search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    சொகுசு கார் விவகாரம்: அமலாபால் 10-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு
    X

    சொகுசு கார் விவகாரம்: அமலாபால் 10-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு

    புதுச்சேரியில் போலியான முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் அமலாபால் 10-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு கேரள போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீசு வழங்கியுள்ளார்கள்.
    பிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை அவர் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பதிவு கட்டணமாக ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ. 1½ லட்சத்தில் பதிவு செய்து விடலாம்.

    இதற்கு புதுச்சேரியில் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, அமலாபால் புதுச்சேரியில் நம்பர் 6, செயின்ட் தெரசா தெரு, திலாஸ்பெட், புதுச்சேரி என்ற முகவரியில் தங்கியிருப்பதாக ஆவணம் தாக்கல் செய்து காரை பதிவு செய்தார்.

    அந்த காரை அவர், கேரளாவில் ஓட்டி வந்தார். பிற மாநிலத்தில் பதிவு செய்த கார்கள், கேரளாவில் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

    அதன்படி, அமலாபாலின் சொகுசு கார் குறித்த விவரங்களை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில், வருகிற 10-ந்தேதிக்குள் சொகுசு கார் குறித்த உண்மை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வாகனத்திற்கான கேரள பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    அமலாபாலின் புதுச்சேரி முகவரியில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இன்னொருவரின் சொகுசு காரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நபரிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அமலாபால் தங்கியிருந்தது தரை தளம். நான், அந்த வீட்டின் முதல் தளத்தில் தங்கியிருந்தேன். எனவே தான் இருவரும் ஒரே முகவரியை கொடுத்ததாக கூறி உள்ளார்.

    இது குறித்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×