search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    சபரிமலை கோவிலுக்கு 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
    சபரிமலை :

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    முதலில் தினமும் 1,000 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு அந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதற்கிடையில் சபரிமலையில் நேற்று முதல் 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆன்-லைன் முன்பதிவு தொடங்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வழக்கம்போல் குறைந்த பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி சபரிமலையில் தேவஸ்தான தலைவர் வாசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    20-ந் தேதி முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.

    மேலும் தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான உயர் மட்ட குழுவும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை. அரசின் உத்தரவு வந்த உடன், சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக ஆன்லைன் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    கேரளாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் கூடி வருவதால் மகர விளக்கை முன்னிட்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் மலைக்கு வரும் பக்தர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பரிசோதனைக்கு பின், கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்படும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனைக்கான நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந் தேதி வரை இந்த நடை முறை பின்பற்றப்படும். மண்டல சீசனில் சபரிமலை வருவாய் மிகவும் குறைந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு கேரள அரசு ரூ.20 கோடி சிறப்பு நிதியாக வழங்கி உள்ளது.

    மேலும் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு கடந்த 6 மாத காலத்தில் கேரள அரசு ரூ.50 கோடி தேவஸ் தானத்துக்கு ஒதுக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×