search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் புறப்பாடு
    X

    பல்லக்கு வாகனத்தில் முன்னுதித்த நங்கையம்மன் புறப்பட்டு சென்ற காட்சி.

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் புறப்பாடு

    • பெண்கள் மலர் தூவி அம்மனை வழி அனுப்பி வைத்தனர்.
    • இந்த பவனி வருகிற 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது.

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநக ராக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் இருந்தபோது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. பின்னர், தென் திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்த புரத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த நவராத்திரி விழாவும், திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாறியது.

    இதற்காக ஆண்டுதோறும் குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இதையடுத்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவிலில் அதிகாலையில் பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேள தாளங்களுடன் கோவிலை விட்டு வெளியே எடுத்து வரப்பட்ட அம்மனுக்கு கேரள, தமிழக போலீசார் மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இணை ஆணையர் ஞானசேகர், தாசில்தார் சேகர், பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட அம்மன் 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது பெண்கள் விளக்கு ஏற்றியும், மலர் தூவியும் அம்மனை வழி அனுப்பி வைத்தனர். சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம் வழியாக இன்று மாலை பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டசாமி கோவிலை சென்றடைகிறது. நாளை (23-ந்தேதி) காலையில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம் பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் விக்ரகங்கள் பவனி தொடங்கும் முன்னதாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் நாளை காலை 7.30-க்கு நடக்கிறது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக, கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கெட்டு வந்தடையும் சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டுவரப்பட்டு பூஜை கள் செய்யப்படும்.

    அங்கிருந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்கில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை வேளிமலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும்.

    இந்த பவனி வருகிற 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலும் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் விஜயதசமி முடிந்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தடையும்.

    Next Story
    ×