
கடந்த 29-ந்தேதி முதல் நேற்று வரை காலை 8 மணிக்கு சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும், சண்முகார்ச்சனையும் நடைபெற்றது. மேலும் 29-ந்தேதி இரவு 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், 30-ந்தேதி ரிஷப வாகனத்திலும் சிங்காரவேலர் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் அன்னவாகனத்தில் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தார். நேற்று இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தார்.
கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று (சனிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணிக்கு சூரபத்மனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இன்று இரவு 7.30 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளிக்கும் சூரசம்ஹாரம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வெள்ளி கேடயத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேவசேனா- சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கந்த சஷ்டிவிழா நிறைவு பெறுகிறது.
கந்த சஷ்டி விழாவையொட்டி கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவிஆணையர் ராணி தலைமையில் நிர்வாக அதிகாரி ராமநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.