தொழில்நுட்பம்

ஐரோப்பிய யூனியனின் அடுத்த அதிரடி - இம்முறை சிக்குவது ஆப்பிள்?

Published On 2018-08-11 05:26 GMT   |   Update On 2018-08-11 05:26 GMT
ஆப்பிள் உள்பட பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் புதிய உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #EuropeanUnion #Apple


ஆப்பிள் நிறுவன ஐபோன்கள், பல்வேறு நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் கேபிள்கள் அந்தந்த நிறுவனத்தின் விருப்பப்படி அவர்களது சாதனங்களில் வழங்கி வருகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் மொபைல்களுக்கு பொதுவான சார்ஜிங் போர்ட்டை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் மொபைல் போன் நிறுவனங்களை பொதுப்படையான மொபைல் சார்ஜிங் போர்ட்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த ஐரோப்பிய யூனியன், இம்முறை நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவு தேங்குவதே ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் புதிய சாதனங்களை பயன்படுத்த துவங்கும் போது பழைய மொபைல் போன் சார்ஜர்களை வீசிவிடுகின்றனர். மேலும் இது நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.



முன்னதாக ஆப்பிள், சாம்சங், நோக்கியா மற்றும் ஹூவாய் என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பொதுப்படையான மொபைல் சார்ஜர்களை உற்பத்தி செய்ய 2009-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

மொபைல் போன் நிறுவனங்கள் இதற்கு முறையாக செவிசாய்க்காததால் ஐரோப்பிய யூனியன் இம்முறை கடின முடிவுகளை எடுக்க இருக்கிறது. முறையான அணுகுமுறைக்கு சரியான தீ்ர்வு கிடைக்காததால், யூனியன் விரைவில் வெவ்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.

தற்சமயம் மொபைல் போன்களில் மிகவும் பிரபலமாகவும், எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக தெரியும் மொபைல் சார்ஜிங் கேபிள் மற்றும் ஸ்லாட்டாக யு.எஸ்.பி. டைப்-சி இருக்கிறது. இதனால் ஐரோப்பிய யூனியன் யு.எஸ்.பி. டைப்-சி ரக சார்ஜர்களை பொதுப்படையாக அறிவித்து, ஐரோப்பிய யூனியனில் விற்பனையாகும் மொபைல்களில் யு.எஸ்.பி. டைப்-சி அவசியம் இருக்க வேண்டும் என உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். பின் ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்குவதை தவிர வேறு வழியிருக்காது. #EuropeanUnion #Apple
Tags:    

Similar News