என் மலர்
செய்திகள்
சென்னை:
தமிழக சட்டசபையில் நகராட்சி சட்ட திருத்த முன்வடிவு தாக்கல் விவாதத்தில் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்று நாங்கள் கோர்ட்டுக்கு போனது உண்மைதான். 33 சதவிகிதம் மகளிருக்கான இட ஒதுக்கீடு, 50 சதவிகிதமாக ஆனதற்கு பின்னால், யார்-யாருக்கு அந்த 50 சதவிகிதம் என்பது தெரிவிக்காமலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது அதை அறிவியுங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைதான்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்கிறதே, அதனை சரி செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைத்தான். அதனை சரி செய்து, தேர்தலை நீங்கள் நடத்தியிருக்கலாம். ஐகோர்ட்டு இரண்டு, மூன்று தடவை தேர்தலை நடத்தலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அமைச்சர் இதையே சொல்லி, எங்கள் காதுகளில் தயவு செய்து ரத்தம் வர வைத்து விடாதீர்கள்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் போனதால் பாதிப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது என்று சொல்வதை நிறுத்தி விட்டு, நீங்கள் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் என்று ஒன்று இருக்கிறது. அந்த வாரியத்திற்கு ஏற்கெனவே இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்று இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். இப்போது இரண்டு பேர்களுமே இல்லை. இது ஒரு மிகப்பெரிய கோளாறு. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகின்றன என்று சென்னையைச் சுற்றிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இல்லை. தமிழ்நாடு தேர்தல் ஆணையர்தான் பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் என்பது ஒரு மிகப்பெரிய அமைப்பு.
தனி அலுவலரால் நிச்சயமாக செயல்படவே முடியாது. ஒரு தனி அலுவலர் எப்படி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியம்? உள்ளாட்சிகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. இன்றைக்கு உள்ளாட்சி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போன ஒரு நிர்வாகமாக இருக்கின்றன. இப்போது இரண்டு வருடங்களாக நாம் காரணங்களைத் தேடி தேடிக் கொண்டிருக்கிறோம்.
வார்டு எல்லை வரையறை செய்ய வேண்டுமென்ற புதிதாக ஒரு காரணத்தை கண்டுபிடித்து-இட ஒதுக்கீடு சரி செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர் பட்டியல் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன. வார்டு எல்லை வரையறை என்று புதிதாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அதில் பொது மக்களிடமிருந்து 10,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை சீராய்வு செய்து வேண்டியுள்ளது என்ற காரணமும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த காரணங்கெல்லாம் ஒரு சாக்கு போக்குகள் தான் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைப்பதை நிறுத்திவிட்டு தேர்தலை நடத்துவற்குண்டான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNassembly #Localbodyelections
சென்னை:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா ஆகிய 6 தென் மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் 922 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானார்கள்.
இவர்களது தேர்தல் பிரசார செலவு, பெற்ற வாக்கு சதவீதம், எதிர்கொண்ட வழக்குகள் போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் என்.ஜி.ஓ. அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வை நடத்தின.
குறிப்பாக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் தில்லுமுல்லு செய்தும், முறைகேடுகள் செய்தும் வெற்றி பெற்றனர் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 6 மாநிலங்களிலும் 44 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
தேர்தல் முறைகேடு செய்தவர்களில் கர்நாடகாவில் தான் அதிகபட்சமாக 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆந்திராவில் 5 எம்.எல்.ஏ.க்களும், புதுச்சேரியில் 2 எம்.எல்.ஏ.க்களும், தெலுங்கானாவில் 6 எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் முறைகேடுகளில் தொடர்புடையவர்களாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் முறைகேடு செய்த 2 எம்.எல்.ஏ.க்கள் கமலக் கண்ணன், சிவக்கொழுந்து என்று ஆய்வுத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தேர்தலின் போது லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆறு தென் மாநிலங்களில் கேரளாவில் மட்டும் எந்த ஒரு எம்.எல்.ஏ. மீதும் தேர்தல் முறைகேடு வழக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும் கேரளாவில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் அதிகம் செலவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தேர்தல் செலவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
தேர்தல் செலவுகளில் பிரசார வாகனத்துக்குத்தான் வேட்பாளர்கள் அதிக அளவு பணத்தை (29 சதவீதம்) செலவு செய்து இருப்பதும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. #Tamilnews
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை பறிப்பதற்காக அரசே பொய்களை அவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடீஸ்வரர்களாகி விடலாம் என்று விவசாயிகளுக்கு ஆசை காட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன.
