என் மலர்
ஆசிரியர் தேர்வு
- தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது.
- தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.
தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம்.
பல ஊடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.
அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல்துறை, தற்போது, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற காவல் துறையின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுண்டர்களில் ஈடுபடுவதும்தான் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சாதனை.
மேலும், தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற CBI விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் இந்த விடியா திமுக அரசு, கிட்னி மாற்று முறைகேடு மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதிடாததால், தவறிழைத்த மருத்துவமனை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.
சமூக நலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்றும்; அவர்களுக்கு சுமார் 104 கோடி ரூபாயை நிவாரணமாக மாநில அரசு வழங்கி உள்ளதாகவும் கூறி இருப்பது, தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கு தோல்வியின் வெளிப்பாடா? அல்லது வெட்கக்கேடா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 104 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் குறிப்பிட்டது அரசின் சாதனையா? அல்லது சட்டம்-ஒழுங்கின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கடந்த 4 மாதங்களில், தமிழ் நாட்டில் சுமார் 501 கொலைகளும், சுமார் 156 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
* செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் இரண்டு காவலர்களே, அண்டை மாநிலப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது.
* சென்னை அடையாறு அருகே காந்தி நகரில் குணா என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.
* தேனி அருகே இரண்டரை சவரன் தங்க நகைக்காக இளைஞரை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியது.
* திருப்பூரில் மதுபோதையில் அசாம் இளைஞரை வெட்டிக் கொன்றது.
இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும்; பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக 'Compromise' செய்திருப்பதையும் பார்க்கும்போது, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சி, 'சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது'.
புரட்சித் தலைவி அம்மா ஆட்சி காலத்திலும்; தொடர்ந்து எனது தலைமையிலான அம்மா அரசிலும், சட்டப்படி சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்துள்ளது.
விடியா திமுக ஆட்சியில் நிரந்தர DGP இருந்தபோதே காவல்துறை சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது காவல் துறையின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் DGP பதவி காலியானவுடன் தகுதியான காவல் உயர் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், விடியா திமுக அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடக்கூடிய ஜூனியர் அதிகாரிகளின் பெயர்களை மத்திய தேர்வாணையம் பரிந்துரைக்காத நிலையில், வேண்டுமென்றே DGP நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக DGP-யை நியமித்துள்ளார் பொம்மை முதலமைச்சர். தமிழகத்தில் DGP நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விடியா திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி 7.11.2025-அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தமிழ் நாடு அரசுக்கு 3 வார காலத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிர்வாகத் திறனற்ற இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது, புரட்சித் தலைவரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
காட்டு புலியை வீட்டில் வைத்தாலும்,
கறியும், சோறும் கலந்து வைத்தாலும்,
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்,
மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது
என்ற வரிகள் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது.
நான்கரை ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக விளம்பர மடல் ஆட்சி நடத்துவதை தமிழக மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை தலைமை DGP-ஆக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா இன்னும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
- இதனால் இந்திய அணி பரிசோதனை என்ற பெயரில் வீரர்களை அடிக்கடி மாற்றக் கூடாது.
இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டது. மற்ற 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் காம்பினேஷன் மாறிக் கொண்டே இருந்தது. இந்த அணி நிர்வாகம் இதை பரிசோதனை எனக் குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியா 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. இதனால் அனைத்து பரிசோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-
இது பரிசோதனை கட்டமாகும். இந்த பரிசோதனைகள் நின்றுவிடும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. இதனால் யாரைம் டாப் வரிசை அல்லது கீழ் வரிசையில் விளையாட வைக்க முடியும், விளையாட அல்லது யாரையும் நீக்க முடியும் என்று சொல்கிறார்கள். வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, அவர்கள் பரிசோதனை செய்யலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
எனினும், சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 பேட்டிகளிலும் விளையாட இருக்கிறது. அது பரிசோதனை முடிவுக்கு நேரம் என்று நினைக்கிறேன். நாம முடிச்சிட்டோம்னு நினைக்கிறேன். இதற்கு அப்புறம் நீங்க அதிகமாக பரிசோதனை பண்ண முடியாது. நீங்க செய்யக் கூடாது. ஏனெ்றால், உலகக் கோப்பை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
- காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
- மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக உள்ள ஹன்ஸ்ராஜ் இமாச்சலப் பிரதேச சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும் ஆவார்.
ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த ஆண்டு தன்னை சிறு வயதில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறை இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட அப்பெண், எம்எல்ஏ தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மீண்டும் புகார் அளிக்காமல் இருக்கும்படியும் அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் நெருங்கிய கூட்டாளி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் மீதே போக்ஸோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்எல்ஏ ஹன்ஸ் ராஜ் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பெண் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில மகளிர் உரிமை ஆணையம் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரியுள்ளது.
- இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
- ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.
முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
- 41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் மனிதாபிமானம் மிக்கவரா?.
- பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல் இருந்த விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசியது குறித்து விஜய் காட்டமாக பதில் அளித்திருந்தார். மனிதாபிமானம் இல்லாமல் முதல்வர் ஆதாயம் தேடுகிறார் எனக் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் "41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் மனிதாபிமானம் மிக்கவரா?. பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று நேரில் பார்க்காமல் இருந்த விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?. த.வெ.க. தலைவர் விஜய் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவர். நாங்க மனிதாபிமானம் இல்லாதவரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தசரா விடுமுறையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், கடந்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.
அந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை தினமும் ஒரு வகுப்பு கூடுதலாக நடத்தும்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் தினமும் கூடுதலாக ஒரு வகுப்புகளை நடத்தி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
- வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
- வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.
சென்னை:
சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் தேடல் வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அதை காணலாம். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
இந்த கணக்கீட்டு படிவம் குறித்த சந்தேகங்கள் எழுந்தால் வாக்காளர் உதவி நம்பரான 1950 மற்றும் வாட்ஸ்அப் குறைதீர் நம்பரான 9444123456 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் எழும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.
இதற்காக ECINET செயலி அல்லது https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, book a call with BLO என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, செல்போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.
கடந்த தீவிர திருத்த பட்டியல்களில் பெயர் இருந்தால், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களான, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினரின் பெயர், உறவு (முறை), மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், எண், பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் ஏற்கனவே சில விவரங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் புகைப்படமும் இருக்கும். அதில் கூடுதலாக, பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பம்), செல்போன் எண், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் அல்லது மனைவியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்) அவற்றை வாக்காளர் குறிப்பிட வேண்டும்.
இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.
நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
- இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை டிரம்ப் விதித்தார்.
- இந்தியா ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார்.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியா ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரஷ்ய எரிசக்தி மீதான அமெரிக்க தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்தார்.
- இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- இணையத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வைரலானார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இணையத்தில் அவர் வைரலானார்.
இந்நிலையில், மும்பை விமான நிலையம் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் துணை ராணுவத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
- தொழில்நுட்ப கோளாறால் ரன்வேயில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.
காத்மண்டு:
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.
தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.
- வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.
பீகாரின் சமஸ்திபூரில் சாலையில் பறக்கும் VVPAT சீட்டுகளின் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. வைரலான வீடியோவில், உள்ளூர்வாசிகள் VVPAT சீட்டுகளை எடுத்து சரிபார்ப்பதைக் காணலாம்.
இந்த சீட்டுகள் வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வந்தவை என்று ஆர்ஜேடி குற்றம் சாட்டியது.
இருப்பினும், இந்த சீட்டுகள் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை வாக்குப்பதிவிலிருந்து வந்தவை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீட்டுகள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த சமஸ்திபூர் மாவட்ட நீதிபதி ரோஷன் குஷ்வாஹா, "நாங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, இந்த சீட்டுகள் மாதிரி வாக்குப்பதிவில் இருந்து வந்தவை என்பதைக் கண்டறிந்தோம்.
அவை சரியாக அழிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான வாக்குச் சாவடி ஊழியர்களை அந்த சீட்டுகளில் உள்ள EVM எண்களைப் பயன்படுத்தி அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடமை தவறியதற்காக உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவுத்துள்ளது.






