என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். #TNAssembly #EdappadiPalaniswamy #CrimesAgainstWomen
    சென்னை:

    தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன.

    மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று சிலர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் தவறான வதந்தி பரப்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்பதை நாடே அறியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EdappadiPalaniswamy #CrimesAgainstWomen
    தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. #TNAssembly #CongressAttacksCM
    சென்னை:

    தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம் அளிக்காததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணம் பற்றி முழு விவரத்தை முதலமைச்சர் வாயிலாக தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம்.

    ஆளுநர் அலுவலக செய்தியின்படி, முதன்மைச் செயலாளரிடம் எல்லாதவிதமான தகவல்களையும் சொல்லிவிட்டுதான் ஆளுநர் சுற்றுப்பயணம் செய்வதாக சொல்லியிருக்கிறார்.



    இது முதலமைச்சருக்கு தெரியுமா? என்று கேட்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம்.

    தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா? அல்லது ஆளுநர் செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஆளுநரின் சுற்றுப்பயணத்திற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றுதான் பொருள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #CongressAttacksCM
    ஸ்ரீரங்கம் போனால் முதல்வர் ஆகிவிடலாம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். #StalinVisitSrirangam #MinisterJayakumar
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றது குறித்து கேட்டதற்கு அமைச்சர் கூறியதாவது:-



    கடவுள் பக்தி விவகாரத்தில் தி.மு.க.வின் கொள்கை என்ன என தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றிருந்த குமாரசாமி முதல்வர் ஆனதால், ஸ்டாலினும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். ஸ்ரீரங்கம் போனால் மட்டும் சிஎம் ஆக முடியாது. மக்கள் நினைத்தால்தான் சிஎம் ஆக முடியும்.

    அரசியல் ரீதியாக எங்களது எதிரி தி.மு.க. தான். அந்த கட்சியுனுடன் எந்த கூட்டணியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #StalinVisitSrirangam #Jayakumar
    விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழித்து சாலை வசதி வேண்டாம் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #GreenWayRoad

    போளூர்:

    சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இதற்காக 1,100 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்த உள்ளது. போளூர் பகுதியில் ராந்தம், பெலாசூர், விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களிலும், அல்லியாளமங்கலம் காப்பு காட்டு பகுதியிலும் பசுமை வழிச் சாலை செல்கிறது.

    இந்த நிலையில் பசுமைச்சாலை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பா.ம.க. சார்பில் போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கருத்து கேட்டார். இதில் விளாப்பாக்கம், ராந்தம், பெலாசூர், பில்லூர், காம்பட்டு, ஆத்துரை, உலகம்பட்டு உள்பட பல கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் விவசாயிகள் ‘நிலத்தை கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் எங்களது மூதாதையர் நிலம் வருமா?, நிலம் இல்லை என்றால் கூலி வேலைக்கு சென்று எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது. குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது. சாலை வேண்டாம், நிலம் தான் வேண்டும்’ என்று ஒட்டு மொத்தமாக கண்ணீர் மல்க தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் மக்கள் கேட்கும் திட்டத்தை தான் கொண்டு வர வேண்டும். 8 வழி பசுமைச் சாலை வேண்டும் என்று யார் கேட்டார்கள். சென்னை மக்களும் கேட்கவில்லை, சேலம் மக்களும் கேட்கவில்லை. சென்னையில் இருந்து சேலத்திற்கு 3 வழியாக சாலைகள் உள்ளன. சென்னை- சேலம் ஊளுந்தூர்பேட்டை வழியாகவும், வாணியம்பாடி வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும் செல்லலாம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமைச்சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்களிடம் சரி, யாரிடமும் கருத்து கேட்பது இல்லை. மக்கள் சொத்தை அபகரிக்கிறது. பசுமையை அழிக்கிறது. சென்னை- சேலம் சாலைகளை அகலப்படுத்தினாலே போதும், புதிய பசுமைசாலை தேவையில்லை. விவசாயிகளாகிய உங்கள் கருத்துகளை பதிவு செய்து அறிக்கை தயாரித்து மத்திய, மாநில அரசு நெடுஞ்சாலைத் துறையிடம் அளித்து நல்ல தீர்வு கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad

    கவர்னர் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது தவறு இல்லை என்று முன்னாள் அட்வகேட் ஜெனரல் விளக்கத்தை சுட்டிக்காட்டி கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. #GovernorBanwarilalPurohit
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்ட வாரியாக ஆய்வு பயணம் செய்வதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகிறது. நாமக்கல் மாவட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

    ‘கவர்னருக்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் அதிகாரம் உள்ளது, கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்’ என்று கவர்னர் மாளிகையும், ‘கவர்னருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை, போராட்டம் தொடரும்’ என்று தி.மு.க.வும் அறிவித்தன.

    இந்நிலையில் கவர்னர் மாளிகை நேற்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது குறித்து விமர்சனம் செய்யப்பட்டதும், இதுகுறித்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சட்ட நிபுணரான முன்னாள் அட்வகேட் ஜெனரலும், அகில இந்திய அளவிலான மூத்த வக்கீலுமான ஸ்ரீஹரி அனேய் என்பவரிடம் கருத்துகேட்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

    அதற்கு முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீஹரி அனேய் அளித்த விளக்கம் வருமாறு:-

    அரசியல் சட்டத்தை அமல்படுத்தியபோது, கவர்னரை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பதா? நியமிப்பதா? என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு, ‘கவர்னரை நியமிப்பதன் மூலம் மாநில அரசோடு மத்திய அரசுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்படும். தேர்தல் மூலம் நியமித்தால் அங்கு பிரித்தாளும் நிலை வரும். அதனால் கவர்னரை ஒரு அரசியல் கட்சியில் இருந்து தேர்வு செய்து நியமிப்பதன் மூலம் சட்டசபைக்கும், நிர்வாக துறைக்கும் நல்ல சரிசமமான தொடர்பு இருக்கும்’ என்று கூறினார். இதனை அரசியலமைப்பு குழு தலைவர் அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டார்.

    அரசியல் சாசனத்தில் கவர்னருக்கும், அவருடைய பதவிக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவைக்கு கவர்னர் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள், மாவட்ட நிர்வாகத்தோடு நேரடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டது இல்லை. அதனால் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தது தவறு என்றும், விதிமுறை மீறல் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அசாம் மாநில கவர்னர் மாவட்ட நிர்வாகத்துடன் நேரடியாக கூட்டத்தை இதற்கு முன்பு நடத்தியிருக்கிறார். அதுபோல தமிழக கவர்னரும் கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்.

    அதனால் இது தவறு என்றோ, விதிமீறல் என்றோ, சட்டவிரோதம் என்றோ கூறமுடியாது. ஏற்கனவே தமிழகத்தில் இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள் இதேபோல மாவட்ட நிர்வாகத்தோடு நேரடியாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தவில்லை என்பதால் தமிழக கவர்னர் செய்தது தவறு என்று சொல்லமுடியாது. அரசியலமைப்பு சாசனத்தில் கவர்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அவர் செயல்பட்டுள்ளார். எனவே கோவை மாவட்ட நிர்வாகத்தோடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது தவறு என்று கூறமுடியாது.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  #GovernorBanwarilalPurohit #TN

    இரவு நேரத்தில் வீடுபுகுந்து கைது செய்வது ஏன்? என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #TNassembly #EdappadiPalaniswami

    சென்னை:

    சட்டசபையில் இன்று போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உதயசூரியன் (தி.மு.க.) பேசியதாவது:-

    தமிழகத்தில் பொதுவாக போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் சிலரை கைது செய்யாமல் விடுவது உண்டு. சிலரை கைது செய்வது உண்டு. இன்னும் சிலரை இரவில் கைது செய்வதும் உண்டு.