உள்ளூர் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மூலம் மக்களை அணுகும் ஆட்சியாளர்கள், நிலத்திற்கு கோடிகளில் இழப்பீடு வழங்கப்படும்; இழப்பீடு தேவையில்லை என்றால் செழிப்பான பகுதிகளில் மாற்று நிலம் வழங்கப்படும் என்று ஆசை காட்டுதலும், மிரட்டலும் கலந்து மக்கள் மனதை கரைக்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பசுமைச் சாலைக்காக நிலங்களை கையகப்படுத்திய பின்னர் ஆட்சியாளர்களின் அணுகு முறை எவ்வாறு மாறும் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இன்றைய நிலையில் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான முதன்மை சாலை உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சாலை தான். இந்த 4 வழிச் சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி.
உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், திருமண அரங்குகள், கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம், கிணறுக்கு ரூ.10 லட்சம், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், நிலம் கொடுக்க பெரும்பாலான விவசாயிகள் தயாராக இல்லாத நிலையில், அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசி, இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று ஆசைக் காட்டினர்கள்.
அதை உண்மை என்று நம்பிய மக்களும் தேசிய நெடுஞ்சாலை அமைப்ப தற்காக தங்களின் நிலங்களை வழங்கினார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டது. நியாயமான இழப்பீடு வழங்கக் கோரியவர்கள் மிரட்டப்பட்டார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பது தான் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பாகும். ஆனால், அந்ததீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை இன்று வரை அரசு நிறைவேற்ற வில்லை.
சென்னை-சேலம் பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ரூ.9 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால், அது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால், எந்தெந்த நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்களை வெளியிடும்படி முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சவால் விடுத்திருந்தேன்.
ஆனால், இருவர் தரப்பிலிருந்துமே இதுவரை எந்த பதிலும் இல்லை. மற்ற மாவட்ட ஆட்சியர்களாலும் இதுதொடர்பாக விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்க முடிய வில்லை.
இத்தகைய சூழலில் பசுமை வழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உளுந்தூர்பேட்டை- சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டதைப் போல இவர்களும் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை அரசு மீண்டும் பெற வேண்டுமானால், உளுந்தூர்பேட்டை- சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். சென்னைசேலம் பசுமைவழிச் சாலை சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மை உற்பத்திக்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #GreenWayRoad
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதைத் தொடர விடக்கூடாது. இது நல்லதல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நாத்திகம் பேசும் கொள்கை கொண்ட அவருக்கு கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது தொடர்பாக அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சி மற்றும் விவசாயத்தை பற்றி அறியாத அப்பாவி மக்களை தூண்டி விட்டு எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த வைக்கின்றனர். டெல்லியில் 14 வழிச்சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அங்கு இத்தகைய எதிர்ப்பு ஏற்பட வில்லை.
காஷ்மீரில் பா.ஜ.க. 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்கவில்லை. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சியினர் சதி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #GreenWayRoad
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்து பேசியதாவது:-
ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சார்ந்திருக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக இருப்பிட சான்றிதழ் பெற்றுக்கொண்டு இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது என மிகப்பெரிய குற்றச்சாட்டு தொடர்ந்து உலவிக்கொண்டு இருக்கிறது.
