search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virudhagireeswarar temple"

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி விபசித்து முனிவருக்கு பழமலைநாதர்(விருத்தகிரீஸ்வரர்) காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கடந்த 18-ந் தேதி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி, விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் தேரோட்டம் நடந்தது. 19-ந் தேதி மாசி மக உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி தெப்ப குளத்தை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, வீதிஉலா நடந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு தெப்ப குளத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளியதும் தெப்ப உற்சவம் நடந்தது.

    இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 5 கோபுரம், 5 தீர்த்தங்கள், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றது தனி சிறப்பாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர்(விருத்தகிரீஸ்வரர்) காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தனித்தனி தேர்களில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதிகாலை 5.35 மணிக்கு விநாயகர் தேர் முதலில் புறப்பட்டது. அந்த சமயத்தில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு கோட்டை வீதியில் இருந்து புறப்பட்ட தேர், தெற்கு, மேற்கு, வடக்கு வீதி வழியாக கிழக்கு வீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி எழுந்தருளிய தேரானது 7 மணிக்கு புறப்பட்டு, நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.

    அதன் பின்னர் விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் திருவாசகங்களை வாசித்தபடி முன்னே செல்ல தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதேபோல அடுத்தடுத்து விருத்தாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று 4 வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.

    இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாசி மக உற்சவம் நடக்கிறது. இதில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    விருத்தாசலத்தில் பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடி மரம், 5 தேர், 5 தீர்த்தம், 5 தலவிருட்சம் என அனைத்தும் 5 எண்ணிக்கையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். ஒவ்வொரு கோவிலையும் வணங்கினால் ஒவ்வொரு வரம் கிடைக்கும்.

    ஆனால் விருத்தகிரீஸ்வரரை வணங்கினால்தான் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து விருத்த கிரீஸ்வரரை தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 16 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலய நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுஞ்ஞை கோபுரங்கள், விமானங்கள் கலகர்ஷணம், செய்து உடன் கலசங்கள் புறப்பாடு நடந்து முதல்கால யாகசாலை பூஜை, இரவு 8.15 மணிக்கு முதல் கால பூர்ணஷூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5.45 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜைகளும், மஹா பூர்ணாஷூதியும் நடந்தது. காலை 6.30 மணிக்கு பால ஸ்தாபன படத்திற்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மயிலாடுதுறை துணை ஆணையர் ஜீவரத்தினம், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., செயல் அலுவலர் ராஜாசரவணக்குமார், ஆய்வாளர் லட்சுமிநாராயணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கியது.

    கோவில் திருப்பணிகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29.4.2002 அன்று நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 16 ஆண்டுகளை கடந்துவிட்டதால் மீண்டும் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலில் உள்ள கோபுரங்கள், சன்னதிகள், மண்டபங்கள், பிரகாரங்கள் என 39 வகையான திருப்பணிகளை செய்ய ரூ.4 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் தேவைப்படுகிறது.

    இதில் தமிழக அரசு ரூ.89 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளது. ரூ.1 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் பணிகளை செய்ய உபயதாரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் மற்ற பணிகளை செய்ய பணம் தேவைப்படுகிறது. இந்த பணத்தையும் உபயதாரர்கள் ஏற்றுக்கொண்டால் முழுவீச்சில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்படும். பின்னர் விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். 
    ×