search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    கந்தசஷ்டி விழாவிற்கான காரணங்கள்

    ஞான சக்தி எனப்படும் வேலின் தாக்கத்தால் ஆணவம் அழிந்து பரம்பொருளின் திருவடி அடையலாம் என்பதை உணர்த்தவே கந்தசஷ்டி விரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகனான காசிபர் என்னும் முனிவர் சிறந்த சிவ பக்தர். சிவனை நோக்கித் தவிமிருந்து சிவனிடமிருந்து ஒப்பற்ற சக்தியைப் பெற்றவர். ஆனால் மாயை என்னும் அசுரப் பெண்ணின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களுக்கு சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்களும், அசமுகி என்ற அசுரப் பெண்ணும் பிறந்தனர். இவர்களில் சூரபத்மன் மனித முகமும், சிங்க முகன் சிங்க முகமும், தாரகாசுரன் யானை முகமும், அசமுகி ஆட்டு முகமும் உடையவர்களாகவும், அசுரக்குணம் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.

    அசுர சகோதரர்கள் சிவனை நினைத்து தவமிருந்து சிவனிடமிருந்து சிவ அம்சக் குழந்தையால் தான் தங்களுக்கு அழிவு வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றனர். இதனால் ஆணவம் தலைக்கேற, எல்லோரையும் துன்புறுத்தினர்.

    அசுரர்களின் கொடுமைகள் தாளாமல் எல்லோரும் சிவனிடம் கொடுமைகள் பற்றி முறையிட்டு தங்களை காப்பாற்ற வேண்டினர். அப்போது சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களோடு அதோ முகம் என்னும் ஆறு முகங்களிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கினார்.

    அவற்றை வாயு மற்றும் அக்னி பகவான் மூலம் கங்கையிடம் சேர்ப்பிக்கச் செய்தார். கங்கையும் வேல் போன்ற புற்களை உடைய சரவணப் பொய்கையில் தீப்பொறிகளைச் சேர்த்தது. அவை ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இதனால் குழந்தை சரவணபவன் என்றழைக்கப்பட்டார்.

    பின் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். எனவே இவர் கார்த்திகேயேன் என்றழைக்கப்பட்டார்.

    குழந்தையை பார்க்க வந்த பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்தார். குழந்தை ஆறு தலை மற்றும் ஒரு உடலுடன் காட்சியளித்தது. இப்போது இவர் சண்முகன், ஆறுமுகன் ஆனார்.

    பின் குழந்தையானது வளர்ந்து சிறுனாக மாறிய போது குமரன் ஆனார். இவரே தேவர்களின் படை தளபதி ஆனார். இப்போது இவர் தேவசேனாதிபதி ஆனார்.

    பின் அன்பின் வடிவான தன்தாய் பார்வதியிடம் இருந்து ஞான வேலை வாங்கிக் கொண்டு சூரனை சம்காரம் செய்யப் புறப்பட்டார். இப்போது இவர் சக்தி வேலன் என்றழைக்கப்பட்டார்.

    முருகனுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஐப்பசி வளர்பிறை முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை போர் நடைபெற்றது. முதலில் தாராசுரன் மற்றும் அவனது கிரௌஞ்ச மலை என்னும் மாயை முருகன் அழித்தார். பின் சிங்க முகன் என்னும் கன்மை ஒழித்தார்.

    இறுதியில் நான், எனது என்ற ஆணவத்தின் வடிவமான சூரபத்மனுடன் போரிட்டார். அப்போது அவன் பல மாயைகள் புரிந்தான். இறுதியில் சூரபத்மன் மாமரமாக மாறினான். முருகன் தன் தாயிடமிருந்து வாங்கிய ஞானவேலைக் கொண்டு மாமரத்தைப் பிளந்தார்.

    அப்போது சூரன் ஞானவேல் தன்மீது பட்டதும் மனம் திருந்தி தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் அப்போது முருகன் இரண்டு துண்டுகளான மாமரத்திலிருந்த அசுரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயிலைத் தன் வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் வைத்துக் கொண்டார். இந்நிகழ்வே சூரசம்காரம் என்றழைக்கப்படுகிறது. இதுவே கந்த சஷ்டி கொண்டாடக் காரணமாகும்.

    ஞான சக்தி எனப்படும் வேலின் தாக்கத்தால் ஆணவம் அழிந்து பரம்பொருளின் திருவடி அடையலாம் என்பதை உணர்த்தவே கந்தசஷ்டி விரம் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரசம்கார நிகழ்ச்சியானது திருச்செந்தூரில் நடைபெற்றதாக கருதப்படுகிறது. எனவே இவ்விழா திருச்செந்தூரில் சிறப்பாக நடத்தப்படுகிறது.
    Next Story
    ×