search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை இருப்பதால்  கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சி
    X
    அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை இருப்பதால் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சி

    ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்: தர்ப்பண பூஜை-புனித நீராடலுக்கு தடையால் ஏமாற்றம்

    அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர். புனித நீராடவும், தர்ப்பண பூஜைக்கும் தடை உள்ளதால் ஏமாற்றம் அடைந்தனர்.
    ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும், அக்னி தீர்த்த கடலிலும் புனித நீராட தடை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாத சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்தனர். ஆனால் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கையாக கடலில் பக்தர்கள் குளிக்க தடை உள்ளதால், யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    கடற்கரைக்கு செல்லும் பாதையில் தடுப்பு கம்பிகள் அமைத்தும், அக்னிதீர்த்த கடற்கரை பகுதியிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். எனவே அமாவாசை தினமான நேற்றும் அக்னிதீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது. திதி, தர்ப்பண பூஜை செய்ய வந்த பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    அதே நேரத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சங்குமால் மற்றும் ஒலைக்குடா கடல் பகுதியில் இறங்கி பலர் குளித்தனர். இதே போல் ஏராளமான பக்தர்கள் தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்த கடல் மற்றும் மண்டபம் தோணித்துறை கடலிலும் நீராடினர்.

    ராமேசுவரம் கோவிலில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. சுவாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் மற்றும் கிழக்குவாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கூட்டம் முண்டியடித்ததால் சமூக இடைவெளியும் பல இடங்களில் மாயமானதை காண முடிந்தது.
    Next Story
    ×