உலகம்
பாகிஸ்தான் பாராளுமன்றம்

அமளிக்கு மத்தியில் பாகிஸ்தான் பாராளுமன்றம் மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பு

Published On 2022-04-09 07:04 GMT   |   Update On 2022-04-09 10:45 GMT
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று காலை வாக்கெடுப்பு தொடங்கியது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ந்தேதி (இன்று) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ந்தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார்.

இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் பாராளுமன்றத்தை 9-ந்தேதி (இன்று) கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இன்று காலை 10.30 மணிக்கு இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதன்படி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று காலை வாக்கெடுப்பு தொடங்கியது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில் சபாநாயகர் பாராளுமன்றத்தை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்.. அனைத்து தரப்பு மக்களும் போராட்டம் - இந்தியா கொடுத்த கடன் பணமும் தீர்ந்ததால் இலங்கை திணறல்
Tags:    

Similar News