எனவே, இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோசடிகளைப் போல, இந்த ஆண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க இந்த ஆண்டு ஒரு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மற்ற மாநிலத்தவர் எப்படியோ யாருடைய துணையோடோ ஏதோ சதி செய்து இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் நிலை என்னவாயிற்று?. அதன் தற்போதைய நிலை என்ன? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை வேண்டுமென்றே விதிமுறைகளின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால், அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி அனுமதிபெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புக்கு பதில் அளித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

இருப்பிட சான்று தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. வெளிமாநிலத்து மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்று பெற்று சேருவதை தடுக்க மிக தெளிவாக 12 ஷரத்துக்களை சேர்த்து இருக்கிறோம். எனவே அவர்கள் விண்ணப்பிக்கும்போதே நிராகரிக்கப்பட்டு விடுவார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்து இருக்கிறார். இதற்கான காரணத்தையும் நாங்கள் கேட்டு இருக்கிறோம். கடந்த முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இருப்பினும் இந்த அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MKStalin #VijayaBhaskar #TNAssembly
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டு திட்டம் மோசடியான திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்காக கிடையாது. காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக தான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை, முதல்வர் வருத்தம் தெரிவிக்கவில்லை. நேரில் சென்று பார்க்கவில்லை. தமிழக அரசு பொம்மையாக செயல்படுகிறது. மத்திய அரசு ஒரு காலை தூக்க சொன்னால் தமிழக அரசு இரண்டு கால்களையும் தூக்குகிறது.
பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகிறது. காங்கிரஸ் வலுப்பட வேண்டும் என்றால் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்திற்காக அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் மற்றும் பிளக்ஸ் பேனர்களில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் படம் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். #pchidambaram #bjp
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ‘டுவிட்டர்’ தளத்தில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது டாக்டர் அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.
இதை கண்டித்து பா.ம.க. வினர் சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நான் அன்புமணியை போல் தந்தையின் நிழலில் பதவியை பெறவில்லை. எனது அறிவு, திறமை, உழைப்பை கொண்டுதான் மாநில தலைவர் பதவிக்கு வந்து இருக்கிறேன்.
யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று சவால் விட்டு இருந்தார்.
இதுபற்றி டாக்டர் அன்புமணி கூறியதாவது:-
30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அவரை கண்டித்து இன்று தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது.
நாளைக்கு (29-ந்தேதி) பிறகு எங்கு வேண்டுமானாலும் தமிழிசையுடன் விவாதம் நடத்த தயார்.
இவ்வாறு அவர் கூறினார். #anbumani #tamilisai
சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இப்போது காவல் நிலையம் சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. ஆன்லைன் மூலமே புகார் அளிக்கலாம். அந்த வகையில் அதிக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். #DMK #MKStalin #TNAssembly
கோவை:
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
பதில்:- முரண்பாடுகளுடன் வாழ்றது தான் வாழ்க்கை. அதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள்.
மேடையில் ஏறி ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி ஒரு அமைச்சர் பேசக்கூடிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடிய கட்சி எது என்று அவர்களுக்கே தெரியும்.
கேள்வி:- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தூத்துக்குடி சம்பவம் போல நடந்து விடும் என அச்சப்படுகிறார்களே?
பதில்:- தூத்துக்குடி சம்பவமே, போராட்டங்கள் நடக்கக் கூடாது என மக்களை அச்சுறுத்த வேண்டும், போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான். அதில் 13 பேர் கொலை செய்யப்பட்டது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.
இன்றைக்கு யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஒரு ஆரம்ப சாத்தியக்கூறுகள் கூட செய்யாத ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. 8 வழிச்சாலை அமைக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டு மக்களுடன் கலந்து பேசி, பிறகு அதை அமைப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஒரு சர்வாதிகாரியை போல இன்று இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.
கேள்வி:-தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக தமிழிசை சவுந்தர் ராஜன் கூறி உள்ளாரே?

பதில்:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா இரண்டும் போய் விட்டால் இருக்கக் கூடிய தீவிரவாத அமைப்புகள் எல்லாம் போய் விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad
சென்னை:
வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றியை விளக்கப் பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் டி. ஜி. வெங்டேஷ்பாபு எம் பி தலைமையில் கொளத்தூர் தொகுதி மங்காரம் தோட்ட பகுதியில் நடந்தது. கூட்டத்தில் மீன் வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆர்.கே.நகரில் பொது மக்களிடம் 20 ரூபாய் நோட்டை காட்டி ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தினகரன் மீது இப்போது அப்பகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர்.

