search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க காரணங்களை தேடி அலைவதா?  மா.சுப்பிரமணியன்
    X

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க காரணங்களை தேடி அலைவதா? மா.சுப்பிரமணியன்

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க காரணங்களை தேடி அலைவதா? என்று சட்டசபையில் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். #TNassembly #Localbodyelections

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நகராட்சி சட்ட திருத்த முன்வடிவு தாக்கல் விவாதத்தில் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்று நாங்கள் கோர்ட்டுக்கு போனது உண்மைதான். 33 சதவிகிதம் மகளிருக்கான இட ஒதுக்கீடு, 50 சதவிகிதமாக ஆனதற்கு பின்னால், யார்-யாருக்கு அந்த 50 சதவிகிதம் என்பது தெரிவிக்காமலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது அதை அறிவியுங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைதான்.

    வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்கிறதே, அதனை சரி செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைத்தான். அதனை சரி செய்து, தேர்தலை நீங்கள் நடத்தியிருக்கலாம். ஐகோர்ட்டு இரண்டு, மூன்று தடவை தேர்தலை நடத்தலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அமைச்சர் இதையே சொல்லி, எங்கள் காதுகளில் தயவு செய்து ரத்தம் வர வைத்து விடாதீர்கள்.

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் போனதால் பாதிப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது என்று சொல்வதை நிறுத்தி விட்டு, நீங்கள் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


    சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் என்று ஒன்று இருக்கிறது. அந்த வாரியத்திற்கு ஏற்கெனவே இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்று இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். இப்போது இரண்டு பேர்களுமே இல்லை. இது ஒரு மிகப்பெரிய கோளாறு. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகின்றன என்று சென்னையைச் சுற்றிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இல்லை. தமிழ்நாடு தேர்தல் ஆணையர்தான் பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் என்பது ஒரு மிகப்பெரிய அமைப்பு.

    தனி அலுவலரால் நிச்சயமாக செயல்படவே முடியாது. ஒரு தனி அலுவலர் எப்படி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியம்? உள்ளாட்சிகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. இன்றைக்கு உள்ளாட்சி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போன ஒரு நிர்வாகமாக இருக்கின்றன. இப்போது இரண்டு வருடங்களாக நாம் காரணங்களைத் தேடி தேடிக் கொண்டிருக்கிறோம்.

    வார்டு எல்லை வரையறை செய்ய வேண்டுமென்ற புதிதாக ஒரு காரணத்தை கண்டுபிடித்து-இட ஒதுக்கீடு சரி செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர் பட்டியல் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன. வார்டு எல்லை வரையறை என்று புதிதாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அதில் பொது மக்களிடமிருந்து 10,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை சீராய்வு செய்து வேண்டியுள்ளது என்ற காரணமும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த காரணங்கெல்லாம் ஒரு சாக்கு போக்குகள் தான் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைப்பதை நிறுத்திவிட்டு தேர்தலை நடத்துவற்குண்டான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNassembly #Localbodyelections

    Next Story
    ×