என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JayaKumar home Crab struggle"

    சிங்கம் மற்றும் புலிக்கு கூட பயப்படமாட்டேன் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக பேசினார். #MinisterJayakumar

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் இடிந்தன. இதற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்று நடராஜன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    “பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ.க்களும் பார்வையிட்டனர். நானும் பார்வையிட்டேன். வீடுகளை இழந்த மீனவர்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை என் வீட்டு முன்பு ஒரு பெண் நண்டு விடும் போராட்டத்தை நடத்தி இருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்கள் மூலம் இது போன்று தகவல்களை பரப்பி விட்டு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள்.

    நண்டை கண்டு எந்த பயமும் கிடையாது. சிங்கம், புலி, கரடி என எல்லாத்தையும் பார்த்தவன். இதை யாரோ தூண்டி விடுகிறார்கள்” என்றார். அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, “அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 ஆண்டாக வனத்துறை அமைச்சராக இருந்தவர். எனவே அவர் சிங்கம், புலி, கரடி என எது வந்தாலும் பயப்படமாட்டார்” என்றார்.

    அப்போது தி.மு.க. உறுப்பினர் சாமி கருத்து ஒன்றை கூறினார். உடனே ஜெயக்குமார் ஒரு கருத்தை தெரிவித்தார். அப்போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “அமைச்சர் சொன்ன கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து அமைச்சர் பேசிய கருத்தை அவை குறிப்பில் இருந்துநீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். #MinisterJayakumar

    சேதம் அடைந்த வீடுகளை பார்வையிடவில்லை, உதவிகளும் செய்ய முன்வரவில்லை என்பதை கண்டித்து அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். #MinisterJayakumar

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட திடீர் கடல் அரிப்பில் சில வீடுகள் சேதம் அடைந்தன.

    சேதம் அடைந்த வீடுகளை பார்வையிடவில்லை. உதவிகளும் செய்ய முன்வரவில்லை என்பதை கண்டித்து பட்டினப்பாக்கத்தில் குடியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் ஒரு பெண் நண்டுவிடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்த போராட்டத்தை நடத்துவதற்காக அண்ணா நகரைச் சேர்ந்த நர்தா நந்த குமார் என்ற இளம்பெண் ஒரு பையில் சில நண்டுகளுடன் ஜெயக்குமார் வீட்டுக்கு வந்தார்.

    தன்னந்தனி பெண்ணாக வந்ததால் அவர் தெருவில் நடந்து செல்லும் பெண் என்று கருதி விட்டனர். ஆனால் திடீரென்று பையில் இருந்த நண்டை எடுத்து அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் விட முயன்றார்.

    உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நர்மதா நந்தகுமாரை கைது செய்து நண்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    அதற்குள் தகவல் அறிந்து ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள், “இது எதிர்க் கட்சிகளின் சதிவேலை. அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் அந்த பெண் போராட்டம் நடத்தி இருக்கிறார். அவரை கைது செய்ய வேண்டும்” என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    இதனால் ஜெயக்குமார் வீட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    #MinisterJayakumar

    ×