    எங்கள் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தவர் 4 முறை போலீஸ் துறைக்கு மந்திரியாக இருந்தவர்.  நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைத்து அவரை கைது செய்த படலம் உண்டு.

    அது என்ன இரவு நேரத்தில் கைது செய்வது? வீடு இருக்கிறது, நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். யாரும் எங்கும் ஓடிவிட மாட்டார்கள். ஏன் இரவு நேரத்தில் புகுந்து கைது செய்ய வேண்டும்.

    பெரிய நிகழ்வுகளாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். கிராமத்தில் வாய்க்கால் வரப்பு தகாராறு, அண்ணன்- தம்பி தகராறு, ஒரு பெண்ணை அடுத்தவர் வீட்டு பையன் இழுத்துச் சென்ற தகராறு இதுபோல் பல்வேறு வி‌ஷயங்களில் இரவு நேரத்தில் தாய்- தந்தையரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கைது செய்கிறார்கள். இந்த நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். காவல்துறைக்கு தகுந்த வழிமுறையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    காவல்துறையினர் இரவு நேரத்தில் சென்று கைது செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்கள். உங்களுடைய ஆட்சி காலத்தில் நாங்கள் எல்லாம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பொழுது எங்களையும் கைது செய்திருக்கிறீர்கள்.

    நானே 6 முறை கைது செய்யப்பட்டு இருக்கிறேன். பல்வேறு போராட்டங்களின் வாயிலாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்கள் ஆட்சியிலும் கைது செய்திருக்கிறீர்கள். ஆகவே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு காவல் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறுனார்.

    தொடர்ந்து உதய சூரியன் பேசும்போது, தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை இன்னும் நடைபெறுவதாக கூறினார். அதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

    உங்கள் ஆட்சியிலும் போதைப் பொருள்கள் விற்கப்பட்டிருக்கின்றது. அந்த தகவலை நாளைக்கு சொல்கிறேன். ஆகவே, ஆட்சி யார் செய்தாலும், போதைப் பொருள் விற்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும். இன்றைக்கு அம்மாவினுடைய அரசைப் பொருத்தவரைக்கும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆகவே, போதைப் பொருள்கள் வெளியிலே விற்கப்படுகின்றது என்று தகவல் கிடைத்தவுடன் காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். என்னவோ அம்மாவினுடைய அரசில் தான் போதைப்பொருள்கள் விற்பதைப்போலவும், இவர்கள் ஆட்சியில் போதைப்பொருள் விற்காதது மாதிரியும் ஒரு கற்பனையான தோற்றத்தை இங்கே உருவாக்கக்கூடாது.

    உங்களுடைய ஆட்சியிலும் சரி, எந்த ஆட்சியாக இருந்தாலும், போதைப் பொருள்கள் விற்பது தவறு, அது காவல் துறையின் கவனத்திற்கு வந்தபொழுது, அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNassembly #EdappadiPalaniswami

    மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய கமல் இனி பட்டையை கிளப்பும் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. #KamalHaasan


    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளில் கொள்கை விளக்க பாடல்கள் மிகவும் பிரபலம்.

    ‘‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் பாடல் ஒலிக்காத அ.தி.மு.க. மேடையே இருக்காது. அதே போல ‘‘ஓடி வருகிறான் உதய சூரியன்’’ பாடலும் தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் முக்கியமான பாடலாகும்.

    இப்போதும் பட்டி தொட்டி யெங்கும் இந்த கட்சிகளின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

    எம்.ஜி.ஆர். தனது சினிமா பாடல்கள் மூலமாக மக்களை கவர்ந்தார். அரசியலில் குதித்த பின்னரும் அவரது புகழ் பாடும் பாடல்கள் மக்கள் மனதை தட்டி எழுப்பின.

    தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களும் இதற்கு சளைத்தவை அல்ல. அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பாடல்களும் ஒரு காரணம் என்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.

    மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய கமல் தனது அதிரடி செயல்பாடுகள் மூலமாக கவனத்தை ஈர்த்து வருகிறார். புதிய கட்சியை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ள கமல் பல மடங்கு வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவுக்காக டெல்லி சென்ற கமல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசியதும், இதன் பின்னர் உறுவாகி இருக்கும் கூட்டணி யூகங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 6 பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி. ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

    கமல் கட்சியில் இணைந்து செயல்படும் பிரபல கவிஞர் சினேகன் இந்த பாடல்களை எழுதி உள்ளார். பாடல் வரிகள் அனல் தெறிக்கும் வகையில் உள்ளது.

    நாட்டுப்புற பாடல் மெட்டில் இசை அமைக்கப் பட்டுள்ள ‘‘நாட்டு நடப்பு சரியில்லடா’’ என தொடங்கும் பாடல் அ.தி.மு.க. அரசை கடுமையாக சாடி எழுதப்பட்டுள்ளது. பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.

    நாட்டு நடப்புசரியில்லடா. அத கேட்க எவனுக்கும் துணிவில்லடா. நிம்மதியா வாழ வழி இல்லடா. ஓட்டு வாங்கி போனவனெல்லாம் நடிக்கிறான். ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் துடிக்கிறான்.

    இத தட்டி கேட்கும் தலைவன் யார்? இதோ வாராரு பாரு நம்மவரு.

    இவன் போடாத வே‌ஷம் இல்ல திரையில, இப்ப போராட வந்திருக்கான் தரையில. தலைவன் எல்லாம் மக்களுக்கு வேலைக்காரன்னு சொல்லுங்கடா.

    வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு கொள்ளை அடிக்கிறான். நாம வேதனய சொல்லப்போனா துரத்தி அடிக்கிறான். அரசியல் வியாபாரம்தான் நல்லாவே நடக்குது தமிழ்நாட்டுல. அதிகாரத்த கொடுத்துபுட்டு நாமதான் நிற்கிறோம் நடுரோட்டுல.

    உழைக்கும் வர்க்கத்துக்கு இங்க பிழைக்க வழி இல்ல. ஊரையே ஏக்கிறாங்க. அவங்கள சட்டம் கண்டுக்கல. தேர்தலுன்னு வந்துட்டா தேடி வர்றாங்க. ஜெயிச் சுப்புட்டா காரு ஏறி ஓடிப் போறாங்க.

    வே‌ஷம் போடும் அரசியல் கும்பலை வெளியில் தூக்கி வீசுவோம். எங்கே ஊழல் நடந்த போதும் எதிர்த்து நின்று காட்டுவோம்.

    வாடா... வாடா..... தோழா. நாளை நமதே. நமக்கென தலைவன் இருக்கிறான். நம்மை அவன் தான் அழைக்கிறான்.

    எனக்குள் ஒருவன். உனக்குள் ஒருவன். நமக்குள் ஒருவன் எழுகிறான். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தெரிந்தும் ஏனோ எதிர்க்கவில்லை.

    நம்மால் அமைந்த அரசு நமக்கா? என்றும் தெரிய வில்லை. நம்மை சூழ்ந்த இருளை கிழித்து வெளிச்சம் தருவோம் வா தோழா.

    நம்மவர் வழியில் நாமும் நடந்து மாற்றம் தருவோம் என்பது போன்ற வரிகளும் கவனிக்க வைக்கின்றன.

