என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அந்நிய மண்ணில் 2023-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
- 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
கொழும்பு:
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தேல் 65 ரன்னில் அவுட் ஆனார். 20-வது சதம் அடித்த ஜோ ரூட் 111 ரன்களுடனும் (108 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), 3-வது சதம் விளாசிய கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ரன்) கன்னி சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் (1-2), (1-2), இந்தியா (0-3), நியூசிலாந்து (0-3) அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியுற்ற நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.






