search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    கொரோனா பரிசோதனைக்கு பிறகே சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதி

    சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்றும் காணொலி காட்சி வழியாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், ஆணையர் டாக்டர் பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அங்கிருந்தபடியே, காணொலி காட்சி மூலமாக, கேரள மாநில சுற்றுலா மற்றும் தேவசம் துறையின் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநில அலுவலர்களுடன் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

    சபரிமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் இந்திய பக்தர்களில், தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 40 சதவீத பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் கன்னியாகுமரி, தேனி, கோவை, திருநெல்வேலி மாவட்டம் ஆகிய வழித்தடங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உணவகங்கள், தண்ணீர் வசதி, அன்னதானக்கூடங்கள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இந்து சமயஅறநிலையத்துறை சார்பில் ஆணையர் அலுவலகத்தில் இலவச தொலைபேசி இணைப்பினை 24 மணி நேரமும் மண்டல, மகர கால திருவிழா காலங்களில் இயக்க உள்ளோம். மேலும், சபரிமலையில் ஒரு தகவல் மையமும் அமைக்கப்பட உள்ளன. பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இவ்வாண்டும் தகவல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

    சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்கள் கேரள காவல் துறையின் மெய்நிகர் இணைய வழி தரிசன வரிசையில் பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

    சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்கு முந்தைய 24 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று கொரோனா எதிர்மறை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுயவிருப்பத்தின் பேரில் கட்டணத்தின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை பக்தர்கள் பரிசோதனை செய்து கொள்ள நுழைவு இடங்களில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    10 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அனுமதி இல்லை. நோயால் உடல் நலம் குன்றிய பக்தர்களும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது. நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில் சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி திருக்கோவில் ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை. எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக அய்யப்ப குருசாமிகளை அழைத்து இத்துறை சார்நிலை அலுவலர்கள் மூலம் தேவையான அறிவுரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×