
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கோவில்கள் திறந்தாலும் பக்தர்கள் அதிகஅளவு கூட தடை அமலில் உள்ளது. கோவிலில் தரிசனம் மட்டுமே செய்யலாம். அர்ச்சனைகளுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் புரட்டாசி மாத பிறப்பான இன்று மகாளய அமாவாசையும் சேர்ந்து வந்தது. ஆனால் அமாவாசை நாளில் புனித தலங்களில் தர்ப்பணம் செய்ய மக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்து விட்டது.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடவும் அங்கு தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
மேலும் அக்னி தீர்த்த கடலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத வகையில் இரும்பு தகடுகள் கொண்டு நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன.
இருப்பினும் ராமேசுவரத்தில் இன்று காலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கொண்டே இருந்தனர்.
ஆனால் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக ராமநாத சுவாமியை தரிசனம் செய்து விட்டு புறப்பட்டனர்.
பக்தர்கள் கூட்டம் நேரம் செல்ல... செல்ல... அதிகமானதால் தரிசனத்திற்கு நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். ஆண்டுதோறும் இந்த நாளில் ராமேசுவரத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் நிலையில் இன்று சில ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வந்ததால் கடை வீதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி (சேதுக்கரை), தேவிபட்டினம் (நவபாசானம்), மாரியூர் (சாயல்குடி) போன்ற கடற்கரை புண்ணிய ஸ்தல பகுதிகளிலும் ஆண்டு தோறும் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு தடை அமலில் உள்ளதால் அங்கு வந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஆண்டு தோறும் அமாவாசை தர்ப்பணத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருவதுண்டு. இங்கு இதற்காக தனி இடம் ஒதுக் கப்பட்டு புரோகிதர்கள் மூலம் தர்ப்பண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு கொரோனா தடை காரணமாக தர்ப்பணத்திற்கு அனுமதி இல்லை. இருப்பினும் காலை யிலேயே ஏராளமான பக்தர்கள் வழக்கம்போல் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவிலுக்கு திரண்டு வந்தனர். ஆனால் ஊழியர்கள் கொரோனா தடை உத்தரவை தெரிவித்து சுவாமி தரிசனம் மட்டும் செய்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதேபோல் திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை மற்றும் வைகை ஆற்று கரையோர பகுதிகளிலும் தர்ப்பணம் செய்ய வந்தவர்கள் அரசின் தடை காரணமாக ஏமாற்றம் அடைந்தனர்.