என் மலர்
செய்திகள்

கோவை குட்கா ஆலை அதிபருக்கு உதவியதால் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார் - எடப்பாடி பழனிசாமி
சென்னை:
கோவையில் சட்ட விரோதமாக குட்கா தயாரித்தது தொடர்பாக காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது குறித்து சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் கிராமம், நல்லம்மாள் தோட்டத்தில் பான்பராக் மற்றும் குட்கா தயார் செய்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் 27.4.2018 அன்று “அமித் எஸ் பிராக்ரன்சஸ்’’ என்ற பெயரில் இயங்கி வந்த தொழிற்சாலைக்குள் சென்று சோதனையிட்டனர். சோதனையின் போது, அங்கிருந்த அக்கம்பெனி மேலாளர் ரகுராம் என்பவரை விசாரித்த போது, மேற்படி தொழிற்சாலை புதுடெல்லியைச் சேர்ந்த அமித் ஜெயின் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக தயாரித்து விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக காவல் துறையினர் சூலூர் காவல் நிலையத்தில் அமித் ஜெயின் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, காவல் துறையினர், மேலாளர் ரகுராம் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்த அஜய், ராம்தேவ் மற்றும் சொஜிராம் ஆகியோரை கைது செய்து, அவர்களது ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.
மேலும், சோதனையின் போது அத்தொழிற்சாலையில் இருந்த 200 மூட்டை கொட்டைப்பாக்கு, 10,520 கிலோ தூள் பாக்கு, 150 கிலோ ஏலக்காய், 95 கிலோ புகையிலை, 1,540 கிலோ லைம் பவுடர், 477 கிலோ கட்டா பவுடர், 3,24,000 இரண்டு கிராம் வி.ஐ.பி குட்கா பாக்கெட்டுகள், 3,52,800 இரண்டு கிராம் பதான் பாக்கெட்டுகள், 25,500 நான்கு கிராம் பதான் பாக்கெட்டுகள், குட்கா மற்றும் பான்பராக் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் எதிரிகள் நான்கு பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
கண்ணம்பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், அத்தொழிற்சாலை கட்டட உரிமம் பெறாமலே கட்டப்பட்டு நடத்துவதற்கும், பொதுமக்கள் அத்தொழிற் சாலை குறித்து புகார் தெரிவித்த போது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் பார்த்து கொள்ளவும், மதிப்பை குறைத்து சொத்து வரி செலுத்தவும், தொழிற்சாலையில் சட்ட விரோதமாக குட்கா தயாரித்து விற்பனை செய்து வருவதை அறிந்தும் அதை மறைத்து அமித் ஜெயினிற்கு உதவியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனடிப்படையில், இவ்வழக்கில் தளபதி முருகேசன் 10.5.2018 அன்று சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
உறுப்பினர் சொன்னதைப் போல, தவறு செய்தவர்களை தான் காவல்துறையினர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆகவே, இதையெல்லாம் புள்ளி விவரத்தோடு செல்லியிருக்கிறேன். நிறைய இருக்கிறது. உங்களுடைய காலநேரத்தினை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக சுருக்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆகவே, அங்கே இருக்கின்ற அந்த பேரூராட்சி தலைவர் பற்றி விளக்கமாக சொல்லி இருக்கின்றேன். விசாரணையின் அடிப்படையில் தான், அவர் அதில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறாரே தவிர, தவறு செய்யாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNassembly #EdappadiPalaniswami






