search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: சபரிமலை கோவிலில் தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் கிடையாது

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம்.
    சபரிமலை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

    அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தாமதமாக தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கும், உடல் நலம் குன்றிய பக்தர்களுக்கும் நிலக்கல்லில் குறைந்த கட்டணமான ரூ.625-ல் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி வரை 86 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

    ஆனால் தமிழ்நாட்டில், சபரிமலை தரிசனத்திற்கு தற்போதும் ஆன்லைன் முன் பதிவு நடைபெறுவதாகவும், அதற்கு முன்பதிவு மையங்கள் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் ஒருவருக்கு ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. முன்பதிவு, கொரோனா பரிசோதனை, பிரசாதம் ஆகியவற்றிற்கான கட்டணம் என கூறி பணத்தை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் தேவஸ்தான தலைவர் வாசு கூறி உள்ளார்.

    இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று களபாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் களப கலச ஊர்வலம் நடைபெற்றது. அப்போது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. முன்பதிவு செய்த பக்தர்கள் வலிய நடை பந்தலில் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தனர். மதியம் உச்ச பூஜைக்கு பின் பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மதிய இடை வேளையின் போது, தீயணைப்பு வீரர்கள் வலிய நடைப் பந்தலை கிருமி நாசினி தெளித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுத்தம் செய்தனர்.
    Next Story
    ×