கி சூடு படுகொலைக்கு பின்பு போராடும் மக்களை மிரட்டி அச்சுறுத்தி திட்டங்களை திணிக்கிறது. எனவே இந்த அரசை மக்களும், விவசாயிகளும் எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தை அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து அரசு பரிசீலக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad
தி.மு.க.வின் முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சி செய்கின்றன. மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அந்த கூட்டணியை உருவாக்க வாய்ப்புள்ளது.

கருணாநிதி உடல் நலம் இல்லாமல் செயல்பட முடியாதபடி இருப்பதால், அவர் இல்லாத வெற்றிடத்தை உணரத் தொடங்கியுள்ளோம். அவர் மட்டும் முன்பு போல அரசியலில் தீவிரமாக இருந்திருந்தால், அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை அவர் வேறு விதமாக கையாண்டிருப்பார். மாறுபட்ட திட்டத்துடன் களம் இறங்கி இருப்பார்.
எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தபோது அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஆட்சியை இழந்தது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போதும், ஆட்சி கவிழவில்லை. 1989-ல் நடந்த சம்பவத்துக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. உள்ளது.
தற்போதைய அ.தி.மு.க. அரசு முற்றிலுமாக மத்திய அரசிடம் சரண் அடைந்து கிடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி மீதான ஏராளமான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.
எனவே தி.மு.க. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சட்டசபையில் நாங்கள்தான் முதன் முதலாக குட்கா பிரச்சினையை கிளப்பினோம்.
18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உறுதியான தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. அடுத்து 3-வது நீதிபதி தீர்ப்புக்கு சென்றுள்ளது. 3-வது நீதிபதி தீர்ப்பால் ஆட்சி கவிழலாம் என்று நினைக்கிறோம்.
தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் உள்ளனர். தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இனத்தை சேர்ந் தவர்கள் ஆவார்கள். தி.மு.க. கொள்கையால் அவர்கள் அனைவரும் பிணைந்துள்ளனர்.
தி.மு.க. கடந்த 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனால் தி.மு.க.வினர் இன்றும் அதே கட்டுக் கோப்புடன் உள்ளனர்.
1977-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். மீது இருந்த கவர்ச்சி காரணமாக நாங்கள் 13 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தோம். 1989-ல் கலைஞர் முதல்வரானார். அதன் பிறகு தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு மாற்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த தேர்தலில்தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியை தழுவியது.
தற்போது தி.மு.க.வில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி ஆலோசனை செய்து செயல்பட்டு வருகிறோம். எனவே மூத்த உறுப்பினர் என்ற ரீதியில் நான் மு.க. ஸ்டாலினுக்கு எந்த அறிவுரையும் சொல்வது இல்லை. ஏதாவது கருத்து கேட்டால் சொல்வேன்.
அரசியலில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மாதிரி மு.க.ஸ்டாலின் உள்ளார். சந்திரபாபு நாயுடு எப்போதும் அரசியல் பற்றியே பேசுவார். சிந்திப்பார். மு.க.ஸ்டாலினும் அதே போன்று உள்ளார்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார். #DMK #Duraimurugan
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் கலெக்டர் ரோகிணி, பசுமை சாலைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இது அப்பட்டமான பொய் ஆகும். பசுமை சாலை திட்டத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களே இதை நிரூபிக்க போதுமானவை ஆகும்.
அதன்படி பார்த்தால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ரூ.1.87 கோடி முதல் ரூ.3 கோடி வரையும், சேலம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.62.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஹெக்டேருக்கு ரூ.22.50 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரையும் மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த விலை கூட நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கான இழப்பீட்டையும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் உண்மை நிலை எனும்போது எங்கு, எந்த நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.9.04 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது என்பதை பினாமி ஆட்சியாளர்களோ, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரோ விளக்கத் தயாரா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த புகாரை தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.
இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார். அதேசமயம், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அந்த மனுக்களில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் அல்லது சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களில் ஒருவர் உறுதி செய்தார்.
இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கோடை விடு முறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் ஒய்.கிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது நம்பிக்கையில்லை என்றால் வேறொரு நீதிபதி மூலம் வழக்கை விசாரிக்க கோரலாம். அதேவேளையில் இதுபோன்ற ஒரு பிரச்சினை வரும்போது சம்பந்தப்பட்ட நீதிபதி தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்ளலாம். இதுபோன்று பல்வேறு வழக்குகள் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிபதியை மாற்றம் செய்வது சம்பந்தமாக அதே நீதிபதியிடமோ, தலைமை நீதிபதியிடமோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ முறையிடலாம். வேறு மாநில ஐகோர்ட்டு நீதிபதி மூலம் விசாரிக்கவும் கோரலாம். முழுமையான ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டையும் விசாரிக்க கோரலாம்’ என்றார்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூலின் திறனாய்வுக்கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் விளம்பர பேனர்கள் வைக்க கவர்னர் தடை விதித்துள்ளனர். பிற மாநிலங்களில் கட்டணம் வசூலித்துவிட்டு குறிப்பிட்ட இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும் முறையை புதுவையிலும் கடைபிடிக்க வேண்டும்.
தமிழக கவர்னருக்கு எதிராக நாமக்கல்லில் அறவழியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், சென்னை-சேலம் இடையே பசுமை சாலை எதிர்ப்பு போராட்டம், கவர்னர் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி நச்சு தன்மை கொண்ட தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் விவசாயி கள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டு அறிந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் மீது அடக்குமுறையை அரசு மேற்கொள்ளக் கூடாது.
வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு நடத்த முடிவு வெடுத்துள்ளோம்.
மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னை:
கவிஞர் கண்ணதாசன் 92-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது தமிழக அரசின் பணிகள், திட்டங்களை வலுப்படுத்துவது மாதிரிதான் உள்ளது.
எந்த இடத்திலும் நாங்கள் தவறு செய்ததாக கவர்னர் சொல்லவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிகாரிகள் அளவில் அவர் ஆய்வு செய்வது எங்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் தி.மு.க.வினர் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் தேவையில்லாதது. சட்டரீதியாகவும் சரி கிடையாது. தார்மீக ரீதியாகவும் சரி கிடையாது. கவர்னர் ராஜ்பவனில் இருந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு.
அரசியல் சாசன சட்டப்படி அவருக்கு உள்ள கடமையை அவர் செய்கிறார். தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல கவர்னர் செயல்படுகிறார்.
முன்னாள் கவர்னர் சென்னாரெட்டியை மாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு காரணம் வேறு. அந்த உதாரணம் இந்த கவர்னருக்கு பொருந்தாது.
சென்னாரெட்டி அரசின் திட்டங்களை எதிர்த்தார். இதனால் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போதைய கவர்னர் நெகட்டிவ் ஆக எதுவும் சொல்லவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி தான் வருகிறார்.
பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரத்துக்கும், அவர் சொல்வதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.
தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினாலும் முடிந்தவரை வன்முறைகள் இல்லாத நிலைவரை அனுமதிக்கிறோம். ஒரு வருடத்தில் 27 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக போராட்டம் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது.
எம்.ஜி.ஆர். காலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரும்புகரம் கொண்டு ஒடுக்கினார். அந்த நாளில் இருந்து நக்சலைட்டுகள் தலைதூக்க விடாமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்,
நெல்லூரில் இருந்து நேபாளம் வரை நக்சலைட்டுகள் பரவி இருந்த நிலையிலும் தமிழகத்தில் அவர்களால் தலைவைத்து படுக்க முடியவில்லை. இப்போது கூட முளையிலேயே கிள்ளி எறிந்ததால் தமிழகம் அமைதியாக திகழ்கிறது.
பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. இது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உண்மைக்கு மாறாக அவர் கூறி வருகிறார்.
சேலம்-சென்னை பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட நன்மைகள்தான் அதிகம். இதில் எவ்வளவு நிலங்கள் சாலைக்காக எடுக்கப்பட உள்ளது போன்ற விபரங்களை ஏற்கனவே முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan






