செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரசுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு

Published On 2021-11-14 09:38 GMT   |   Update On 2021-11-14 09:38 GMT
உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் புறக்கணித்தன.

ஜெனீவா:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) மக்களுக்கு செலுத்த சில நாடுகள் ஆலோசித்தன.

இதற்கு உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தது. பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தால் ஏழைநாடுகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் பாதிப்பு அடையும் என்றும் தடுப்பூசி வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்றும் கவலை தெரிவித்தது.

இதனால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் புறக்கணித்தன. அங்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை உலக சுகாதார அமைப்பு மீண்டும் கடுமையாக எதிர்த்துள்ளது. அத்திட்டத்தை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-

உலகம் முழுவதும் சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் பிற அதிக ஆபத்து உள்ளவர்கள் தங்களது முதல் டோசுக்காக இன்னும் காத்திருக்கும் போது ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அர்த்தமற்றது.


ஒவ்வொரு நாளும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளின் முதன்மை அளவை விட 6 மடங்கு அதிகமான பூஸ்டர் தடுப்பூசிகள் உலக அளவில் நிர்வகிக்கப்படுகின்றன. இது ஒரு ஊழல். இது தற்போது நிறுத்தப்பட வேண்டும்.

உலக அளவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பது மூலமோ அதிக தடுப்பூசிகள், பூஸ்டர்களை வெளியிடுவதன் மூலமோ பரவுவதை கட்டுப்படுத்த நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மற்ற கண்டங்களில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செல்வதை உறுதி செய்வது இன்றியமையானது.

எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பது மட்டுமல்ல யாருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பது முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார். 

இதையும் படியுங்கள்...25 பேரன், பேத்திகள், 50 கொள்ளுபேரன், பேத்திகள்: 4 தலைமுறை கண்ட 132 வயது பாட்டி மரணம்

Tags:    

Similar News