search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விருத்தாம்பிகை அம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.
    X
    விருத்தாம்பிகை அம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 5 கோபுரம், 5 தீர்த்தங்கள், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றது தனி சிறப்பாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர்(விருத்தகிரீஸ்வரர்) காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தனித்தனி தேர்களில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதிகாலை 5.35 மணிக்கு விநாயகர் தேர் முதலில் புறப்பட்டது. அந்த சமயத்தில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு கோட்டை வீதியில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு, மேற்கு, வடக்கு வீதி வழியாக கிழக்கு வீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி எழுந்தருளிய தேரானது 7 மணிக்கு புறப்பட்டு, நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.

    அதன் பின்னர் விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் திருவாசகங்களை வாசித்தபடி முன்னே செல்ல தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதேபோல அடுத்தடுத்து விருத்தாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று 4 வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.

    இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாசி மக உற்சவம் நடக்கிறது. இதில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×