தினகரன் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து தான் அம்மா சுமார் 10 வருட காலம் போயஸ் கார்டன் பக்கமே வரவிடவில்லை. தி.மு.க.வுடன் தினகரன் கை கோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார். அவரது கனவு ஒரு நாளும் பலிக்காது. அ.தி.மு.க. இரும்பு கோட்டை அதை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாடி மா.ராசு, அமுதா, சிந்தை ஆறுமுகம், ஓட்டேரி பி. கே ஜெயக்குமார், செங்கை கோவிந்தராஜ், எஸ்.அமீனுதீன், எ.எல் நடராஜன், எஸ் எ. அண்ணாமலை, பத்மேடு சாரதி, எம். மகேந்திரன், வெற்றி நகர் ஜீவா, எம் சந்திரசேகர், பி.வேலு, உஷாராணி, சமிம்பானு, அருணகிரி, புரசை ராஜாராம், தனராஜா, மல்லிகா சுப்புராஜ், செந்தில்குமார், எம்.இமாச்சலபதி, பி.அரசு, ஐ.அம்பேத்கர், திருமங்கலம் மோகன், புரசை கே.சேகர், ஜி.ஆர். பி. கோகுல், சாந்தி, எஸ் சத்தியநாராயணன், முனிரத்தினம், வேணு, அயன்புரம் முரளிதரன், திருமங்கலம் பிரபு, தங்கம் துரைசாமி, கொளத்தூர் கிருபா. அகரம் ரவிச் சந்திரன், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கொளத்தூர் கே. கணேசன் நன்றி கூறினார். #TTVDhinakaran #Jayakumar
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்துவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பதில் சொல்லிக் கொண் டிருந்தார்.
அப்போது 1 லட்சம் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் நாடகக் கலையை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், ‘‘அருணாச்சல கவிராயர் ஆகியோர் எழுதிய வரிகளிலேயே அந்த நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.
துரைமுருகன்:- நான் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இந்த சபையில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோருமே நடிகர்கள் தான்.
(அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது).
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- 2001- 2006-ம் ஆண்டு ஆட்சியின் போது துரைமுருகனை பார்த்து அன்றைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள். நவரச நடிப்பும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் நடிகராகி இருந்தால் உலக நடிகர் ஆகி இருக்கலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #Duraimurugan
சென்னை:
சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சி சட்டத்தை மேலும் திருத்துவதற்கான சட்டமுன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுவதற்கு இதுவரை வழிவகை இல்லை. மேலும் உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு வட்டி விதிப்பதற்கும் தற்போது வழிவகை இல்லை.
4-வது மாநில நிதி ஆணையமானது சொத்து வரியை காலம் தாழ்த்தாமல் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும், காலம் தாழ்த்தி வரி செலுத்துபவர்களுக்கு வட்டி விதிப்பதற்கான அவசியத்தை ஆய்வு செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது.

இதன்படி சொத்துவரியை உரிய தேதிக்கு பிறகும் செலுத்தாமல் இருந்தால் அந்த தொகையுடன் கூடுதலாக 2 சதவீதத்திற்கு மிகையல்லாத விதத்தில் வகுத்துரைத்து தனி வட்டி செலுத்த வேண்டும்.
சொத்துவரி செலுத்துபவர்கள் அரையாண்டு தொடக்க தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் அவருக்கு சொத்துவரி செலுத்தும் தொகைக்கு 5 சதவீதம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை சொத்துவரியை எப்போது வேண்டுமானாலும், எத்தனை ஆண்டுகள் கழித்தும் செலுத்தும் நிலை இருக்கிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு சொத்துவரியை சரியான காலத்தில் செலுத்தும் நிலை ஏற்படும். #ChennaiPropertyTax #TNAssembly






