search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள்
    X

    புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள்

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    காலகூத்தர்

    அமிர்தம் கிடைப்பதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். மந்தரை மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக பயன்படுத்தி பாற்கடல் கடையப்பட்டது. வாசுகி பாம்பின் வால் பகுதியில் தேவர்களும், தலைப்பகுதியில் அசுரர்களும் நின்று கொண்டு பாற்கடலை கடையத் தொடங்கினர். அப்போது வாசுகி பாம்பிற்கு உடல் வலி அதிகரித்தது. அதன் காரணமாக அது தன்னுடைய வாயில் இருந்து அதிகப்படியான விஷத்தைக் கக்கியது. அதே நேரத்தில் கடலில் இருந்தும் விஷம் தோன்றியது. இரண்டு விஷமும் இணைந்து ‘ஆலகாலம்’ என்னும் விஷமாக மாறியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அழியும் நிலை உருவானது. இதைத் தடுக்கும் விதமாக சிவபெருமான் அந்த விஷத்தை பருகினார். அது அவரது தொண்டை பகுதியிலேயே நின்று கொண்டது. பின்னர் சிவபெருமான் திருநடனம் ஆடினார். இதனால் அவர் ‘காலகூத்தர்’ என்று பெயர் பெற்றார்.

    கேதகி

    மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்பதில் பலத்த போட்டி நிலவியது. அந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஜோதி லிங்கமாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார் சிவபெருமான். அந்த நேரத்தில் சிவபெருமானின் தலையில் இருந்த பூவின் பெயர் தான் கேதகி என்னும் தாழம்பூ. சிவபெருமான் ஜோதிலிங்கமாக அவதரித்த போது அவரது தலையில் இருந்த பூ கேதகி. விஷ்ணுவும் சிவபெருமானின் பாதத்தை பார்க்க வராக வடிவம் கொண்டு புறப்பட்டார்.



    பிரம்மன், ஈசனின் தலையை கண்டு வருவதற்காக அன்னப் பறவை உருவம் கொண்டு வானில் பறந்து சென்றார். ஆனால் விஷ்ணுவாலும், பிரம்மனாலும் பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இலக்கை அடைய முடியவில்லை. விஷ்ணு தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் சிவபெருமானின் தலையில் இருந்து விழுந்து தரையை நோக்கி வந்து கொண்டிருந்த கேதகி மலரை சந்தித்த பிரம்மன், அதனிடம் தான் சிவனின் தலையைக் கண்டு விட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி கேதகி மலரும் பொய் சாட்சி சொன்னது. இதனால் சிவபெருமானின் சாபத்தைப் பெற்ற அந்த மலர், இறைவனின் பூஜையில் பயன்படுத்த முடியாமல் ஆனது.

    கர்ணன்

    துர்வாச முனிவரின் மூலமாக குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி அவள் எந்த தேவர்களை நினைக்கிறாளோ அவர்கள் அவள் முன்பாகத் தோன்றி வரம் அளிப்பார்கள். அதன்படி சூரிய தேவனின் மூலமாக குந்திக்கு பிறந்தவன் கர்ணன். திருமணத்திற்கு முன்பாகவே கர்ணன் பிறந்ததால், அவனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி. கர்ணனை ஒரு தேரோட்டி எடுத்து வளர்த்து வந்தார். இருப்பினும் கர்ணன் போர் பயிற்சி அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். ஒரு முறை அவன் பாண்டவர்களால் அவமதிக்கப்பட, கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் கர்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தான்.

    அந்த நட்பின் காரணமாகத்தான், பாண்டவர்கள் அனைவரும் தன் தம்பிகள் என்று தெரிந்த பின்னரும் கூட, துரியோதனனுக்கு ஆதரவாக மகாபாரத யுத்தத்தில் பங்கேற்றான் கர்ணன். அவன் பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்தவன். அது பிறர் கண்ணுக்குப் புலப்படாது. அந்த குண்டலம் அவன் உடலில் இருக்கும் வரை அவனை அழிக்க முடியாது. எனவே தேவேந்திரன், புலவர் வேடத்தில் சென்று அதனை தானமாகப் பெற்றான். மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் அம்பால் கர்ணன் வீழ்த்தப்பட்டான்.
    Next Story
    ×