    இந்த பாடல்கள் கமல் கட்சி கூட்டங்களில் இனி பட்டையை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. #KamalHaasan

    கோவை குட்கா ஆலை அதிபருக்கு உதவியதால் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNassembly #EdappadiPalaniswami

    சென்னை:

    கோவையில் சட்ட விரோதமாக குட்கா தயாரித்தது தொடர்பாக காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது குறித்து சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

    கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் கிராமம், நல்லம்மாள் தோட்டத்தில் பான்பராக் மற்றும் குட்கா தயார் செய்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் 27.4.2018 அன்று “அமித் எஸ் பிராக்ரன்சஸ்’’ என்ற பெயரில் இயங்கி வந்த தொழிற்சாலைக்குள் சென்று சோதனையிட்டனர். சோதனையின் போது, அங்கிருந்த அக்கம்பெனி மேலாளர் ரகுராம் என்பவரை விசாரித்த போது, மேற்படி தொழிற்சாலை புதுடெல்லியைச் சேர்ந்த அமித் ஜெயின் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக தயாரித்து விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, இது தொடர்பாக காவல் துறையினர் சூலூர் காவல் நிலையத்தில் அமித் ஜெயின் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையின் போது, காவல் துறையினர், மேலாளர் ரகுராம் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்த அஜய், ராம்தேவ் மற்றும் சொஜிராம் ஆகியோரை கைது செய்து, அவர்களது ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.

    மேலும், சோதனையின் போது அத்தொழிற்சாலையில் இருந்த 200 மூட்டை கொட்டைப்பாக்கு, 10,520 கிலோ தூள் பாக்கு, 150 கிலோ ஏலக்காய், 95 கிலோ புகையிலை, 1,540 கிலோ லைம் பவுடர், 477 கிலோ கட்டா பவுடர், 3,24,000 இரண்டு கிராம் வி.ஐ.பி குட்கா பாக்கெட்டுகள், 3,52,800 இரண்டு கிராம் பதான் பாக்கெட்டுகள், 25,500 நான்கு கிராம் பதான் பாக்கெட்டுகள், குட்கா மற்றும் பான்பராக் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் எதிரிகள் நான்கு பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

    கண்ணம்பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், அத்தொழிற்சாலை கட்டட உரிமம் பெறாமலே கட்டப்பட்டு நடத்துவதற்கும், பொதுமக்கள் அத்தொழிற் சாலை குறித்து புகார் தெரிவித்த போது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் பார்த்து கொள்ளவும், மதிப்பை குறைத்து சொத்து வரி செலுத்தவும், தொழிற்சாலையில் சட்ட விரோதமாக குட்கா தயாரித்து விற்பனை செய்து வருவதை அறிந்தும் அதை மறைத்து அமித் ஜெயினிற்கு உதவியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனடிப்படையில், இவ்வழக்கில் தளபதி முருகேசன் 10.5.2018 அன்று சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

    உறுப்பினர் சொன்னதைப் போல, தவறு செய்தவர்களை தான் காவல்துறையினர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆகவே, இதையெல்லாம் புள்ளி விவரத்தோடு செல்லியிருக்கிறேன். நிறைய இருக்கிறது. உங்களுடைய காலநேரத்தினை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக சுருக்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆகவே, அங்கே இருக்கின்ற அந்த பேரூராட்சி தலைவர் பற்றி விளக்கமாக சொல்லி இருக்கின்றேன். விசாரணையின் அடிப்படையில் தான், அவர் அதில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறாரே தவிர, தவறு செய்யாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNassembly #EdappadiPalaniswami

    கோவை நகர மக்களுக்கு தண்ணீர் வழங்கும் உரிமையை வெளிநாட்டுக்கு தாரை வார்ப்பதா என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிறந்த சுவையுள்ள சிறுவாணித் தண்ணீரை அருந்தும் நல்ல வாய்ப்பு கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. தற்போது கோவை மாநகரக் குடிநீர் வழங்கலை நிறைவு செய்யும் பொறுப்பை பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திடவும், அடிப்படைத் தேவைகளில் அதிமுக்கியமான குடிநீரைத் தனியாருக்குத் தாரை வார்த்து அவர்கள் லாபம் ஈட்டிட வழி ஏற்படுத்திக் கொடுக்கவும், குடிநீர் வழங்கலை வணிக மயமாக்கிடவுமான வெகு மக்கள் விரோதத் திட்டம் செயல்படவிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ​பிரான்ஸ் நாட்டின் சூயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு, தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு தாராளமாக வழங்கியிருக்கிறது. இதனை அந்த பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனம் பெருமையுடன் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    ​டெல்லி மாநிலத்தின் மாளவியா மாவட்டத்தைத் தொடர்ந்து, குடிநீர் வழங்கிட, இந்தியாவில் இரண்டாவது பெரிய உரிமத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த தனியார் நிறுவனம் மார் தட்டிக்கொள்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு இந்தத் தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் உள்ளது.

