search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோஷங்களை முழங்கியவாறு, சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    6-ம் நாளான வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×