search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் திதி- தர்ப்பணம் கொடுக்க பக்தர்களுக்கு தடையில்லை
    X

    ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் திதி- தர்ப்பணம் கொடுக்க பக்தர்களுக்கு தடையில்லை

    • வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.
    • நீர்வரத்தை பொறுத்து புனித நீராட அனுமதி அளிக்கப்படும்.

    பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கூடுதுறையில் பவானி ஆறு மற்றும் காவிரி ஆற்றுடன், கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுத நதியும் இங்கு கூடுவதாக ஐதீகம் உள்ளது. இதனால் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதன்காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி மாத பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். மேலும் நாக தோஷம், திருமண தோஷம் உள்பட பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் பரிகார வழிபாடும் செய்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது. இதை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திதி, தர்ப்பணம் மற்றும் பரிகார பூஜை செய்வதற்காக வருவார்கள். ஆனால் தற்போது பவானியில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கலாமா? திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவத்துறை மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த துறை அதிகாரிகள் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:- வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்தை முறையாக சீரமைக்க வேண்டும். தீயணைப்பு துறை சார்பில் நீச்சல் வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோடு இருக்க வேண்டும். மருத்துவத்துறையினர் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர் அடங்கிய சுகாதார குழுவினர் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் இருக்க வேண்டும்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் கூடுதுறையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். காவிரி ஆற்றில் வெள்ளம் குறித்த தகவல்களை பக்தர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். மேற்கண்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

    மேலும் ஆடி அமாவாசையான வருகிற 28-ந் தேதி பவானி கூடுதுறைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கூடுதுறை பகுதியில் பக்தர்கள் திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை.

    கூடுதுறை தவிர ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் அங்குள்ள நீர்நிலைகளில் பாதுகாப்பு கருதி பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×