search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    11 தமிழக எம்.எல்.ஏ.க்கள் மீது தேர்தல் முறைகேடு வழக்கு - சீர்திருத்த கழக ஆய்வில் தகவல்
    X

    11 தமிழக எம்.எல்.ஏ.க்கள் மீது தேர்தல் முறைகேடு வழக்கு - சீர்திருத்த கழக ஆய்வில் தகவல்

    11 தமிழக எம்.எல்.ஏ.க்கள் மீது தேர்தல் முறைகேடு வழக்கு இருப்பதாக சீர்திருத்த கழக ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா ஆகிய 6 தென் மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் 922 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானார்கள்.

    இவர்களது தேர்தல் பிரசார செலவு, பெற்ற வாக்கு சதவீதம், எதிர்கொண்ட வழக்குகள் போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் என்.ஜி.ஓ. அமைப்பும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வை நடத்தின.

    குறிப்பாக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் தில்லுமுல்லு செய்தும், முறைகேடுகள் செய்தும் வெற்றி பெற்றனர் என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 6 மாநிலங்களிலும் 44 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.

    தேர்தல் முறைகேடு செய்தவர்களில் கர்நாடகாவில் தான் அதிகபட்சமாக 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆந்திராவில் 5 எம்.எல்.ஏ.க்களும், புதுச்சேரியில் 2 எம்.எல்.ஏ.க்களும், தெலுங்கானாவில் 6 எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் முறைகேடுகளில் தொடர்புடையவர்களாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேர்தல் முறைகேடு செய்த 2 எம்.எல்.ஏ.க்கள் கமலக் கண்ணன், சிவக்கொழுந்து என்று ஆய்வுத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தேர்தலின் போது லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆறு தென் மாநிலங்களில் கேரளாவில் மட்டும் எந்த ஒரு எம்.எல்.ஏ. மீதும் தேர்தல் முறைகேடு வழக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும் கேரளாவில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் அதிகம் செலவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    தேர்தல் செலவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.

    தேர்தல் செலவுகளில் பிரசார வாகனத்துக்குத்தான் வேட்பாளர்கள் அதிக அளவு பணத்தை (29 சதவீதம்) செலவு செய்து இருப்பதும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. #Tamilnews

    Next Story
    ×