என் மலர்

  சினிமா

  விவசாயத்தை அழிக்கும் எதுவும் செய்யக்கூடாது - நடிகர் கார்த்தி பேட்டி
  X

  விவசாயத்தை அழிக்கும் எதுவும் செய்யக்கூடாது - நடிகர் கார்த்தி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்தி விவசாயியாக நடித்திருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், விவசாயம் செய்யப்படாத நிலங்களில் சாலை போடலாம், விவசாயத்தை அழிக்கும் எதுவும் செய்யக்கூடாது என்று கார்த்தி கூறியிருக்கிறார். #Karthi
  கார்த்தி விவசாயியாக நடித்து இருக்கும் “கடைக்குட்டி சிங்கம்” படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதையொட்டி கார்த்தி அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு:-

  கேள்வி:- விவசாயியாக நடிக்க பெரிய ஹீரோக்கள் தயங்குவார்கள். நீங்கள் எப்படி நடித்தீர்கள்?

  பதில்:- எனக்கு விவசாயியாக நடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. அதை கடைக்குட்டி சிங்கம் படம் பூர்த்தி செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க குடும்ப படம். ஒரு குடும்ப கதையில் விவசாயத்தையும் நுழைத்து இருக்கிறோம். இந்த படத்துக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இனி விவசாய மற்றும் குடும்ப படங்கள் வரும். இப்போதே டைரக்டர் பாண்டிராஜிடம் சில பெரிய ஹீரோக்கள் தங்களுக்கும் விவசாயக் கதை பண்ண சொல்லி கேட்டு இருக்கிறார்கள்.

  கேள்வி:- தமிழ்நாட்டில் விவசாயிகள் விவசாயத்தை விட்டே வெளியேறும் சூழல் உருவாகி உள்ளதே?

  பதில்:- விவசாயிகளின் குரல் இப்போது மீடியாக்களில் அதிகம் ஒலிக்கிறது. ஆரோக்கியமான, நல்ல லாபம் தரக்கூடிய விவசாயம் செய்யும் இடங்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கின்றன. நாங்களே படத்தில் விவசாயம் பற்றி பாசிட்டிவான வி‌ஷயங்கள் தான் கூறி இருக்கிறோம். இப்போது நிறைய ஐடி இளைஞர்கள் விவசாயம் பார்க்க வருகிறார்கள்.  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலை உருவாகி வருகிறது. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. என் பள்ளிப்பருவத்தில் நான் பார்த்தவை எல்லாம் கல்லூரிக் காலத்தில் பார்க்க முடியவில்லை. இப்போது அப்படி இல்லை. மாற்றம் உருவாகி வருகிறது.

  கேள்வி:- விவசாயிகளின் தற்போதைய தேவையாக என்ன நினைக்கிறீர்கள்?

  பதில்:- அவர்களது விளை பொருட்களை விற்க சரியான சந்தையை சொல்வேன். விளைந்த பொருளை விற்பதுதான் அவர்களுக்கு இருக்கும் பெரிய சவால். சில கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி ஆன் லைன் மூலம் விற்பனை செய்து தருகிறார்கள்.

  எனவே விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லை. இது எல்லாம் பெரிய அளவில் செயல்படுத்தப் படவேண்டும். இதற்கு அரசு மனது வைத்தால் போதும். இளைஞர்களும் இந்த வி‌ஷயத்தை கையில் எடுத்து அந்தந்த ஊர்களில் சந்தைகளை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் விவசாயம் மீண்டும் தழைக்கும். இங்கே தேவை இருக்கிறது. ஆர்கானிக் என்று சொன்னால் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கும் மக்கள் இருக்கிறார்கள்.

  கேள்வி:- குடும்ப படங்கள் வருவது குறைந்து விட்டதே?

  பதில்:- வன்முறை, ஆபாசம் இல்லாமல் குழந்தைகளுடன் பார்க்க கூடிய படங்கள் நிறைய வரவேண்டும். சில படங்களில் வன்முறை காட்சிகள் தவிர்க்க முடியாது. இங்கே பொழுதுபோக்கு தான் இலக்கு. ஆனால் அதில் சின்னதாக மெசேஜும் சொன்னால் எளிதாக எடுத்துக்கொள்வார்கள்.  கேள்வி:- சமீபகாலமாக விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்துள்ளதே?

  பதில்:- மக்கள் கேட்டு வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று தெரிகிறது. முன்பு பல வி‌ஷயங்கள் மறைக்கப்பட்டு விடும். ஆனால் சமூகவலைதள காலத்தில் எல்லாம் உடனுக்குடன் மக்கள் கவனத்துக்கு வந்து விடுகிறது. எனவே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்களை இப்படி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது.

  கேள்வி:- பசுமைச்சாலை வி‌ஷயத்தில் அ.தி.மு.க. அரசை விமர்சித்தது ஏன்?

  பதில்:- நான் அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை. மக்களின் நிலையை சொன்னேன். பசுமைச் சாலையை எடுத்துக் கொண்டால் அதற்கு அரசை மட்டும் குறை கூற முடியாது. நிறைய வி‌ஷயம் தெரிந்த அதிகாரிகள், அலுவலர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் இன்னும் மக்களுக்கு சில வி‌ஷயங்கள் விளக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் 35 சதவீதத்துக்கு குறைவாகத் தான் பசுமை இருக்கிறது. இவ்வளவு குறைவாக இருக்கும் போது நாம் பசுமையை உருவாக்காமல், அதிகரிக்காமல், ஏன் அழிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

  இதை அழிப்பதால் என்ன நன்மை கிடைக்க இருக்கிறது என்பதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும். ஒரு வி‌ஷயத்தை இழந்து இன்னொரு வி‌ஷயம் கிடைக்கும்போது அது ஏன் என்பதை விளக்க வேண்டும். அதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் ஏன் அதற்குள் இத்தனை குழப்பம் என்று தெரியவில்லை.

  விவசாயம் செய்யப்படாத நிலங்களில் சாலை போடலாம். விவசாயத்தை அழிக்கும் எதுவும் செய்யக்கூடாது.

  கேள்வி:- நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா?

  பதில்:- நிச்சயம் போட்டியிடுவோம். கையில் எடுத்த பணிகள் மீதம் இருக்கிறது. பொதுக்குழு வரவிருக்கிறது. அதில் பேசி முடிவு எடுப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார். #KadaikuttySingam #Karthi

  Next Story
  ×