    இதற்குமுன், பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரில் செமப்பா என்ற தனியார் நிறுவனத்திடமும் அதன்பிறகு இந்த சூயஸ் நிறுவனத்திடமும் குடிநீர் வழங்கிட உரிமம் வழங்கப்பட்டபோது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே குடிநீருக்கான அட்டை வழங்கப்பட்டு, அதனை இயந்திரத்தில் சொருகினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற சிக்கலான நிலை உருவானது. காசு இல்லாதவர்களுக்கு தாகம் தீர்த்துக் கொள்ள சொட்டுத் தண்ணீர்கூட கிடையாது என்ற நிலைமையும் ஏற்பட்டது என்கிறார்கள் சர்வதேச அளவிலான இயற்கை ஆர்வலர்கள்.


    ​அதுமட்டுமின்றி, ஆற்று நீர், ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் இவற்றைக்கூட பயன்படுத்துவதற்கு சூயஸ் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி உருவானது. மழை நீரை பயன்படுத்தக்கூட கெடுபிடிகள் காட்டப்பட்டதால், மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்து, பொலிவியா நாட்டைவிட்டு சூயஸ் நிறுவனம் விரட்டப்பட்ட நிகழ்வையும், அந்த நிறுவனத்தின் மிக மோசமான பின்னணியை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

    ​தரமற்ற அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, அ.தி.மு.க. அரசு கோவை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் உரிமத்தை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விற்றிருக்கிறது. குடிநீர் உரிமம் பெற்றுள்ளதை அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு தெளிவு படுத்த வேண்டும்.

    மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை. அதனால்தான், தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, புளூரைடு பாதிப்பிற்குள்ளான தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக, ஜப்பான் நாட்டுக்கு நேரில் சென்று அவர்களின் நிதியுதவியைப் பெற்று, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்தி, பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்தோம்.

    ​அதுபோலவே, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு போர்க்கால அடிப்படையில் மிகவேகமாகச் செயல்படுத்தியது.

    சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கிருஷ்ணா நதி நீரை விரைந்து பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் தி.மு.க. அரசும், அன்றைய சென்னை மாநகரின் மேயராக இருந்த முறையில் நானும் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, அந்தத் திட்டங்கள் நிறைவேறின.

    ​மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத அ.தி.மு.க. அரசு, கோவை மாநகரத்தில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் மக்களின் குடிநீர் தேவைக்கான உரிமத்தை, மோசமான முன்னுதாரணங்கள் படைத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, கோவை மக்களுக்கு இந்த அரசு செய்யும் துரோகமாகும். எல்லாவற்றிலும் “கமி‌ஷன்” பார்க்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரிலும் சுயலாபம் சுருட்டக் கருதிச் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார். #PMK #BJP #TamilisaiSoundararajan #GKMani
    சென்னை:

    பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலுக்கும், சமூக சேவைக்கும் தேவையான அடக்கமும், பக்குவமும் இல்லாமல் கருத்து என்ற பெயரில் கத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து பெரும்பான்மை சமுதாயத்தின் மனங்களை காயப்படுத்தியுள்ளது.



    தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது. அதனால் தான் 1987-ஆம் ஆண்டில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டத்தின் மகத்துவம் அவருக்கு புரியவில்லை. அது ஒரு தியாக வரலாறு. அந்த வரலாற்றின் கதாநாயகர் மருத்துவர் அய்யா.

    சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதைப் போல, சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக் கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப் பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    மருத்துவர் அய்யா சொந்த சாதிக்காக மட்டும் போராடும் வழக்கம் கொண்டவர் அல்ல. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான முதல் குரல் மருத்துவர் அய்யாவிடமிருந்து தான் வெளிப்படும்.

    கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழிசை சவுந்தரராஜன் சார்ந்த நாடார் சமூகத்தினரைப் பற்றி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் எட்டாம் வகுப்பு புத்தகத்தில் இழிவாக பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த மருத்துவர் அய்யா தான், முதன்முதலில் மத்திய இடைநிலைகல்வி வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமது செலவில் சட்டப்போராட்டம் நடத்தி நாடார் சமுதாயம் குறித்து பாடப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இழிவான கருத்துக்களை நீக்க வைத்தார்.

    அதற்காக நாடார் அமைப்புகள் மருத்துவர் அய்யாவுக்கு பாராட்டு விழா நடத்திய போது, அதை தடுக்க முயன்று தோற்றுப் போனவர் தான் தமிழிசை. அவரது சிந்தனை எவ்வளவு கோணலானது என்பதற்கு இதுவே சாட்சி.

    108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அய்யாவின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக மருத்துவர் அய்யாவிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாட்டாளி மக்களின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PMK #BJP #TamilisaiSoundararajan #GKMani

    கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் வகையில் உள்ளதால் கவர்னரை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராடும் நிலை ஏற்படும் என முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan #tngovernor

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கடசியின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு நாமக்கலில் கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கும் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. மாநில அரசு , மத்திய அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதால் கடும் அடக்கு முறை நடவடிக்கைகளை மக்கள், அரசியல் கட்சியினர் மீது மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல் தமிழக கவர்னர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி ஜனாதிபதி ஆட்சி நடப்பதை போல மாநில அரசை நிராகரித்து விட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.


    கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் வகையில் உள்ளது. கவர்னர் சட்டப்படி நடந்து கொள்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது போல் வெளியான அந்த அறிக்கை கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகளை கவர்னர் நிறுத்தாவிட்டால், அவரை எதிர்த்து போராடும் நிலை அனைத்து கட்சிகளுக்கும் ஏற்படும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலையை மறுபரி சீலனை செய்ய வேண்டும். எங்கள் கட்சி சர்பில் முதற் கட்டமாக வரும் 4-ந் தேதி சேலத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதேபோல் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #tngovernor

    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை என்று மோகனூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:-

    கேள்வி: 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: சபாநாயகர் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அப்போது இருந்த கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

    இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது 3- வது நீதிபதி அமைத்திருக்கிறார்கள். எப்படியும் சுப்ரீம் கோர்ட்டு தான் இறுதி தீர்ப்பு வழங்க போகிறது. அதனால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கே போக முடிவு எடுத்து கடந்த 21-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்தோம். இன்றைக்கு மனுவிசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அதை புதன்கிழமைக்கு மாற்றி இருகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என காத்திருக்கிறோம்.


    கேள்வி: தங்க தமிழ்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. மற்றவர்கள் எல்லாம் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் தனித்து விடப்பட்டு இருக்கிறாரா?

    பதில்: தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 17 பேர் சபாநாயகர் தீர்ப்பு தவறு என்பதை சட்ட ரீதியாக நிருபிப்பதற்காக போராடுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று இருக்கிறோம்.

    இதில் நம்பிக்கை இல்லை என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்க தமிழ்செல்வன் சொன்னார். மனுவை திரும்ப பெற போகிறேன். தேர்தல் வரட்டும் சந்திக்கிறேன் என்று சொன்னார். என்னுடைய அனுமதி பெற்றுத்தான் செய்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.

    கேள்வி: நீதிமன்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு இருக்கிறதா?

    பதில்: அதெல்லாம் காலம் உங்களுக்கு நிருபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    ×