search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த தேர்தலையும் சந்திக்க இந்த அரசு தயாராக இல்லை: செந்தில் பாலாஜி பேட்டி
    X

    எந்த தேர்தலையும் சந்திக்க இந்த அரசு தயாராக இல்லை: செந்தில் பாலாஜி பேட்டி

    தமிழக அரசு எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். #senthilbalaji #tngovt #localelection

    கோவை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை கொடிசியாவில் வருகிற 8-ந் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் நடும் விழா நடந்தது.

    இதை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    110-வது விதியின் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதையெல்லாம் நிறைவேற்றாமல் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு 8 வழிசாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    நில உரிமையாளர்களும், விவசாயிகளும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள போதிலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்களின் நிலங்களை அபகரிப்பதையே நோக்கமாக உள்ளனர். 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது.

    இந்த அரசு தனியாருக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது. கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளது. ஆனால் 24 மணி நேர குடிநீர் திட்டம் என கூறி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவது ஏன்?

    மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மலரும் போது இந்த திட்டத்தை ரத்து செய்வார். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க இந்த அரசு தயங்குகிறது.

    கூட்டுறவு சங்க தேர்தல் கூட நியாயமாக நடைபெற வில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த கோர்ட்டிலும் தடை இல்லை. ஆனால் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி கொண்டே செல்கிறார்கள். எந்த தேர்தலையும் இந்த அரசால் எதிர் கொள்ள முடியாது.

    வரும் சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளுக்கும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை, முன்னாள் எம்.பி.க்கள் திருப்பூர் சிவசாமி, சுகுமார் மற்றும் வக்கீல் அகஸ்டஸ் உள்பட பலர் உடனிருந்தனர். #senthilbalaji #tngovt #localelection

    Next Story
    ×