search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் தமிழிசைக்கு அறிவும் அனுபவமும் போதாது - ஜி.கே.மணி தாக்கு
    X

    டாக்டர் தமிழிசைக்கு அறிவும் அனுபவமும் போதாது - ஜி.கே.மணி தாக்கு

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார். #PMK #BJP #TamilisaiSoundararajan #GKMani
    சென்னை:

    பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலுக்கும், சமூக சேவைக்கும் தேவையான அடக்கமும், பக்குவமும் இல்லாமல் கருத்து என்ற பெயரில் கத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் கருத்து பெரும்பான்மை சமுதாயத்தின் மனங்களை காயப்படுத்தியுள்ளது.



    தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது. அதனால் தான் 1987-ஆம் ஆண்டில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டத்தின் மகத்துவம் அவருக்கு புரியவில்லை. அது ஒரு தியாக வரலாறு. அந்த வரலாற்றின் கதாநாயகர் மருத்துவர் அய்யா.

    சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதைப் போல, சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக் கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப் பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    மருத்துவர் அய்யா சொந்த சாதிக்காக மட்டும் போராடும் வழக்கம் கொண்டவர் அல்ல. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான முதல் குரல் மருத்துவர் அய்யாவிடமிருந்து தான் வெளிப்படும்.

    கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழிசை சவுந்தரராஜன் சார்ந்த நாடார் சமூகத்தினரைப் பற்றி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் எட்டாம் வகுப்பு புத்தகத்தில் இழிவாக பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த மருத்துவர் அய்யா தான், முதன்முதலில் மத்திய இடைநிலைகல்வி வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமது செலவில் சட்டப்போராட்டம் நடத்தி நாடார் சமுதாயம் குறித்து பாடப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இழிவான கருத்துக்களை நீக்க வைத்தார்.

    அதற்காக நாடார் அமைப்புகள் மருத்துவர் அய்யாவுக்கு பாராட்டு விழா நடத்திய போது, அதை தடுக்க முயன்று தோற்றுப் போனவர் தான் தமிழிசை. அவரது சிந்தனை எவ்வளவு கோணலானது என்பதற்கு இதுவே சாட்சி.

    108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அய்யாவின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக மருத்துவர் அய்யாவிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாட்டாளி மக்களின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PMK #BJP #TamilisaiSoundararajan #GKMani

    Next Story
    ×