search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கார்த்திகை தீப திருவிழாவின் 4-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்-தெய்வானை.
    X
    கார்த்திகை தீப திருவிழாவின் 4-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்-தெய்வானை.

    கார்த்திகை திருவிழா: திருப்பரங்குன்றத்தில் 23-ந்தேதி மகா தீபம்

    திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் கார்த்திகை தீப திருவிழாவில் வருகிற 23-ந்தேதி மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தெய்வானையுடன் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவில் சேஷ வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி மாலை 6.45 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள் 23-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக வழக்கம் போல் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றி தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
    Next Story
    ×