search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை
    X
    சபரிமலை

    சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்தமாதம் 15-ந்தேதி கோவில்நடை திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்-லைன் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன.

    அது மட்டுமின்றி பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2ஆயிரம் பக்தர்களும், மற்ற நாட்களில் 1000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடியநிலையில், வெறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

    ஆகவே தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்தது. இதுதொடர்பாக தேவசம்போர்டு தலைவரும், தேவசம்போர்டு மந்திரிக்கு 2முறை கடிதம் எழுதினார். அவர் தனது கடிததத்தில் குறைந்த பக்தர்கள் வருவதால், தினமும் வருவாயை விட 10மடங்கு அதிகமாக செலவு ஏற்பட்டு வருவதை சுட்டிக் காட்டியிருந்தார்.

    பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு தலைவரின் கோரிக்கையை பரிசீலித்த கேரளஅரசு, தினமும் கூடுதலாக 1000பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2 ஆயிரம் பேருக்கு அனுமதி என்று இருந்தது 3 ஆயிரமாகவும், மற்ற நாட்களில் 1000 என இருந்தது 2 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டது.

    கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கான முன்பதிவு ஆல்- லைனில் நேற்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு தொடங்கியதும் முன்பதிவு செய்யவேண்டும் என்று காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், காலையில் இருந்தே சபரிமலை வெப் சைட்டை கண்காணித்தபடி இருந்தனர்.

    ஆனால் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கான முன்பதிவு மாலை 5 மணிக்கு பிறகே தொடங்கியது. கூடுதல் பக்தர்களுக்கான முன்பதிவு மாலையே நடந்ததால் நேற்று 1000 பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். புதிய அறிவிப்பின்படி கூடுதல் பக்தர்கள் இன்று முதலே அனுமதிக்கப்படுகின்றனர்.

    மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கான முன்பதிவு சிறிதுநேரத்திலேயே முடிந்து விட்டது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த பல பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாட்டுக்கு வரும் பெண்களுக்கான வயதுவரம்பை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்களின் சேவைகளுக்காக கேரள காவல்துறையுடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு புதிய வலைதளத்தை தொடங்கி யுள்ளது.

    அதில் சபரிமலைக்கு வரக் கூடிய பெண்களுக்கான வயதுவரம்பு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமான பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக 10வயதுக்கு குறைவான சிறுமிகள் மற்றும் 65வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே கேரள அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில் சபரிமலையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கான வயதுவரம்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×