என் மலர்
செய்திகள்
நெல்லை:
நெல்லையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை பயங்கரவாதத்தை தமிழக அரசு முழுமையாக வேறறுக்க வேண்டும். இப்போது சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிற்காலத்தில் மோசமாகி விடும். பயங்கரவாதிகளுக்கு அரசே ஆதரவாக செயல்படுவதாக அவர்கள் எண்ணிவிடுவார்கள்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் உளவுத்துறை நடவடிக்கை எடுத்ததால் 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதே பயங்கரவாதம் பற்றி நான் கருத்து கூறி உள்ளேன். இதைத்தான் சமீபத்தில் ரஜினி கூறியிருந்தார். தமிழகத்தில் சரியான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #PonRadhakrishnan
கரூர்:
தி.மு.க. மாநில மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வை பொறுத்தவரை எந்த தத்துவத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அதில் இருந்து இம்மியும் விலகி விடாமல் செயல்பட்டு வருகிறது. அண்ணாவுக்கு பிறகு தலைவர் கருணாநிதி இதனை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கொங்கு மண்டலத்தில் அதிக அளவு வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்றைக்கு ஆட்சியில் இருந்திருப்போம்.
கட்சியில் கொங்கு மண்டல களையெடுப்பு நடந்து முடிந்துள்ளது. நாளை அல்லது மறுநாள் தென் மண்டல களையெடுப்பு வெளியாகும். இது என் விருப்பத்திற்காக அல்ல, கட்சியின் நன்மைக்காக.
மாணவரணியின் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றினால் தான் 1967-ல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. தி.மு.க. படிப்படியாகத்தான் தேர்தலில் நின்று வெற்றிபெற்றது. கட்சி தொடங்கியதும் தேர்தலில் போட்டியிடவில்லை.
நாட்டில் புதிது, புதிதாக கட்சிகள் வரலாம். கட்சி தொடங்குவதற்கு முன்பே நான்தான் முதல்வர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பூத் ஏஜெண்டுகளை நியமிக்கிறார்கள். கட்சி தொடங்கியதும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரமும் பெறுகிறார்கள். கட்சி பெயர், கொள்கையையே அறிவிக்காமல் நான்தான் அடுத்த முதல்வர் என்றும் கூறுகிறார்கள். அது அவர்கள் ஆசை, அதைப் பற்றி விமர்சிக்க தேவையில்லை. அதைப்பற்றி விமர்சித்து நம் தகுதியை குறைத்துக்கொள்ள கூடாது. யாரையும் கேலி செய்தோ, தரக்குறைவாகவோ பேசியது கிடையாது.
கர்நாடகாவில் 38 எம்.எல். ஏ.க்களை வைத்துக்கொண்டு குமாரசாமி தற்போது முதல்வராக உள்ளார். நாம் 89 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தும் முதல்வராக இல்லை. நீங்கள் நினைத்தால் முடித்திருக்கலாமே என கூறுகிறார்கள். கலைஞர் இருந்தால் விட்டிருப்பதாரா? ஸ்டாலின் ரொம்ப பொறுமை என்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கவனித்து ஆட்சி நடக்கிறது. அவர்களை நம்மால் இழுக்க முடியும். அவர்களை விட நாம் அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். தலைவர் கருணாநிதி எப்போதாவது ஆட்சியை கவிழ்த்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் இந்த ஆட்சியை நாளைக்கே கவிழ்க்க தயார். ஆனால் பல முறை தி.மு.க. ஆட்சிதான் கலைக் கப்பட்டிருக்கிறது. இதுதான் வரலாறு.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் துப்பாக்கி சூடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என அகில இந்திய தலைவர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இறந்ததற்கு மோடி ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. குஜராத்தில் நடந்திருந்தால் இவ்வாறு இருப்பார்களா?
கவர்னர் ஆய்வு செய்வது தவறு என அவரிடம் நேரடியாக சொன்னதால் தான் நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் ஜெயில் என ஆளுநர் மாளிகை அறிவிக்கிறது. மாநில சுயாட்சி பறிபோகிறது என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவும் தயார். அடுத்த ஆய்வுக்கு கவர்னர் செல்லும்போது, நானே கருப்புக்கொடி காட்ட செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK
தேனி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-
எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது செல்லமேஸ்வர் உள்பட சக நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதம் அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை.

உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய போதும் தமிழக அரசு எதையும் செய்யவில்லை. அப்போது தமிழக அரசு மீது ஏன் வழக்க தொடரவில்லை.
ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் அவதிப்படும் ஆதங்கத்தில் பேசியதை அவமதிப்பு என்கின்றனர்.
