என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் குழு அடுத்த மாதம் வருகை
- தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
- தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கம். பொதுவாக வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதும் இந்தக் குழு வரும் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டிய தேதியில் இந்தக் குழு சென்னைக்கு வருகை தரும்.
இந்த வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார். அதற்கு முன்னதாக தேர்தல் கமிஷனின் துணை கமிஷனர்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
சிறப்பு தீவிர திருத்தப் பணியை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் (நாளை மறுநாள்) முடிகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மேலும் கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






