search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

    சபரிமலையில் நாளை (20-ந்தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்தது. கூடுதல் பக்தர்கள் வருவதால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டு, மறுநாள்(16-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
     
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனத்துக்கு ஆன்-லைனில் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், சன்னிதானம் மற்றும் பம்பையில் பக்தர்கள் தங்குவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2 ஆயிரம் பேருக்கும், மற்ற நாட்களில் 1000 பேருக்கும் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தினமும் 2 ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    மேலும் தினமும் சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு, காங்கிரஸ் தலைவர் அஜய் தரயில், சென்னையை சேர்ந்த சுனில், பைஜூ ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 20-ந்தேதி முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்தது. கூடுதல் பக்தர்கள் வருவதால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் சபரிமலையில் நாளை முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சாமி தரிசனத்துக்கு ஆன்-லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், கூடுதல் பக்தர்கள் அனுமதிப்பதற்கான முன்பதிவு தொடங்கியது. மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் கோவில் நடை திறந்திருக்கும் நாட்களுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

    கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் விதிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிதல், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடக்கிறது. அதற்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இதனால் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு வருகிற 25-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது.
    Next Story
    ×