தமிழக அரசு என் மீது வழக்கு போட்டு மிரட்டி பார்க்கிறது. என்னை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை அழிப்பது தேவையற்றது. சென்னை கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக அமைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan
கோவை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை கொடிசியாவில் வருகிற 8-ந் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் நடும் விழா நடந்தது.
இதை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
110-வது விதியின் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதையெல்லாம் நிறைவேற்றாமல் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு 8 வழிசாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நில உரிமையாளர்களும், விவசாயிகளும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள போதிலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்களின் நிலங்களை அபகரிப்பதையே நோக்கமாக உள்ளனர். 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது.
இந்த அரசு தனியாருக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது. கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளது. ஆனால் 24 மணி நேர குடிநீர் திட்டம் என கூறி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவது ஏன்?
மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மலரும் போது இந்த திட்டத்தை ரத்து செய்வார். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க இந்த அரசு தயங்குகிறது.
கூட்டுறவு சங்க தேர்தல் கூட நியாயமாக நடைபெற வில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த கோர்ட்டிலும் தடை இல்லை. ஆனால் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி கொண்டே செல்கிறார்கள். எந்த தேர்தலையும் இந்த அரசால் எதிர் கொள்ள முடியாது.
வரும் சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளுக்கும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை, முன்னாள் எம்.பி.க்கள் திருப்பூர் சிவசாமி, சுகுமார் மற்றும் வக்கீல் அகஸ்டஸ் உள்பட பலர் உடனிருந்தனர். #senthilbalaji #tngovt #localelection
திருச்சி:
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சமயபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைத்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் இல்லாத காரணத்தினால் அரசு உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கும் நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால்தான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியும். என்னை பொருத்தவரை இன்னும் ஓராண்டு காலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தமிழக அரசு நினைத்தால் இன்னும் மூன்று , நான்கு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும். உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.
சுமார் 20,000 காவலர்கள் ரத்த தானம் செய்து இருப்பதை வரவேற்கிறேன். பல மாவட்டங்களில் காவலர்களிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை முறையான பிரீசர் பாக்ஸ் எனப்படும் ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாதாரண அட்டைப் பெட்டிகளில் எடுத்து சென்றுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக எடுத்து இருப்பதை வரவேற்கிறேன். இரண்டு பேரும் அரசியல் மற்றும் கலைத்துறையில் மக்களுடைய மரியாதையை பெற்றவர்கள்.
சிலை கடத்தல் வழக்கில் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பின்புலமாக செயல் படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம். எனவே இதுதொடர்பாக தமிழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் வலுவாக எடுத்துரைக்க வேண்டும். தமிழக டெல்டா விவசாயிகளுக்கு பாசன நீர் குடிப்பதற்கு ஏற்ற வகையில் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இந்த குழு கூட்டத்திலேயே தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி தொடர்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
சென்னை-சேலம் 8 வழி சாலையால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. மக்களை தொல்லைப்படுத்தி கமிஷனுக்காக சாலை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #localelection
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
4 ஆண்டு கால மோடி அரசின் சாதனை இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையில் முதலிடம் பிடித்தது தான். கடந்த ஆண்டில் 4-வது இடத்தில் இருந்து தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
சிறுமிகள், பழங்குடியினர்,சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க சென்னையில் செப்டம்பர் முதல்வாரத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.
8 வழி சாலை பற்றி கருத்து கூறினால் காவல் துறை மூலம் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
விதிமுறைகளுக்கு எதிராக கவர்னர் அறிக்கை வெளியிடுகிறார். 7 ஆண்டுகள் சிறை என்ற கவர்னரின் போக்கு கண்டிக்கத்தக்கது.

இது முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? காவல்துறை தலைமையாரிடம் உள்ளது என்று தெரியவில்லை.
கருத்து கூறியவர்களை கைது செய்த காவல் துறை தற்போது செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களை தாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தவர்களுக்காக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் இணைந்து 3-ந் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜூலை 17-ந் தேதி திருவண்ணாமலையிலும், 20-ந் தேதி சேலத்திலும் பசுமை வழிச்சாலையை எதிர்த்து மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #Thirumavalavan
தருமபுரி:
தருமபுரி தொகுதி எம்.பி.யும்., முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர்.
ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிதிநிதிகளும் இல்லை.
இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும்.
இது தொடர்பாக பாராளு மன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன்.
மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக் கொள்கிறேன்.
நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர்.
நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தேன்.
கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்ல முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalem8wayroad
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கவுண்டபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தனது கோரிக்கை குறித்து பேசினார்.
அப்போது தமிழ் மாதங்களை வரிசைப்படுத்தி அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை கிராமிய பாடல்களாக பாடினார். நீண்ட நேரம் அவர் பாடிக்கொண்டே இருந்ததால், கடுப்பான தி.மு.க. உறுப்பினர்கள் நீண்ட நேரம் அவர் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோரிக்கைகளை மட்டும் தெரிவிக்கும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பாடுவதை நிறுத்தி விட்டு தனது கோரிக்கைகளை தெரிவித்து விட்டு அமர்ந்தார். #TNAssembly
சென்னை:
பல்லாவரம் இ.கருணாநிதி சட்டசபையில் இன்று மீனம்பாக்கம், பொழிச்சலூர், திரிசூலம் பகுதிகள் பல்லாவரம் தாசில்தார் அலுவலக கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “ஏற்கனவே பொழிச்சலூர், பல்லாவரம் தொகுதியில் உள்ளது. மீனம்பாக்கம் கிராமம் சென்னை மாவட்டத்துடன் இணைகிறது, திரிசூலம் பல்லாவரம் வட்டத்துடன் இணையும். சென்னை மாவட்ட விரிவாக்கப்பணி தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வருகிற ஜூலை மாத இறுதியில் விரிவாக்கப் பணி முடிவடைந்து செயல்படும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “சென்னை மாநகராட்சிக்கு இணையாக வருவாய் மாவட்டத்திலும் ஒரே மாதிரியான ஆட்சி எல்லைகள் வரும் வகையில் மாவட்ட எல்லைகள் விரிவுபடுத்தப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து இ.கருணாநிதி:- 3 நகர நிர்வாகத்துக்கு ஒரு வி.ஏ.ஓ.தான் உள்ளார். பல்லாவரம் நகர வி.ஏ.ஓ. அனகாபுத்தூர் சென்று பணியாற்றுகிறார். எனவே ஒரு கிராமத்துக்கு ஒரு வி.ஏ.ஓ. பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10,000 பட்டாக்களை பம்மல், அனகாபுத்தூருக்கு வழங்க வேண்டும்” என்றார்.
இதற்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்கையில், “அரசு இதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார். #TNAssembly #MinisterUdayakumar
நாகர்கோவில்:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக அவர் கையெழுத்து போட்டார். அப்போது அவரை வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அதன்பின் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் ரீதியாக மக்களை சந்திப்பதற்கு தமிழக அரசு பயப்படுகிறது. இந்த ஆட்சியில் மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் விரோத ஆட்சியாக தற்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது.
மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். தேர்தல் வந்தால் எந்த சாதனையை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டெல்டா விவசாயிகள் தற்கொலை, ஒகி புயலால் மீனவர்கள், விவசாயிகள் பாதிப்புபோன்றவற்றை அவர்களால் சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை. பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபம் அடைந்துள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு துரோகம் செய்து விட்டது. இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் காத்து கிடந்த பலர் உயிரை விட்டனர்.
தமிழகத்தில் சொந்த நாட்டிலேயே மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்கும் மக்களின் அழுகுரல், கூக்குரல் தான் கேட்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி 150 அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #velmurugan #tngovernor #tnchiefminister
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் இடிந்தன. இதற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்று நடராஜன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
“பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ.க்களும் பார்வையிட்டனர். நானும் பார்வையிட்டேன். வீடுகளை இழந்த மீனவர்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை என் வீட்டு முன்பு ஒரு பெண் நண்டு விடும் போராட்டத்தை நடத்தி இருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்கள் மூலம் இது போன்று தகவல்களை பரப்பி விட்டு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள்.
நண்டை கண்டு எந்த பயமும் கிடையாது. சிங்கம், புலி, கரடி என எல்லாத்தையும் பார்த்தவன். இதை யாரோ தூண்டி விடுகிறார்கள்” என்றார். அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, “அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 ஆண்டாக வனத்துறை அமைச்சராக இருந்தவர். எனவே அவர் சிங்கம், புலி, கரடி என எது வந்தாலும் பயப்படமாட்டார்” என்றார்.
அப்போது தி.மு.க. உறுப்பினர் சாமி கருத்து ஒன்றை கூறினார். உடனே ஜெயக்குமார் ஒரு கருத்தை தெரிவித்தார். அப்போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “அமைச்சர் சொன்ன கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து அமைச்சர் பேசிய கருத்தை அவை குறிப்பில் இருந்துநீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். #MinisterJayakumar






