செய்திகள்
காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த போர் விமானம் முன்பு தலிபான்கள் நடந்து சென்ற காட்சி.

தலிபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள்: உயிர் பயத்தில் ஆப்கான் மக்கள்

Published On 2021-09-01 02:43 GMT   |   Update On 2021-09-01 02:43 GMT
ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூல் :

தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து வெளியேறியதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஏராளமான ராணுவ தளவாடங்களை அங்கேயே விட்டு விட்டுச் சென்றன. அவை அனைத்தும் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளது.

இந்த ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூரில் அமெரிக்க ராணுவத்தோடு பணிபுரிபவர்களை அடையாளம் காண, அந்த கருவிகள் பயன்படுத்தபட்டு வந்தன. அந்த வகையில் அந்த பயோமெட்ரிக் கருவிகளில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரின் கை ரேகை, கண்விழி ரேகை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் தற்போது தலிபான்கள் வசம் சென்றிருப்பதால் அதில் உள்ள தரவுகள் மூலம் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஆப்கான் மக்களை அவர்கள் அடையாளம் காண கூடும் என அஞ்சப்படுகிறது. அப்படி அவர்கள் தங்களை அடையாளம் கண்டால் தங்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்க படைகளுக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கான் மக்கள் பலரும் பயத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News